சான்சிபார் (Zanzibar; அரபு மொழி: زِنْجِبَار, romanized: Zinjibār) என்பது தான்சானியாவின் ஓர் தன்னாட்சிப் பகுதி ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் தான்சானியாவின் கிழக்குக் கரையில் இருந்து 25-50 கிமீ தொலைவில் உள்ள சான்சிபார் தீவுக்கூட்டத்தைக் குறிக்கும். இது இரண்டு பெரிய தீவுகளான உங்குஜா, பெம்பாத் தீவு ஆகியவற்றையும் வேறு பல சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டுள்ளது. உங்குஜா தீவே பெரும்பாலும் சன்சிபார் என்று அழைக்கப்படுகிறது. சான்சிபாரின் தலைநகரம் 'சான்சிபார் நகரம்' உங்குஜா தீவில் அமைந்துள்ளது. இதன் வரலாற்று மையம் இச்ட்டோன் நகரம் ஓர் உலகப் பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இத்தீவுகள் முன்னர் சன்சிபார் என்ற தனிநாடாக இருந்தது. 1963 திசம்பர் 10 இல் இது ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தானின் கீழ் முடியாட்சி ஆனது. ஆனாலும் 1964 சனவரி 12 இல் மன்னராட்சி கலைக்கப்பட்டு 1964 ஏப்ரல் 26 இல் தங்கனீக்காவுடன் இணைக்கப்பட்டு இரண்டும் தன்சானியா என்றழைக்கப்பட்டன. எனினும் இது தன்சானியாவின் மத்திய ஆட்சியின் கீழ் முழுமையான சுதந்திரம் உள்ள ஒரு மாநிலமாக உள்ளது.
சான்சிபாரின் முக்கிய தொழிற்துறைகள் மசாலாப் பொருள்கள், ராஃபியா பனை, சுற்றுலா ஆகியனவாகும்.[7] குறிப்பாக இத்தீவுகளில் கிராம்பு, சாதிக்காய், இலவங்கப்பட்டை, மிளகு போன்றவை பயிரிடப்படுகின்றன. இதன் காரணமாக, சான்சிபார் தீவுகள் உள்ளுரில் "நறுமணத் தீவுகள்" (Spice Islands) எனவும் அழைக்கப்படுகின்றன. சுற்றுலாத்துறை மிக அண்மையிலேயே இங்கு பிரபலமாகத் தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1985 இல் 19,000 ஆக இருந்து,[8] 2016 இல் 376,000 ஆக அதிகரித்தது.[9] இத்தீவுகளுக்கு ஐந்து துறைமுகங்கள் வழியாக செல்ல முடியும். இங்கு அமானி கருமே பன்னாட்டு வானூர்தி நிலையமும் இங்குள்ளது.[10]
சான்சிபாரின் கடல் சுற்றுச்சூழல் அமைப்பு மீன் பிடித்தல், மற்றும் பாசி வளர்ப்புக்கான பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், அத்துடன் இந்தியப் பெருங்கடலின் மீன் வளத்தின் மீன் நாற்றங்கால்களாக செயல்படும் முக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை இது கொண்டுள்ளது. மேலும், இதன் நில சுற்றுச்சூழல் அமைப்பு அழிந்துபோன சான்சிபார் சிவப்பு கோலோபசு, மற்றும் அழிந்துபோன அல்லது அரிதான சான்சிபார் சிறுத்தை ஆகியவற்றின் வாழ்விடமும் ஆகும்[11][12] சுற்றுலாத் துறை மற்றும் மீன்பிடித்தல் மீதான அழுத்தம் காரணமாகவும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்ட உயர்வு போன்ற பாரிய அச்சுறுத்தல்களாலும் இப்பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் அழிவுகளை எதிர்நோக்குகின்றன.[13]