சமணம்

சமணம் (Sramana) என்பது பண்டைய இந்தியாவில் நிலவிய சில சமயக் கோட்பாடுகளைக் குறிக்கும். சமணம் என்ற சொல் சிரமண (śramaṇa) என்று வடமொழியில் வழங்கப்படுகிறது; சமணம் என்றால் தன்னை வருத்துகை என்று பொருள்[1] பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே சைனத்தை மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என பண்டைய தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பௌத்தம்,[2] அஞ்ஞானம், வேதாந்தம் போன்றவற்றையும் சமணம் என்றே அடையாளப்படுத்தினர்.[3][4]

சமணம் என்ற சொல்லின் பொருள்

திவாகர முனிவரால் பொ.ஊ. 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, சைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.

     சாவகர் அருகர் சமணர் ஆகும்;
     ஆசீ வகரும் அத்தவத் தோரே
                            - திவாகர நிகண்டு

அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் சைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.

     சாவகர் அருகர் சமணர் அமணர்
     ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே
                            - ஐயர் வகை, பிங்கல நிகண்டு

சமணம்-சைனம் பொருட்குழப்பம்

இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,

  1. கண்ணகி சமண நெறியில் உள்ள சாவகத்தையும்
  2. கோவலன் மற்றும் மாதவியின் மகளான மணிமேகலை, இறுதியாக புத்தத்தையும்
  3. கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும், கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தையும் பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது.

இதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள சைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள சைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் சைனத்தின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு சைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.

இந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் சைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,

  1. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டு[5]
  2. பௌத்தர்களின் நெறி நூலான மச்சிமா நிகாயம்
  3. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம்[6]
  4. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சீத்தலைசாத்தனார் இயற்றிய புத்தக் காப்பியம் மணிமேகலை[7]
  5. பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான நீலகேசி
  6. பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பெரியபுராணம்

ஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், ஆசீவக நெறியையும் சைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி சைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,

  1. பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்
  2. பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை

ஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.[8]

சமணமதக் கொள்கைகள்

  • அகிம்சை
  • மனித ஆன்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை
  • கடுந்தவம், பட்டினி போன்றவற்றின் மூலம் நிருவாண நிலையை அடைவது (இறப்பிற்குப் பின் ஆன்மாவானது பெறும் எல்லையற்ற ஆனந்தமே நிர்வாண நிலையாகும்).
  • எதிலும் பற்றில்லாத துறவற வாழ்க்கை வாழ்தல்
  • நமது வாழ்கைக்கேற்ப மறுபிறவி உண்டு
  • மனிதர்கள் அனைவரும் சமம். சாதிகள் கிடையாது
  • முக்கியமான பாவங்கள் என்பவை பொய் கூறுதல், திருடுதல், மது அருந்துதல், தற்பெருமை பேசுதல், பொறாமை, புறங்கூறுதல் போன்றவைகளாகும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சமணமத வளர்ச்சி

மக்களை அதிகம் கவர்ந்த மதங்களில் சமணமும் ஒன்றாகும். ஏனெனில் இம்மதக் கருத்துக்கள் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பின்பற்றுவதற்கும் எளிமையாக இருந்தன. மேலும் இம்மதத்தை அரசர்களும், பேரரசர்களும் பின்பற்றியதால் இந்தியா முழுமையும் இம்மதம் பரவியது. தமிழ்ச் சங்கங்கள் போல சமணமதமும் சமண அவைகள் மூலம் வளர்க்கப்பட்டு, பரப்பப்பட்டது.

சமணமத அழிவிற்கான காரணங்கள்

  1. கொல்லாமைக் கொள்கை
  2. திகம்பரர், சுவேதம்பரர் என்ற பிரிவுகளாக சமணமத உடைவு
  3. பல்லவர், சோழர், பாண்டியர்களின் தாக்குதல்
  4. சாதிப் பிரிவுகளின் தோற்றம்
  5. முடியைப் பிடுங்குதல், பட்டினி போன்ற கடுமையான கட்டுப்பாட்டுக் கொள்கைகள்
  6. சைவ சமயம் மீண்டெழுந்தமை
  7. பிரபலமாகாத சீடர்கள்
  8. புத்த சமய வளர்ச்சி
  9. நாயன்மார், ஆழ்வார்களின் பக்தி நெறி

சமணமதக் கொடைகள்

  1. சமண இலக்கிய நூல்கள் பாலி, பிராகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் உருவாயின.
  2. சமுதாயத்தில் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் குறைய ஆரம்பித்தன.
  3. கல்வி மறுக்கப்பட்டோருக்கு சமணக் கல்வி அளிக்கப்பட்டது.
  4. இராசத்தான் மவுண்டு அபுவில் உள்ள பில்வாரா ஆலயம் கட்டப்பட்டது.
  5. எல்லோரா, பண்டேல்கண்டு ஆகிய இடங்களில் உள்ள குகைக் கோயில்கள் கட்டப்பட்டன.
  6. விலங்குகள் பலியிடப்பட்டது குறைய ஆரம்பித்தது.

சமணர் கழுவேற்றம்

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.[9][10][11]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Monier Monier-Williams, श्रमण zramaNa, Sanskrit-English Dictionary, Oxford University Press, page 1096
  2. Svarghese, Alexander P. 2008. India : History, Religion, Vision And Contribution To The World. p. 259-60.
  3. AL Basham (1951), History and Doctrines of the Ajivikas - a Vanished Indian Religion, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120812048, pages 94-103
  4. James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: N-Z, Volume 2 of The Illustrated Encyclopedia of Hinduism. The Rosen Publishing Group. p. 639. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780823922871.
  5. Glasenapp, Helmuth Von (1999), Jainism, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1376-2, Page. 43
  6. There was no Buddhist king anywhere in India who persecuted the Jains or the Ajivikas or any other sect.(The Ashokavadana, p.xxxviii)
  7. மணிமேகலை, 2 ஊரலர் உற்ற காதை, 27 சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை
  8. பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி - பின்னிணைப்பு 4. ஆசிவக மதம்
  9. "Tamil Literature - M. S. Pillai - Google Books". Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-14.
  10. "தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி". பார்க்கப்பட்ட நாள் 01 May 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. Dundas (1992) p.127

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!