சமணக் கொடி என்பது ஐந்து நிறங்களாலானது. அவையாவன: சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பச்சை மற்றும் கறுப்பு என்பனவாகும். இவ்வைந்து நிறங்களும் பஞ்ச பரமேட்டிகளைக் (ஐந்து உயருயிர்கள்) குறிக்கும். மேலும், இவை அளவில் சிறியனவும் கருத்தளவில் பெரியனவுமான ஐந்து பெரும் உறுதிமொழிகளையும் குறித்து நிற்கின்றன.
மேலோட்டம்
நிறங்கள்
சமணக் கொடியிலுள்ள ஐந்து நிறங்களும் பின்வரும் விளக்கங்களைக் கொண்டுள்ளன:[1]
வெள்ளை - அனைத்து உணர்ச்சிகளையும் (சினம், பற்று, வெறுப்பு) வென்று, தன்னுணர்வு பெறுவதன் மூலம் முற்றிவையும், அகம் சார்ந்த பேரின்பத்தையும் அடைந்த உயிர்களாகிய அருகதர்களைக் குறித்து நிற்கிறது. இந்நிறம் அமைதி அல்லது அகிம்சை (உயிர்க்குறுகண்செய்யாமை) எனும் கொள்கையையும் குறித்து நிற்கிறது.
சிவப்பு - விடுதலை பெற்று, உண்மையை உணர்ந்த உயிர்களாகிய சித்தர்களைக் குறிக்கிறது. இந்நிறம் வாய்மை (சத்தியம்) எனும் கொள்கையையும் குறித்து நிற்கிறது.
மஞ்சள் - திறன்களில் தேர்ச்சி பெற்றோராகிய ஆச்சாரியர்களைக் குறிக்கும். இந்நிறம் கள்ளாமை (அசௌரியம்) எனும் கொள்கையையும் குறித்து நிற்கிறது.[1]
பச்சை - துறவிகளுக்கு நூல்களைக் கற்றுத் தருவோராகிய உபாத்தியாயர்களைக் குறிக்கும். இந்நிறம் கற்பு (பிரம்மச்சரியம்) எனும் கொள்கையையும் குறிக்கும்.[1]
கறுப்பு - சமணத் துறவிகளைக் குறித்து நிற்கும். இந்நிறம் பற்றின்மை (அபரிக்கிரகம்) எனும் கொள்கையையும் குறிக்கும்.
மேலும், 24 தீர்த்தங்கரர்களின் உடல் நிறங்களும் இவ்வைந்து நிறங்களில் ஒன்றாக இருந்ததாகவும் நம்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சந்திரபிரபா மற்றும் புஷ்பதந்தர் ஆகியோர் வெண்ணிறத்தவராயும், முனீஸ்வரநாதர் மற்றும் நேமிநாதர் ஆகியோர் நீலம் அல்லது கருநிறத்தவராயும், பத்மபிரபா மற்றும் வசுபூஜ்ஜியர் ஆகியோர் செந்நிறத்தவராயும், மல்லிநாதர் மற்றும் பார்சுவநாதர் ஆகியோர் பச்சை நிறத்தவராயும், ஏனையோர் மஞ்சள் அல்லது பொன்னிறத்தவராயும் கருதப்படுகின்றனர்.
கொடியின் மையத்திலுள்ள சுவசுத்திக்கா உயிரின் நான்கு இருப்பு நிலைகளைக் குறிக்கிறது. நான்கு இருப்பு நிலைகளும் பின்வருமாறு:
கடவுள்கள் அல்லது சுவர்க்கவாழிகள்
மனிதர்
விலங்குகள்/பறவைகள்/பூச்சிகள்/பயிர்கள்
நரகவாழிகள்
இச்சின்னம், உயிர் மேற்குறிப்பிட்ட எந்த வடிவத்தையும் எடுக்குமெனவும், கர்மாவின் அடிப்படையில் சுவர்க்கவாழிகள் போன்ற உயர்நிலை வடிவத்தையோ அல்லது விலங்குகள் அல்லது நரகவாழிகள் போன்ற தாழ்நிலை வடிவத்தையோ பெற்றுக்கொள்ளுமெனவும் விளக்குகிறது.
ஒவ்வோர் உயிரின் நோக்கமும் இந்நான்கு நிலைகளிலிருந்து விடுபட்டு அருகதர் அல்லது சித்தராக உருவாவதேயாகும்.
மூன்று புள்ளிகள்
சுவசுத்திக்காவின் மேலுள்ள மூன்று புள்ளிகளும், சமணத்தின் ரத்தினத்திரயங்களைக் (மும்மணிகள்) குறித்து நிற்கிறது. அவையாவன:
சமயக தரிசனம் - "சரியான நம்பிக்கை" or "சரியான பார்வை"
சமயக ஞானம் - "சரியான அறிவு"
சமயக சாரித்திரம் - "சரியான நடத்தை"
இவை மூன்றும் சீவன் (உயிரிகள்) தமது கர்மா மற்றும் பிறவிச் சுழலாகிய சம்சாரம் ஆகியவற்றிலிருந்து தானாக விடுபடுவதற்கான சமணத்தின் அடிப்படை வழிமுறைகளின் பகுதியாகும்.[சான்று தேவை]
சித்தசீலம்
மூன்று புள்ளிகளுக்கு மேலுள்ள வளைவு, தூய ஆற்றலினாலான அண்டத்தின் உயர் பகுதியாகிய சித்தசீலத்தைக் குறிக்கும். இது, சுவர்க்கம், புவி மற்றும் நரகம் ஆகியவற்றுக்கு மேலே அமைந்துள்ளது. விடுதலைபெற்ற உயிர்களாகிய அருகதர் மற்ரும் சித்தர்கள் போன்றோர் பேரின்பநிலையடைந்து இச் சித்தசீலத்தில் வாழ்கின்றனர்.
சமணக் கொடிக்கு அளிக்கப்படும் மதிப்பு பஞ்ச-பரமேட்டிகளுக்கு அளிக்கப்படும் மதிப்பாகக் கொள்ளப்படுகிறது. சமணத்தின் அடிப்படையில், ரத்தினத்திரயங்களுக்குக் கீழ்ப்படிந்து, பஞ்ச-பரமேட்டிகளுக்கு மதிப்பளிப்பது, ஒருவரின் நான்கு இருப்புநிலைகளின் துன்பங்களை ஒழித்து முடிவிலாப் பேரின்பத்தின் வீட்டுக்கு (சித்தசீலம்) வழிகாட்டும்.