கூட்டுச்சர்க்கரை

பீட்டா குளுகான் பல்சர்க்கரைடான செல்லுலோசின் முப்பரிமாண அமைப்பு

கூட்டுச்சர்க்கரை (Polysaccharide) அல்லது பல்சர்க்கரைடு என்பவை பல ஒற்றைச்சர்க்கரைகளின் கூட்டிணைப்பால் ஆனவை. இயற்கையில் பல கூட்டுச்சர்க்கரைகள் அதிக அளவில் தோன்றுகின்றன. இவை பலபடி கார்போவைதரேட்டுகள் ஆகும். இவற்றை நீராற்பகுக்கும் போது ஒற்றைச்சர்க்கரைகள் அல்லது கூட்டுச்சர்க்கரைகளைத் தருகின்றன. வடிவத்தில் இவை நேர்கோட்டு வடிவம் தொடங்கி பல கிளைகளைக் கொண்ட சிக்கலான அமைப்பு வரை பலவிதமான அமைப்புகளைப் பெற்றுள்ளன. இவற்றில் பல உடல் கட்டுமான பொருட்களாகிய கைட்டின், செல்லுலோசு எனும் பொருட்களாகவும், அதிக அளவிலான சக்தியை சேமிப்பு உணவாக மாப்பொருள், மற்றும் கிளைக்கோசன் போன்றவற்றையும் சொல்லலாம். உணவுத் துகள்களில் மாப்பொருளானது பெக்டின், அமைலோபெக்டின் மூலக்கூறுகளாக உள்ளது. விலங்குகளின் கல்லீரலிலும் தசைகளிலும் கிளைக்கோசன் எனும் கூட்டுச்சர்க்கரை சேமிப்புணவாக அமைந்துள்ளது. பாலிசாக்கரைடுகள் பெரும்பாலும் பலபடித்தானவையாகவும், மீண்டும் மீண்டும் வரும் அலகில் சிறிய மாற்றங்களைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. கட்டமைப்பைப் பொறுத்து, இந்த பெருமூலக்கூறுகள் தாங்கள் கட்டமைக்கப்பட்டுள்ள ஒற்றைச்சர்க்கரைடுகளின் பண்புகளிலிருந்து வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கலாம். அவைகள் படிக வடிவமற்றவையாகவும், நீரில் கரையாத தன்மையைப் பெற்றவையாகவும் இருக்கலாம்.[1]

பாலிசாக்கரைடுகளில் உள்ள அனைத்து ஒற்றைசர்க்கரைகளும் ஒரே வகையாகும் போது, பாலிசாக்கரைடு ஓரினபல்சக்கரைட்டு அல்லது ஓரினகிளைக்கான் என அழைக்கப்படுகிறது, ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றைசர்க்கரைகள் இருந்தால் அவை பல்லினபல்சக்கரைட்டு அல்லது பல்லினகிளைக்கான் எனவும் அழைக்கப்படுகிறது..[2][3] இயற்கை சர்க்கரைடுகள், பெரும்பாலும், (CH2O)n (n ≥3) என்ற பொதுவான வாய்ப்பாட்டைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரைகள் என்றழைக்கப்படும் எளிய கார்போவைதரேட்டுகளாக அமைகின்றன. ஒற்றைச் சர்க்கரைடுகளின் எடுத்துக்காட்டுகளாக, குளுக்கோசு, புருக்டோசு, மற்றும் கிளிசெரால்டிகைடு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.[4] பல்சர்க்கரைடுகள், பின்வரும் பொது வாய்ப்பாட்டினைக் கொண்டுள்ளன. Cx(H2O)y x ஆனது 200 முதல் 2500 வரையிலான எண்ணாக இருக்கலாம். பலபடியின் சட்டகத்தில் மீண்டும், மீண்டும் வரும் அலகானது ஆறு கரியணுக்களைக் கொண்ட ஒற்றைசர்க்கரைடுகளாக இருந்தால், பெரும்பாலும் நிகழ்வதைப் போல, பொது வாய்ப்பாடானது, (C6H10O5)n, என்பதாக எளிமையானதாகிறது.  (n மதிப்பானது 40≤n≤3000 என்பதாக இருக்குமெனில்)

பல்சர்க்கரைடுகள் என்பவை பத்துக்கும் மேற்பட்ட ஒற்றைச்சர்க்கரை அலகுகளையும், ஓலிகோசர்க்கரைடுகள் என்பவை மூன்று முதல் பத்து வரையிலான ஒற்றைச்சர்க்கரைடுகளையும் கொண்டதாக இருக்கும். பல்சர்க்கரைடுகள் ஒரு முக்கிய வகை உயிரிப்பலபடிகளாகும். அவை உயிரிகளில் கட்டமைப்பு அல்லது சேமிப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்றன. குளுக்கோசின் பலபடியான மாப்பொருள் ஒரு சேமிப்பு பல்சர்க்கரைடாகத் தாவரங்களில் பயன்படுகிறது. இது அமைலோசு மற்றும் பக்கச்சங்கிலிகளுடனான அமைலோபெக்டின் ஆகிய இரண்டு வகையிலும் காணப்படுகிறது. விலங்குகளில், அமைப்புரீதியாக ஒத்த குளுக்கோசின் பலபடியானது அதிக அடர்த்தியாக பக்கச்சங்கிலிகளைக் கொண்ட கிளைக்கோசன்களாக காணப்படுகிறது. சில நேரங்களில், "விலங்கு மாப்பொருள்" எனவும் அழைக்கப்படுகிறது. கிளைக்கோசனின் பண்புகள் அதனை மிக விரைவாக வளர்சிதைமாற்றத்திற்கு அனுமதிப்பதால், இது இயங்கும் விலங்குகளின் செயல்மிகு வாழ்க்கைக்கு உகந்ததாக உள்ளது. செல்லுலோசு மற்றும் கைட்டின் கட்டமைப்பு பல்சர்க்கரைடுகளுக்கான உதாரணங்களாக உள்ளன. செல்லுலோசானது தாவரங்கள் மற்றும் இதர உயிரினங்களில் செல் சுவர்களில் பயன்பகின்றன. மேலும், பூமியில் மிக அதிகமாகக் கிடைக்கும் கரிம மூலக்கூறாகவும் செல்லுலோசு அறியப்படுகிறது.[5] செல்லுலோசானது, காகிதம் மற்றும் துணித் தொழிற்சாலைகளில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினைக் கொண்டுள்ளது. மேலும், ரேயான், செல்லுலோசு அசிட்டேட்டு, செல்லுலாய்டு மற்றும் நைட்ரோசெல்லுலோசு ஆகியவை தயாரிப்பதற்கான தொடக்க நிலை மூலப்பொருளாகப் பயன்படுகிறது.

கைட்டினானது ஒத்த அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், நைட்ரசனைக் கொண்ட பக்கத்தொடர்களைக் கொண்டுள்ளதால் இதன் வலிமை அதிகமாகிறது. இது கணுக்காலிகளின் வெளிப்புறக்கூட்டிலும், சில பூஞ்சை வகைகளின் செல் சுவரிலும் காணப்படுகிறது. இதுவும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் நூலிழைகள் தயாரிப்பு உள்ளிட்ட பலவிதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

செயல்பாடுகள்

அமைப்பு

உணவூட்ட பல்சர்க்கரைடுகள் பொதுவான ஆற்றல் மூலங்களாக உள்ளன. பல உயிரினங்கள் மாப்பொருளை எளிதாக குளுக்கோசாக சிதைக்க முடியும். இருப்பினும், பெரும்பான்மையான உயிரினங்களால் செல்லுலோஸ் அல்லது கைட்டின் மற்றும் அராபினாக்சைலான்கள் போன்ற பல்சர்க்கரைடுகளை வளர்சிதைமாற்றத்திற்குள்ளாக்க முடிவதில்லை. இத்தகைய கார்போவைதரேட்டு வகைகள் சில பாக்டீரியாக்கள் மற்றும் புரோடிஸ்டுகளால் சிதைக்கப்படலாம்.  அசைபோடும் விலங்கினங்கள் மற்றும் கறையான்கள் செல்லுலோசை சிதைக்கக்கூடிய நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துகின்றன.

மேற்கோள்கள்

  1. Varki A, Cummings R, Esko J, Freeze H, Stanley P, Bertozzi C, Hart G, Etzler M (1999). Essentials of glycobiology. Cold Spring Harbor Laboratory Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87969-560-9. {{cite book}}: |work= ignored (help)
  2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "homopolysaccharide (homoglycan)". Compendium of Chemical Terminology Internet edition.
  3. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "heteropolysaccharide (heteroglycan)". Compendium of Chemical Terminology Internet edition.
  4. Matthews, C. E.; K. E. Van Holde; K. G. Ahern (1999) Biochemistry. 3rd edition. Benjamin Cummings. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8053-3066-6
  5. N.A.Campbell (1996) Biology (4th edition). Benjamin Cummings NY. p.23 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8053-1957-3

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!