கலோல் (Kalol), இந்தியாவின் மேற்கில் உள்ள குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள கலோல் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது சபர்மதி ஆற்றின் கரையில் உள்ளது. கலோல் நகரம் அகமதாபாத்திற்கும், மெக்சனா நகரஙகளுக்கு இடையே, காந்திநகருக்கு மேற்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தில் உரம் மற்றும் பிளாஸ்டிக் நீர்த் தொட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கலோல் நகரத்தின் மக்கள் தொகை 1,34,426 ஆகும். அதில் ஆண்கள் 70,995 மற்றும் பெண்கள் 63,431 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 893 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15,446 (11%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 18,459 மற்றும் 1,872 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 86.33%, இசுலாமியர் 11.83%, சமணர்கள் 1.15%, சீக்கியர்கள் 0.25%, கிறித்தவர்கள் 0.26 மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[1]
கலோல் நகரத்தின் கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 49 °C ஆகவும்; குளிர்கால குறைந்தபட்ச வெப்பம் 12 °C ஆகவும் உள்ளது. இதன் சராசரி மழைப்பொழிவு 803.4 மிமீ ஆகும்.பருவ மழை சூன் மாத நடுவில் துவங்கி, செப்டம்பர் மாதம் நடுவில் முடிகிறது.
கலோல் நகரம் காந்திநகர், அகமதாபாத் மற்றும் மெக்சனா நகரஙகளுக்கு இடையே அமைந்துள்ளது.
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் கலோல் நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
கலோல் சந்திப்பு தொடருந்து நிலையம், அகமதாபாத், ஜெய்ப்பூர், மார்வார், ஜோத்பூர், அபு மலை, புது தில்லி போன்ற வட இந்திய நகரங்களை இணைக்கிறது.
மாநில நெடுஞ்சாலை எண் 41, கலோல் நகரத்தை அகமதாபாத், மெக்சனா, பாலன்பூர், அபு சாலை போன்ற நகரஙகளுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 8A, கலோல் நகரத்தை சூரத், மும்பை மற்றும் சண்டிகர் நகரங்களுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 8C, கலோல் நகரத்தை அகமதாபாத், உதய்ப்பூர், புது தில்லி மற்றும் சண்டிகர் நகரங்களுடன் இணைக்கிறது.
கலோல் நகரத்தின் புறநகரில் அமைந்த சத்திரால் எனும் பகுதியில் இப்கோ உரத்தொழிற்சாலை, சிண்டெக்ஸ் எனும் பிளாஸ்டிக் நீர்த்தொட்டி உற்பத்தித் தொழிற்சாலை, ஜவுளி ஆலைகள், சாயப்பவுடர் தொழிற்சாலைகள் உள்ளது.