இந்திய அரசின் வரவு செலவுத் திட்டம் (Union Budget of India), அல்லது இந்திய அரசியலமைப்பின் சட்டக்கூறு 112இல் குறிப்பிடப்படும் ஆண்டு நிதிநிலை அறிக்கை[1] ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதத்தின் கடைசி வேலைநாளில் நிதி அமைச்சரால்இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இந்தியக் குடியரசின் வருடாந்திர வரவு செலவுத் திட்டமாகும். இந்திய அரசின் நிதியாண்டு துவங்கும் ஏப்ரல் முதலாம் தேதிக்கு முன்னர் இத்திட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் பின்னரே அரசு எந்தவொரு செலவையும் செய்ய இயலும்.
முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் பிறர் எவரையும்விட மிகக் கூடுதலாக எட்டு முறை நிதிநிலை அறிக்கையை அளித்துள்ளார்.[2]
காலவரிசை
தாராளமயமாக்கலுக்கு முன்னர்
இந்தியா விடுதலை பெற்றபின்னர் முதல் நிதிநிலை அறிக்கையை நவம்பர் 26, 1947 ஆம் ஆண்டில் வழங்கியப் பெருமை தமிழரான ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களுக்கு உரியது.[2]
1959–60 முதல் 1963–64 வரையில், 1962–63 ஆண்டுக்கான இடைக்கால அறிக்கை உட்பட, நிதிநிலை அறிக்கைகளை மொரார்ஜி தேசாய் வெளியிட்டு வந்தார்.[2] 1964 மற்றும் 1968ஆம் ஆண்டுகளில் பெப்ரவரி 29 அன்று தனது பிறந்தநாளில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையை வழங்கிய ஒரே நிதி அமைச்சராக விளங்கினார்.[3] தேசாய் ஐந்து வருடாந்திர திட்டங்களையும் இரு இடைக்காலத் திட்டங்களையும் மூன்று இறுதித் திட்டங்களையும் வழங்கியுள்ளார்.[2]
தேசாயின் பதவி விலகலை அடுத்து, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி தானே நிதித்துறைப் பொறுப்பையும் மேற்கொண்டபோது முதல் பெண் நிதி அமைச்சராக அமைந்தார்.[2]
வி. பி. சிங்கின் பதவி விலகலை அடுத்து 1987–89 ஆண்டுக்கான அறிக்கையை ராஜீவ் காந்தி வழங்கினார். இதன்மூலம் நிதிநிலை அறிக்கையை வழங்கிய , தனது அன்னை மற்றும் தாத்தாவினை அடுத்து, மூன்றாவது பிரதமராக விளங்கினார்.[2]
என்.டி.திவாரி 1988–89, எஸ். பி. சவான் 1989–90, மது தண்டவதே 1990–91 ஆண்டு அறிக்கைகளை வெளியிட்டனர்.[2]
தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதால் நிதி அமைச்சர் பொறுப்பேற்ற மன்மோகன் சிங்1991-92ஆம் ஆண்டிற்கான இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தார்.[2] அரசியல் காரணங்களால் மே 1991ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று இந்திய தேசிய காங்கிரசு மீண்டும் ஆட்சியில் அமர, மன்மோகன்சிங் 1991–92 ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.[2]
தாராளமயமாக்கலுக்குப் பின்னர்
மன்மோகன் சிங் தனது அடுத்த வரவு செலவுத்திட்டம் 1992–93 முதல் இந்தியப் பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்துவிட்டார்.[4] உச்சபட்ச சுங்கத் தீர்வையை 300+ விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாகக் குறைத்தார். முதலீட்டுப் பொருள்களுக்கும் திட்ட நிதியங்களுக்கும் சலுகைகள் அளித்தார்.[2]
1996 மக்களவைத் தேர்தல்களில் வென்று காங்கிரசல்லாத ஆட்சி பொறுப்பேற்றது. எனவே 1996–97 ஆண்டுக்கான இறுதி வரவுசெலவுத் திட்டம் தமிழ் மாநில காங்கிரசின்ப.சிதம்பரத்தால் வழங்கப்பட்டது.[2]
ஐ. கே. குஜரால் தலமையேற்ற அரசின் கவிழ்தலை கருத்தில்கொண்டு, அரசியலமைப்புச் சிக்கலைத் தவிர்க்க, ஓர் சிறப்பு நாடாளுமன்றத் தொடர் கூட்டப்பட்டு 197-98ஆம் ஆண்டுக்கான சிதம்பரத்தின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது எந்தவொரு விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டது.[2]
மார்ச்சு 1998 பொதுத் தேர்தல்களை அடுத்து நடுவண் அரசமைத்த பாரதிய ஜனதா கட்சியின்யஷ்வந்த் சின்கா 1998–99 ஆண்டுக்கான இடைக்கால மற்றும் இறுதி வரவு செலவுத் திட்டங்களை வழங்கினார்.[2]
1999 தேர்தல்களில் மீண்டும் வென்று சின்கா நிதி அமைச்சராக அடுத்த, 1999–2000 முதல் 2002–2003 வரை, நான்கு வரவு செலவுத் திட்டங்களை வழங்கினார்.[2] தேர்தல்கள் காரணமாக இடைக்கால அறிக்கையை மே 2004ஆம் ஆண்டு ஜஸ்வந்த் சிங் அளித்தார்..[2]
வரவு செலவுத் திட்ட அம்சங்கள்
செலவுகள்
செலவுகள் இரு வகைப்படும். ஒன்று,‘திட்டச்செலவுகள்’ மற்றொன்று ‘திட்டம் சாராத செலவுகள்’.விவசாய உற்பத்தியைப் பெருக்குதல் தொழிற்சாலை உற்பத்தியைப் பெருக்குதல், சாலை, ரயில் போக்குவரத்தை மேம்படுத்துதல், புதிதாக அமைத்தல் , கல்வி, சுகாதாரம் பேணுதல் போன்ற அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கான செலவுகள் ‘திட்டச்செலவுகள்’ ஆகும்.மற்றொன்று மேற்கூறிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிர்வாகச்செலவுகள்- அதாவது, குடியரசுத் தலைவர் முதல், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் கடைக்கோடி ஊழியர் வரை அளிக்கப்படும் சம்பளம், படிகள், ஓய்வூதியம் போன்றவையும், உணவு, உரம் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் மானியங்களும் ‘திட்டம் சாராத செலவுகள்’ ஆகும்.[5]
வருவாய் திரட்டும் வழிமுறைகள்
வரிகள்
அரசு முதலீடு செய்த நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் ஈவுத்தொகை
உள்நாட்டில் திரட்டப்படும் கடன்
அந்நியமுதலீடு, பிற நாடுகளிடம் இருந்து கடனாகவோ, உதவியாகவோ பெறும் தொகை
வழங்கப்படும் நேரம்
2000 ஆண்டுவரை ஒன்றிய வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி மாதத்தின் கடைசி வேலைநாளன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டு வந்தது. இது பிரித்தானியர்களின் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டது. பிரித்தானிய நாடாளுமன்றம் மதிய நேரத்தில் ஒப்புமை அளித்தபிறகு ஐந்தரை மணி வேறுபாட்டால் இந்தியாவில் மாலை வேளையில் வெளியானது.
பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தான் இந்திய அரசின் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுவந்து. இந்த காலனித்துவ கால பாரம்பரியத்தில் இருந்து விலகி 2017 பிப்ரவரி 1ஆம் தேதி இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை அருண் ஜெட்லி தாக்கல் செய்யத் தொடங்கினார்[7]. அன்று முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி இந்திய அரசின் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.
அல்வா திருவிழா
அல்வா திருவிழா (halwa ceremony) என்பது ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் நடுவண் அரசின் நிதியறிக்கை அச்சிடும் முன் நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும்.[8] நிதி அமைச்சகம் வரவுசெலவுத் திட்டத்தினை அச்சிற்கு அனுப்பவேண்டும். அச்சிடும் பணியில் இருப்பவர்கள் அனைவரும் அது நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் வரையில் வெளியுலகத் தொடர்பு ஏதுமில்லாது இருப்பர். அவர்கள் அனைவரும் அச்சக வளாகத்திலேயே இருக்கவேண்டும். தங்கள் குடும்பத்தினரைக் கூட எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாது. நிதியமைச்சர் அத்தனைப் பணியாளருக்கும் இனிப்பு, அல்வா கொடுத்து இந்த தனிமைப் படுத்தும் நிகழ்வை பொறுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரும் நிகழ்வாகவும் எல்லாம் இனிதாக நடைபெற விருப்பம் தெரிவிக்கும் நிகழ்வாகவும் இது அமைகிறது.