அரியலூர் மாவட்டம் (Ariyalur district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அரியலூர் ஆகும். இந்த மாவட்டம் 1,940.00 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
சோழ மன்னர்களில் ஒருவரான, இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம், இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாகும். பிரம்மாண்டமான முதுகெலும்பில்லாத உயிரினங்கள் மற்றும் தாடை மீன்களின் பல புதைபடிவங்கள், டைனோசர் முட்டைகள் போன்றவை இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[1][2][3] புதைபடிவங்களை பாதுகாப்பதற்கு கீழப்பழூரில் ஒரு ஆன்-சைட் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில், சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது.
வரலாறு
சனவரி 1, 2001-இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007இல் உருவாக்கப்பட்டது.[4]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1,940 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள அரியலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 754,894 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 374,703 ஆகவும் பெண்கள் 380,191 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 389 பேர் என்ற வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 71.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.23% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 61.74% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 81,187 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.54% ஆக உள்ளது.[11][12]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 708,397 (93.84 %) ஆகவும், இசுலாமிய மக்கள்தொகை 7,942 (1.05 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 37,403 (4.95 %) ஆகவும், சீக்கிய மக்கள்தொகை 104 (0.01 %) ஆகவும், பௌத்த சமய மக்கள்தொகை 88 (0.01 %) ஆகவும், சைன சமய மக்கள்தொகை 65 (0.01 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 42 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 853 (0.11 %) ஆகவும் உள்ளது.
இங்கு சுண்ணாம்புக் கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது.
சிமெண்ட் தவிர நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிக அளவில் படிமங்களாகக் கிடைக்கிறது, இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அனல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
இம்மாவட்டத்தினுடைய பொருளாதாரத்தில் வேளாண்மைத் தொழில், முக்கிய பங்காக தொடர்ந்து இருந்து வருகிறது. இம்மாவட்டத்தின் எழுபது சதவிகித மக்கள் வேளாண்மை அல்லது அது சார்ந்தத் தொழில்களைச் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஏழு பெரிய வேளாண் காலநிலை மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டம் மண்டல எண் -V எனக் குறியீடு தரப்பட்டுள்ளது. அதாவது காவிரி டெல்டா மண்டலம் (CDZ). வெப்பநிலை அதிகபட்சமாக 38℃-லிருந்து குறைந்தபட்சமாக 24℃ வரை நிலவி வருகிறது.
பரப்பளவு
இம்மாவட்டத்தின் மொத்த பரப்பு, 1,949.31 சதுர கிலோ மீட்டராகும். அதில் மொத்த பயிர் பரப்பானது 1.118 இலட்சம் எக்டேராகும். சராசரி வருடாந்திர மழை அளவானது 954 மி.மீ ஆகும். இந்நிலப்பரப்பில் 45136 எக்டேர் நீர் பாசன வசதிப் பெறுகிறது. காவிரியின் கிளைகள் வழியாக 10389 எக்டேர் திருமானூர், தா. பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரம் பாசனம் பெறுகின்றது. மீதமுள்ள 66738 எக்டேர், மழை நீரை சார்ந்த மானாவாரி (மழை நீரை மட்டுமே சார்ந்த வேளாண்மை) பகுதிகளாகும்.
மண் வகைமை
மண்ணின் இயல்பு பெரும்பாலும் களிமண் பாங்காகவும், சிவப்பு நிறமானை மேற்பகுதியும், மஞ்சள் நிறமான அடிப்பகுதியும் காணப்படுகின்றன.
இதன் வேதியியல் தன்மைகளான இரும்புச் சத்து அதிகமும், சுண்ணாம்புக் கல்லும் கலந்துள்ள, செந்நிற களிமண் (Ferruginous red loam) உள்ள நிலத்தின் தன்மை காணப்படுகின்றன. மண்ணின் நடு ஆழத்தில், சிறந்த வடிகால் வசதியும், உப்பும், காரத் தன்மையும் இல்லாமல், காரகாடித்தன்மைச் சுட்டெண் 6.5-லிருந்து 8 வரை காணப்படுகின்றன. அங்ககத் தன்மைகளான, தழைச்சத்துக்களும், மணிச்சத்துக்களும் அளவு குறைந்து இருக்கின்றன. ஆனால், சாம்பல் சத்தும், சுண்ணாம்பும் அளவு அதிகமாகவே காணப்படுகின்றன. செந்துறை, தா. பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் செம்மையான சரளைமண் காணப்படுகிறது. திருமானூரிலும், அரியலூர் வட்டாரங்களிலும், கரிசல் மண் அதிகமாகக் காணப்படுகின்றன.
மண் வளத்தை உயிர் உரங்கள் கொண்டு மேம்படுத்துதல், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, விதை கிராமத் திட்டம், மண்வள அட்டை இயக்கம், தேசிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனை இயக்கம், பசுந்தாள் உரம், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு பருத்திச் சாகுபடி இயக்கம், தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் தொழில் நுட்பங்கள் போன்றத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மாநில அரசின் பங்கு
அரியலூர் மாவட்டத்தில் பலவகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதால் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் தேவையைப் பூர்த்தி செய்தல், ஊரக மக்கள் தொகைக்கு வேலை வாய்ப்பினை அளித்தல் ஆகியவையே வேளாண்மைத் துறையின் முக்கிய கொள்கையாகவும், கோட்பாடுகளாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. வேளாண் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல், அதற்குரியத் தொழில் நுட்பங்களை கண்டறிதல், அதனை பரப்புதல் ஆகிய செயல் திட்டங்களினால் வேளாண்மை துறை செயற்திட்டத்துடன் செயற்படுகிறது.
நடுவண் அரசின் பங்கு
இருப்பினும், நடுவண் அரசின் திட்டங்களான, பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் வழியே சொந்த கிராமத்தில் வசிக்காத விவசாயிகளின் பட்டியல்களை காணும் போது, அரியலூர் உள்வட்டம், ஏலாக்குறிச்சி உள்வட்டம், கீழப்பழூர் உள்வட்டம், நாகமங்கலம் உள்வட்டம், திருமானூர் உள்வட்டம், செந்துறை உள்வட்டம், பொன்பரப்பி உள்வட்டம் R.S.மாத்தூர் உள்வட்டம்
உடையார்பாளையம் உள்வட்டம், ஜெயங்கொண்டம் உள்வட்டம், குண்டவெளி உள்வட்டம், சுத்தமல்லி உள்வட்டம், தா.பழூர் உள்வட்டம், ஆண்டிமடம் உள்வட்டம், குவாகம் உள்வட்டம், பல்வேறு வட்டங்களில் குடிபெயர்வு நடைபெற்றுள்ளதை அறிய இயலும்.[14]
மேலும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட தகுதியற்றோர் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அரியலூர் உள்வட்டம்,[15] ஏலாக்குறிச்சி உள்வட்டம், கீழப்பழூர் உள்வட்டம், நாகமங்கலம் உள்வட்டம்,திருமானூர் உள்வட்டம், செந்துறை உள்வட்டம், பொன்பரப்பி உள்வட்டம், R.S. மாத்தூர் உள்வட்டம், உடையார்பாளையம் உள்வட்டம், ஜெயங்கொண்டம் உள்வட்டம், குண்டவெளி உள்வட்டம், சுத்தமல்லி உள்வட்டம், தா.பழூர் உள்வட்டம், ஆண்டிமடம் உள்வட்டம், குவாகம் உள்வட்டம் ஆகிய அரியலூர் உள்வட்டங்களுக்கான தனித்தனி பட்டியல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து வசதிகள்
இருப்புப்பாதை
அரியலூர் இரயில் நிலையமானது அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பெருமளவில் பயணிக்கின்றனர். அரியலூர் இரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளது.
திருச்சி- சென்னை கார்ட்லைன் உள்ளது. இந்நிலையத்தின் வழியாக திருச்சி- சென்னை எழும்பூர், திருச்சி- மங்களூரு செண்ட்ரல், காரைக்குடி- சென்னை எழும்பூர், சென்னை எழும்பூர்- இராமேஸ்வரம், சென்னை எழும்பூர்- திருநெல்வேலி, சென்னை எழும்பூர்- தூத்துக்குடி, மங்களூரு செண்ட்ரல்- புதுச்சேரி, விழுப்புரம்- திண்டுக்கல், விழுப்புரம்- திருச்சி, திருச்சி- ஹவுரா, நாகர்கோவில்- மும்பை CSMT ஆகிய வழித்தடங்கள் அரியலூர் இரயில் நிலையங்களில் பிரதான வழித்தடங்களாகும்.
சாலை
தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சாலை மூலம் சென்று வர அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தொடருந்து மூலம் சென்று வர அரியலூர் தொடருந்து நிலையம் முக்கிய சந்திப்பாக இருக்கிறது. மேலும் அரியலூர் மாவட்டத்தின் தொடருந்து நிலையங்களான சில்லக்குடி, வெள்ளூர், ஒட்டக்கோவில், செந்துறை, ஆர்.எஸ்.மாத்தூர், ஈச்சங்காடு மற்றும் ஈச்சங்காடு (ஹால்ட்) வரை உள்ளது.
சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது. அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. கங்கைகொண்ட சோழபுரம் கோயில் தஞ்சாவூர் கோயிலை விட சிறியது, ஆனால் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் தென்னிந்தியாவின், மிகப்பெரிய சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் தஞ்சாவூரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் (43 மைல்) தொலைவில் உள்ளது.
வேட்டக்குடி கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. இந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இச்சரணாலயத்தில் உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள் நீர்ப்பறவைகளாகும். அருகிவரும் பட்டைதலை வாத்து, இந்த ஏரியின் முக்கிய வருகையாளர்களுள் ஒன்றாகும்.[16]
கல்லூரிகள்
மருத்துவக்கல்லூரி
அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை - அரியலூர்
கலை அறிவியல் கல்லூரிகள்
அரசுக் கலைக் கல்லூரி - அரியலூர்
அரசுக் கலைக் கல்லூரி - ஜெயங்கொண்டம்
விநாயகா கலை அறிவியல் மகளிர் கல்லூரி
மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரி
மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பொறியியல் கல்லூரிகள்
மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - அரியலூர் வளாகம்