முதலாம் யசீத் (Yazid I, அரபி: يزيد بن معاوية بن أبي سفيان), முதலாம் முஆவியாவின் மகனும், உமைய்யா கலீபகத்தின் இரண்டாவது கலீபாவும் ஆவார். யூலை 23, 645 இல் பிறந்தார். தாயார் பெயர் மைசூன். இவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பின் 680ல் அடுத்த கலீபாவாகத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இவரின் தலைமையை ஏற்க மறுத்த கலீபா அலீயின் மகனும், முகம்மது நபியின் பேரனுமாகிய உசேனை கொலை செய்ய உத்திரவிட்டார். இதன்படி கர்பலா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் உசேன் கொல்லப்பட்டார். இசுலாத்தின் சன்னி மற்றும் சியா பிரிவின் காரணிகளில் இந்தப் போர் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். மொத்தம் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த யாசித், 683ல் இறந்தார். இறக்கும் பொழுது யாசித்தின் வயது 38 மட்டுமே.
யாசித்தின் ஆட்சியில் இசுலாமியப் படைகளுக்கு பல பின்னடைவுகள் ஏற்பட்டன. பெர்பர்கள் எனப்படும் பழங்குடி சேனைகளிடம், வட ஆப்பிரிக்கப் பகுதிகளை இவரது ராணுவம் இழந்தது. இதன் மூலம் மத்திய தரைகடல் பகுதில் நிலவி வந்த இசுலாமிய மேலாதிக்கத் தனமும் கட்டுப்படுத்தப் பட்டது. தன்னை எதிர்த்த அப்துல்லா இப்னு சுபைர் என்பவரைச் சிறை பிடிக்க இவர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது புனித காபா சிறிது சேதமடைந்தது. இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக இவர் இசுலாமியர்களின் பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகினார்.
இவரின் மறைவுக்குப் பின்பு, இவரது மகன் இரண்டாம் முஆவியா அடுத்த கலீபாவாக ஆட்சி பொறுப்பேற்றார்.