முதலாம் முஆவியா |
---|
ஆட்சி | 661 – 680 |
---|
பின்வந்தவர் | முதலாம் யசீத் |
---|
முழுப்பெயர் |
---|
முஆவியா இப்னு அபூ சுபியான் |
|
அரச குலம் | உமய்யா கலீபகம் |
---|
தந்தை | அபூ சுபியான் |
---|
தாய் | ஹிந்த் |
---|
முதலாம் முஆவியா (Muawiyah I அரபி:معاوية بن أبي سفيان) முகம்மது நபியின் தோழரும் உமைய்யா கலீபகத்தின் முதல் கலீபாவும் ஆவார். கி.பி 602ம் மக்கா நகரில் பிறந்தார். இவரின் தந்தை அபூ சுபியான். தாய் ஹிந்த். ஆரம்ப காலங்களில் தனது தந்தை அபூ சுபியானுடன் சேர்ந்து முகம்மது நபியை பலமாக எதிர்த்தவர். 630ல் ஏற்பட்ட மக்கா வெற்றிக்குப் பின் இசுலாத்தை ஏற்றுக்கொண்டார். முகம்மது நபியின் மறைவுக்குப் பின், கலீபா அபூபக்கரால் பைசாந்திய மற்றும் சிரிய அரசுகளுக்கு எதிராக அனுப்பப்பட்ட இராணுவத்தில் அங்கம் வகித்தார். பின்பு கி.பி 640ல் அன்றைய கலீபா உமரால், சிரியா பகுதியின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். இவரின் ஆளுகையின் கீழ் பலம் வாய்ந்த சிரிய இராணுவம் உருவாக்கப் பட்டது. அரேபியா மீதான பைசாந்திய பேரரசின் ஆக்கிரமிப்புகளை தடுப்பதில் இவரின் இராணுவம் முக்கிய பங்காற்றியது.
கி.பி 656ல் நடைபெற்ற மூன்றாம் கலீபா உதுமானின் படுகொலையை தொடர்ந்து, நான்காம் கலீபா அலீயின் தலைமையை ஏற்க மறுத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற சிப்பீன் போரின் முடிவில், கலீபா அலீயுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். இதன் படி, தான் தொடர்ந்து சிரியாவின் ஆளுனராக இருப்பதோடு, அலீயின் தலைமையை ஏற்பதாகவும் உறுதியளித்தார். இதன் பிறகு 661ல் நடைபெற்ற கலீபா அலீயின் படுகொலைக்குப் பின் தன்னையே இசுலாமிய பேரரசின் கலீபாவாக அறிவித்துக் கொண்டார். அன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அலீயின் மகனாகிய ஹசனும் இதனை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் முஆவியாவின் இறப்புக்குப் பின் தானோ அல்லது தனது சகோதரனோ மட்டுமே அடுத்த கலீபாவாக வேண்டும் என்ற ஹசனின் நிபந்தனையை முஆவியாவும் ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு இவர் அமீருல் முஃமினீன் (நம்பிக்கை கொண்டவர்களின் தலைவர்) என அழைக்கப்பட்டார். இறுதியில் 680ல் சிரியாவில் இறந்தார்.
இவரின் ஆட்சியில் மத நல்லிணக்கம் சிறந்த முறையில் பேணப்பட்டது. சிரியாவில் அதிகமாக இருந்த கிருத்துவர்களின் நலமும், வேலை வாய்ப்பும் இவரின் ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. மேலும் திமிஷ்கு நகரம் இவரின் ஆட்சியிலேயே ரோம் நகருக்கு இணையாக அழகூட்டப்பட்டது.