விஜயநகரப் பேரரசின் ஆறாவது பேரரசனான முதலாம் தேவ ராயன், பேரரசன் இரண்டாம் ஹரிஹர ராயனின் மகனாவான். தந்தைக்குப் பின் ஒருவர்பின் ஒருவராக முடிசூட்டிக்கொண்ட இவனது சகோதரர் இருவரும் சிலமாதங்களே பதவியில் இருக்க முடிந்தது. இதனால் மூன்றாவதாக முதலாம் தேவ ராயன் அரசனானான். முன்னவர்களைப் போலன்றி இவன் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். [1]
பாரசீகத்தவனான, ஃபெரிஷ்டா என்பவன், முதலாம் தேவராயன் பற்றி எழுதியுள்ளான். இதன்படி, தேவ ராயன், ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள முடுகல் என்னும் இடத்தைச் சேர்ந்த அழகிய பெண்ணொருத்தியுடன் காதல் வயப்பட்டதாகவும், இத் தொடர்பு பஹ்மானி சுல்தான்களுடன் போருக்கு வித்திட்டு இறுதியில் தேவ ராயன் தோற்கடிக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இக் கதைக்கு வரலாற்றாளர்கள் அதிகம் மதிப்புக் கொடுப்பதில்லை.
தேவ ராயனின் ஆட்சிக்காலம் முழுவதும், தொடர்ச்சியான போர்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவனானான். இப் போர்கள் தெலங்கானாவின் வேளமாக்களுடனும், குல்பர்காவின் (Gulbarga)பஹ்மானி சுல்தானுடனும், கொண்டவிடு ரெட்டிகளுடனும், கலிங்கத்தின் கஜபதிகளுடனும் நடைபெற்றன. எப்படியாயினும் பேரரசின் பரந்த நிலப்பரப்பைக் காத்துக்கொள்ளும் திறமை தேவ ராயனுக்கு இருந்தது. இவன் காலத்தில் தலைநகரமான விஜயநகரம் 60 மைல்கள் விட்டமுள்ளதாக இருந்ததாக ஐரோப்பியப் பயணியாகிய நிக்காலோ காண்ட்டி (Nicolo Conti) என்பவர் விவரித்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ Vijayanagara and Bamini Kingdom 2.36