முதலாம் துர்லபா-ராஜா (Durlabharaja I) (ஆட்சி சுமார் 784-809 பொ.ச.) சாகம்பரி சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். கூர்ஜர-பிரதிகார மன்னன் வத்சராஜாவின் ஆட்சியாளராக வடமேற்கு இந்தியாவில் உள்ள இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை இவர் ஆட்சி செய்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
துர்லபன் சகமான மன்னர் முதலாம் சந்திரராஜாவின் மகன், மேலும் இவரது சிறிய தந்தை (சந்திரராஜாவின் சகோதரர்) கோபேந்திரராஜாவுக்குப் பிறகு பதவியேற்றார்.
கௌடர்களுக்கு எதிரானப் போர்
கூர்ஜர-பிரதிகார மன்னன் வத்சராஜாவின் ஆட்சியாளராக, இன்றைய வங்காளத்தின் பாலப் பேரரசுக்கு எதிராக துர்லபன் இராணுவ வெற்றியைப் பெற்றதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
துர்லபனின் வாள் கங்கா-சாகரத்தில் ( கங்கை ஆறும் சமுத்திரமும் சங்கமிக்கும் இடம்) குளித்ததாகவும், கௌடாவின் இனிப்புச் சாற்றைச் சுவைத்ததாகவும் சாகம்பரி அரசர் மூன்றாம் பிருத்விராஜனின் (வழக்கமான நாட்டுப்புற புராணங்களில் பிருத்திவிராச் சௌகான் என்று அழைக்கப்படுகிறார்) வாழ்க்கையைப் பற்றிய ஒரு புகழ்ச்சியான சமசுகிருத காவியமான "பிருத்விராஜ விஜயம்" கூறுகிறது. இது கௌடா பகுதியில் துர்லபாவின் இராணுவ சாதனைகளை குறிக்கிறது. துர்லபனின் மகன் குவாகா கூர்ஜர-பிரதிகார மன்னன் இரண்டாம் நாகபட்டாவின் ஆட்சியாளராக இருந்ததாக அறியப்படுகிறது. துர்லபனும் பிரதிகாரர்களின் நிலப்பிரபுத்துவம் கொண்டவராக இருந்தார். அநேகமாக நாகபட்டாவின் தந்தை வத்சராஜாவின் ஆட்சியாளர் என்று இது அறிவுறுத்துகிறது. இந்த கோட்பாடு ரதன்பூர் தகடு கல்வெட்டால் ஆதரிக்கப்படுகிறது. இது கௌடா பகுதியில் வத்சராஜாவின் வெற்றிகரமான இராணுவப் பிரச்சாரத்தைக் குறிக்கிறது.
துர்லபன், பால மன்னன் தர்மபாலனுக்கு எதிரான வத்சராஜாவின் போரின் போது கௌடாவில் தனது வெற்றிகளைப் பெற்றதாகத் தெரிகிறது. பாலர்கள் அவ்வப்போது பிரதிகாரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். பொ.ச.812 தேதியிட்ட பரோடா கல்வெட்டு கௌடா மன்னன் தர்மபாலனின் மீது நாகபட்டாவின் வெற்றியையும் குறிக்கிறது.
இங்குள்ள "கௌடா" என்பது இன்றைய உத்தரபிரதேசத்தில் உள்ள கங்கா-யமுனா தோவாபைக் குறிக்கிறது என்று வரலாற்றாசிரியர் ஆர்.சி.மஜும்தார் கருதுகிறார். தசரத சர்மா மற்றும் ரீமா ஹூஜா போன்ற பிற வரலாற்றாசிரியர்கள், வங்காளத்தில் உள்ள கௌட பகுதியுடன் இதை அடையாளப்படுத்துகின்றனர். இது முக்கிய பாலப் பிரதேசமாக இருந்தது.
இரதன்பூர் கல்வெட்டின் படி, தர்மபாலன் தனது இரண்டு வெள்ளை அரச குடைகளை பறித்து, தப்பி ஓடியதால், பிரதிகாரர்களின் படைகள் பின்தொடர்ந்தன. தீவிப் போரின் மூலம், வட இந்தியாவின் பெரும்பகுதியை, மேற்கில் தார்ப் பாலைவனம் முதல் கிழக்கில் வங்காளத்தின் எல்லைகள் வரை, வத்சராஜா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தினார் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. [8]
வத்சராஜா மற்றும் தர்மபாலன் இருவரும் பின்னர் இராஷ்டிரகூட மன்னர் துருவனால் அடக்கப்பட்டனர். கிபி 793 இல் துருவன் இறந்ததால், கௌடாவில் துர்லபனின் இராணுவ வெற்றிகள் இந்த வருடத்திற்கு முன்பே தேதியிடப்படலாம்.
வாரிசு
துர்லபனுக்குப் பிறகு இவரது மகன் முதலாம் கோவிந்தராஜா என்கிற குவாகா ஆட்சிக்கு வந்தார்.
சான்றுகள்
உசாத்துணை