கோபி பிரசாத் என்றும் அழைக்கப்படும் முதலாம் உதய் மாணிக்கியா (Udai Manikya I) (இறப்பு 1572), 1567 முதல் 1572 வரை திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். குறைந்த பின்னணியில் இருந்து வந்தாலும், பின்னர் இவர் ராச்சியத்தின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக உயர்ந்தார். இவரது மருமகனின் மரணத்தைத் தொடர்ந்து, உதய் அரச அதிகாரத்தை தானே எடுத்துக் கொண்டார். சில காலத்திற்குப் பிறகு ஆளும் வம்சத்தை தனது சொந்த வார்சுரிமையாக மாற்றினார்.
வாழ்க்கை
முதலில் கோபி பிரசாத் என்று பெயரிடப்பட்ட இவர் தாழ்மையான வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் இரண்டாம் விசய மாணிக்கியாவின் ஆட்சியின் போது தர்மநகரில் வாடகை வசூலிப்பவராக பணிபுரிந்தார். ஆனால் பின்னர் ஒரு பிராமணரின் மரத்தில் ஏறியதால் இந்த பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். [2] அதன்பிறகு, அரச சமையலறைகளில் சமையல்காரராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரு காவலாளியாக சேர்ந்து இறுதியில் திரிபுரா இராணுவத்தின் தளபதியாக உயர்ந்தார். விசய மானிக்கியா, இவரது விசுவாசத்தை உறுதிப்படுத்த விரும்பி, தனது சொந்த மகனை பிந்தையவரின் மகளான ரத்னாவதிக்கு திருமணம் செய்து வைத்தபோது இவரது செல்வாக்கு மேலும் அதிகரித்தது. [3]
1563 இல் இவரது மருமகன் அனந்த மாணிக்கியா அரியணைக்கு ஏறியதும், கோபி பிரசாத் விரிவான அதிகாரத்தை விரிவுபடுத்தினார், [4] புதிய மன்னரை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். [5] 1567 இல், நிச்சயமற்ற சூழ்நிலையில் அனந்தா இறந்தபோது, இந்த ஏற்பாடு குறுகிய காலமே நீடித்தது. திர்புராவின் வரலாற்று நூலான ராஜ்மாலாவின் மாறுபட்ட பதிப்புகளின்படி, இது காய்ச்சலின் விளைவாகவோ அல்லது கோபி பிரசாத்தின் உத்தரவின் பேரில் கழுத்தை நெரித்ததன் மூலமாகவோ இறப்பு ஏற்பட்டிருக்கலாம். [6] [7] கோபி பிரசாத் பதவிக்கு வந்து உதய் மாணிக்யா என்ற ஆட்சிப் பெயரை ஏற்றுக்கொண்டார். [8]
உதய், தான் ஒரு திறமையான நிர்வாகி என்பதை நிரூபித்தார். மேலும், ராச்சியத்தின் தலைநகரை மறுபெயரிட்டார். அதை ரங்கமதியிலிருந்து உதய்ப்பூராக மாற்றினார். சந்திர கோபிநாத் கோயில் மற்றும் சந்திரசாகர் போன்ற கட்டிடங்கள், கோயில்கள் மற்றும் நீர்த்தேக்கங்களைக் கட்டுவதன் மூலம் நகரத்தை அழகுபடுத்தினார். வங்காள சுல்தானான சுலைமான் கான் கர்ரானியுடன் 5 வருட கால மோதலில் ஈடுபட்டதால், இவர் போரில் குறைவான வெற்றியையேப் பெற்றார். இதன் விளைவாக பெரும் பணமும், 40,000 துருப்புக்களும், சிட்டகொங் பகுதி இழப்பும் ஏற்பட்டது. [9] [10]
உதய்க்கு 240 மனைவிகள் இருந்ததாக பாரம்பரியம் கூறுகிறது. அவர்களில் பலர், துரோகக் குற்றச்சாட்டின் பேரில், யானைகளால் மிதித்து அல்லது நாய்களால் கடிக்கப்பட்டதன் மூலம் கொல்லப்பட்டனர். 1572 ஆம் ஆண்டில், ஒரு குறிப்பிட்ட பெண் வழங்கிய பாதரசம் உட்கொண்ட உதய் நஞ்சு அருந்தி இறந்தார். இவருக்குப் பிறகு அவரது மகன் முதலாம் ஜாய் மாணிக்க்யா பதவியேற்றார். [9]
சான்றுகள்