மாநில மத்திய நூலகம் (State Central Library) இந்தியாவில் கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் ஆகும். இந்த நூலகம் கேரள திருவனந்தபுர பொது நூலகம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இந்நூலகம் இந்தியாவின் முதல் பொது நூலகமாகும் .
வரலாறு
மாநில மத்திய நூலகம் கி.பி 1829 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னரான சுவாதித் திருநாளின் காலத்தில் நிறுவப்பட்டது. நூலகத்தினை ஆரம்பிக்கும் பொறுப்பும், அதனை ஒழுங்காக அமைக்கும் பொறுப்பும் கலோனல் எட்வர்ட் கடோகன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர் பிரித்தானிய குடியிருப்பாளராக இருந்தார். அவர், பிரித்தானிய அருங்காட்சியகத்தின் நிறுவனரான சர் ஹான்ஸ் ஸ்லோனேவின் மகன் ஆவார். திருவனந்தபுரம் பொது நூலகக் குழுவின் முதல் தலைவராக கலோனல் எட்வர்ட் கடோகன் இருந்தார். இந்தக் குழுவானது நூலகத்தின் விவகாரங்களை நிர்வகித்து வந்தது. அந்த நேரத்தில், மகாராஜாவின் தர்பாரில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட, ஒரு சலுகை பெற்ற வகுப்பினருக்கு மட்டுமே இந்த நூலகத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த நூலகம் அப்போது "திருவனந்தபுரம் மக்கள் நூலகம்" என்று அழைக்கப்பட்டு வந்தது.
இந்த நூலக வரலாற்றில் பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கி.பி. 1898 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் மக்கள் நூலகத்தின் சொத்துக்கள் அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டன. கி.பி.1900 ஆம் ஆண்டில் மாட்சிமை தங்கிய ஸ்ரீ மூலம் திருநாள், ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவுகூரும் விதமாக கோதிக் பாணியில் தற்போதைய இந்த கட்டடக்கலை அழகைக் கொண்ட நூலகக் கட்டிடத்தைக் கட்டினார். நூலகத்தை அமைப்பதற்காக இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. கி.பி. 1938 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பொது நூலகத்தின் நிர்வாகம் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்திடம் (தற்போது இது கேரள பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது) ஒப்படைக்கப்பட்டது. கி.பி. 1948 ஆம் ஆண்டில் மாநில சட்டப்பேரவையின் தீர்மானத்தின் மூலம் பல்கலைக்கழகத்தின் நூலக நிர்வாகம் பல்கலைக்கழகத்திலிருந்து கையகப்படுத்த மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. 1958 ஆம் ஆண்டில் இந்த நூலகம் கேரளாவின் 'மாநில மத்திய நூலகமாக' அறிவிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் கேரள அரசின் உயர் கல்வித் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் ஒரு சிறிய துறையின் தர நிலை இந்த நூலகத்திற்கு வழங்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் குழந்தைகள் நூலகத்திற்காக வளாகத்திற்குள் ஒரு புதிய பாரம்பரிய மாதிரி கட்டிடம் கட்டப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஆர்எஃப் ஐடி உள்ளிட்ட வசதிகள் நூலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
நூலகத்தில் பிரிவுகள்
இந்த நூலகத்தில் 5,00,000 எண்ணிக்கைக்கும் மேலான நூல்கள் உள்ளன. 300 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பருவ இதழ்களுக்கு உறுப்பினர் கட்டணம் நூலகத்தால் செலுத்தப்பட்டு வருகிறது.[2] இந்த நூலகத்தில் பல பிரிவுகள் அமைந்துள்ளன.[1] அவை தொழில்நுட்பப் பிரிவு, சுழற்சிப் பிரிவு (புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள்), ஆங்கிலப் பிரிவு, மலையாளப் பிரிவு,இந்தி / சமஸ்கிருதப் பிரிவு, குறிப்பு எடுப்பதற்கான பிரிவு, குழந்தைகளுக்கான பிரிவு, நூற்கட்டுப் பிரிவு, படியெடுத்தல் பிரிவு, முக்கியமான குறிப்புப் பிரிவு, உறுப்பினரின் வாசிப்பு அறை (ஏ & பி உறுப்பினருக்கு மட்டும்), பொது வாசிப்பு அறை (சி & டி உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு), பணப் பிரிவு, நிர்வாக அலுவலகம், இணைய உலாவல் மையம், கேரள அரசிதழ் பிரிவு, மல்டிமீடியா பிரிவு, டிஜிட்டல் நூலகம், பிரித்தானிய நூலக சேகரிப்புப் பிரிவு, உள்ளிட்ட பிரிவுகள் ஆகும். மேலும் நூலகம் நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் சான்றிதழ் பாடத்தையும் நடத்தி வருகிறது.
டிஜிட்டல் நூலகம்
இந்த நூலகத்தில்ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் 709 நூல்களைத் தேடக்கூடிய வடிவத்தில் உள்ள டிஜிட்டல் சேகரிப்பு உள்ளது.
குழந்தைகளுக்கான நூலகம்
வளாகத்திற்குள் புதிய பாரம்பரிய மாதிரி கட்டிடத்தில் குழந்தைகளுக்கான நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் ஒரு மல்டிமீடியா பிரிவும் இயங்கி வருகிறது.
பிரெய்லி பிரிவு
அண்மையில் இங்கு பிரெய்லி பிரிவு தொடங்கப்பட்டது.[3]
விடுமுநாள் பணி
விடுமுறை நாள்களிலும் இந்த நூலகம் செயலாற்ற வேண்டும் என்று தற்போது வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.[4]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்