கோடி மாளிகை அல்லது பிரித்தானிய மாளிகை (British Residency) அல்லது ஐதராபாத்து மாளிகை என்பது ஐதராபாத் இராச்சியத்தில்ஜேம்ஸ் அகில்லெஸ் கிர்க்பாட்ரிக் என்பவரால் கட்டப்பட்ட ஒரு மாளிகையாகும். கிர்க்பாட்ரிக் 1798 மற்றும் 1805 க்கு இடையில் ஐதராபாத்தில் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர். இது ஐதராபாத்தில்கோட்டி புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுற்றுலாத்தலமாகும்.
கட்டிடம் பல்லேடியன் வில்லாவின் பாணியில் உள்ளது. மேலும், அமெரிக்காவில் அதன் சமகாலத்திய வெள்ளை மாளிகையின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது. இது 2002 வில்லியம் தால்ரிம்பில் என்பவர் எழுதிய ஒயிட் முகல்ஸ் என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மெட்ராஸ் பொறியாளர் லெப்டினன்ட் சாமுவேல் ரசல் என்பவரால் வடிவமைக்கப்பட்டு இதன் கட்டுமானம் 1803 இல் தொடங்கியது.
வரலாறு
கிர்க்பாட்ரிக் தனக்கும் தனது இந்திய மனைவி கைர் அன் நிசாவிற்கும் இந்த மாளிகையை கட்டினார். இந்த கட்டிடம் ஒரு காலத்தில் ஐதராபாத் நிசமின் நீதிமன்றத்திற்கான கிழக்கிந்திய நிறுவனத்தின் தூதரகமாகவும், பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஜேம்ஸ் கிர்க்பாட்ரிக் மற்றும் அவரது வாரிசுகளின் இல்லமாகவும் இருந்தது. அதன் வளாகத்தினுள் கைர் அன் நிசா வாழ்ந்த ஜெனானா (பெண்கள் குடியிருப்பு) உட்பட பல பகுதிகள் இருந்தன. வளாகத்திற்குள் கட்டிடத்தின் ஒரு சிறிய மாதிரி உள்ளது-புராணக் கதையின்படி, பர்தாவில் மறைந்திருந்த கிர்க்பாட்ரிக்கின் மனைவி, முன்புறம் உட்பட முழு மாளிகையையும் பார்க்க முடிந்தது. இந்த அளவிடப்பட்ட மாதிரி சமீபத்தில் அழகாக மீட்டெடுக்கப்பட்டது.
1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின் போது, மௌல்வி அல்லாவுதீன் மற்றும் துர்ரேபாசு கான் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் குழு இந்த மாளிகையைத் தாக்கியது. 1857 ஆம் ஆண்டின் நிகழ்வுகளுக்குப் பிறகு, பிரித்தானியர்கள் 1954 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்ட குடியிருப்பில் மார்டெல்லோ கோபுரங்களை அமைத்தனர் [1]
1947ல் சுதந்திரம் பெற்ற பிறகு, கட்டடம் காலியானது. 1949 இல், இது பெண்கள் கல்லூரியாக மாற்றப்பட்டது. தற்போது தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, இது இப்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ளது. [2] இருப்பினும், கட்டிடம் பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில் உள்ளது.[3] இது 2002 உலக நினைவுச்சின்னங்கள் கண்காணிப்பு பட்டியலில் இடம் பெற்றது. [4] 20 ஆண்டு கால முயற்சியின் பலனாக, ஜனவரி 2023 இல் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன. [5]