தெற்கத்திய மஞ்சள் சிட்டு சிட்டுக்குருவி அளவில் சுமார் 14 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு நீலந் தோய்ந்த சிலேட் நிறத்திலும், விழிப்படலம் வெளிர் மஞ்சள் நிறத்திலும், கால்கள் சிலேட் சாம்பல் நிறத்திலும் இருக்கும். பெண் பறவையின் உடல் மஞ்சள் தோய்ந்த பச்சையாக இருக்கும். இறக்கைகள் பசுமை தொய்ந்த பழுப்பாக இரு வெண் பட்டைகளோடு காட்சியளிக்கும்.[2]
ஆண் பறவையின் உடல் கறுப்பும் மஞ்சளுமாகப் பொதுத் தோற்றத்தில் பட்டாணிக் குருவியை ஒத்து இருக்கும். இறக்கைகளில் இரண்டு வெண்பட்டைகளைக் காணலாம். இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில் ஆண் பறவையின் தோற்றம் பெண் பறவையின் தோற்றத்தை ஒத்து இருக்கும். வால் மட்டும் ஆண்டு முழுவதும் கறுப்பாக இருக்கும்.[2]
பரவலும் வாழிடமும்
தெற்கத்திய மஞ்சள் சிட்டு தென்னிந்தியா, கிழக்கு இந்தியா மற்றும் வடக்கு, மத்திய மியான்மர் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் கேரளம் நீங்கலாக இலையுதிர் காடுகளிலும் தோட்டங்களிலும், விளைநிலங்களைச் சார்ந்த தோப்புகளிலும் காணப்படும்.[2]
நடத்தை
இப்பறவை இணையாக மரங்களில் இலைகள் அடர்ந்த கிளைகளில் தாவித் திரிந்தபடி இருக்கும். பூச்சிகளை வேட்டையாடும் பிற பறவைக் கூட்டங்களில் இணைந்து வேட்டையாடும். தலை கீழாகத் தொங்கியும், கிளைகளில் தொத்தியும் இலைகளிடையே உள்ள பூச்சிகளைத் தேடி பிடித்து உண்ணும். பூச்சிகளும் அவற்றின் முட்டைகளுமே இதன் முதன்மையான உணவாகும். காலை வேளைகளில் பல குரல்களில் இனிமையாக தொடர்ந்து நெடுநேரம் கத்தும்.[2]
இனப்பெருக்கம்
தெற்கத்திய மஞ்சள் சிட்டு சனவரி முதல் ஆகத்து வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். மரத்தில் இருகிளைகள் பிரியும் கவையில் மரப்பட்டை, சிலந்தி நூல் போன்றவற்றால் கோப்பை போலக் கூடு கட்டி இலைகளால் மெத்தென்று அமைக்கும். இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். முட்டை இளஞ்சிவப்பான வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆண், பெண் என இருபறவைகளும் கூடுகட்டுதல், அடைகாத்தல், குஞ்சுகளைப் பேணுதல் ஆகியவற்றில் இணைந்து செயல்படும்.[2]