தமிழ் உயிரெழுத்துக்களின் வரி வடிவங்கள்

முதல் வரையிலான 12 தமிழ் உயிர் எழுத்துக்களின் வடிவங்கள் மற்றும் ஆயுத எழுத்து ஆகியவற்றின் வரிவடிவம் எப்படி அமைந்துள்ளன என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

கிளியின் முகம் போன்று ஒரு சிறிய வளையமிட்டுக் கீழே இறங்கி அக்கோட்டை இடக்கைப்புறமாக இழுத்து மேல்நோக்கி வளைத்து இடைவெளியமையும் வண்ணம் மீட்டும் வலப்புறம் கொணர்ந்து முதலில் வரைந்த வரையளவு மேலும் அதே அளவு கீழும் செங்குத்துக் கோடு வரைதல் அகரத்தின் வடிவமாகும்.

அகர வடிவத்தின் இறுதிப் பகுதியில் உள்ள நேர் கோட்டில் இருந்து வலமிருந்து இடமாகச் சுழித்தால் ஆகாரத்தின் உருவம் வரும்.

கிளி முகத்தின் கழுத்தளவும் அகரவடிவே போல் வரைந்து இடப்புறமாக வளைத்து நடுவே இடைவெளி இருக்குமாறு கிளியின் தலையைச் சுற்றி வலப்புறமாகக் கொணர்ந்து நிறுத்துதல் இகரத்தின் வடிவமாகும்.

ஒரு செங்குத்துக் கோடு வரைந்து கொண்டு அதன் மேல் நுனியிலிருந்து வலப்புறமாக ஒரு படுக்கைக் கோடு போட வேண்டும். அக்கிடைவரையின் நடுவில் முதற் செங்குத்துக் கோட்டிற்கு இணையாக அதே அளவில் மற்றொன்று வரைய வேண்டும். இரண்டாவது செங்குத்துக் கோட்டின் இருபுறங்களிலும் அதன் கண்களைப் போன்று இரு சிறு வட்டங்களைச் சுழித்தால் அமைவது ஈகாரத்தின் வடிவமாகும்.

முதலில் சுழித்து அதனை வலப்புறமாகக் கீழே கொண்டு வந்து அகரத்தை எழுதத் தொடங்கியது போல் கீழ்க் கொணர்ந்த அந்தக் கோட்டை வலப்புறமாக நீட்டில் அஃது உகரத்தின் வடிவமாகும்.

ஒரு சுழியை இடது மேற்புறமாகத் தொடங்கி வலப்புறம் நன்கு வளைத்துப் பிறகு வளைந்த பனம்பாளையின் உருவத்தைப் போற் காட்டி அதன் படுக்கைக் கோட்டின் நடுவே ஒரு செங்குத்துக் கோடு அளவாக இழுத்த எழுத்து வடிவம்(ளகரம்), முற்கூறப்பட்ட உகர வடிவத்தின் மேல் சேர்த்தால் ஊகாரமாகும்.

மேற்புறமாகச் சுழித்தபடியே வலப்புறமாக நேர்கோடு வரைந்து அதனிடையே ஒரு காலைப் போலச் செங்குத்துக்கோடு போட்டால் அஃது எகரத்தின் வடிவமாகும்.

எகரத்தின் செங்குத்துக் கோட்டின் கீழ்முனையிலிருந்து இடப்புறம் சற்றே நீட்டினால் அஃது ஏகாரம் ஆகும்.

ஊகாரத்தின் இரண்டாவது எழுத்தைப் போன்று எழுதத் தொடங்கி வலப்புறம் நீட்டாமல் இடப்புறமாக வளைத்துக் கொண்டு வந்து அதன் கீழ் இருமுறை மேல்நோக்கிய வளையங்களை வரைந்தால் ஐகாரம் ஆகும்.

ஒரு சுழியிட்டுக் கொண்டு அதை மேலேற்றி வலப்புறமாகக் கொண்டு சென்று உள்ளே வளைத்து வளைவு தெரியும்படியாகக் கீழ்ப்பக்கமாகப் பிரித்து அங்கே முதல் சுழியின் அளவும் மேலேற்றி அங்கிருந்து கொழுமுனையைப் போல் இடப்புறம் சாய்த்து எழுத ஒகரம் ஆகும்.

ஒகர வடிவத்தின் இறுதியில் ஆகார வடிவின் இறுதிப் பகுதியைச் சேர்க்க ஓகாரம் ஆகும்.

ஒகர வடிவமும், ஊகாரத்தின் இரண்டாம் எழுத்தும் சேர்ந்தால் ஔகாரம் ஆகும்.

உரித்த தேங்காயில் காணப்படும் கண்களைப் போன்று மூன்று சுழிகளை வரைந்து காட்டுதல் ஆய்த எழுத்து வரிவடிவம் ஆகும்.

மேற்கோள் நூல்

  • புலவர் பவ.நாகராசன் (பதி) அறுவகை இலக்கணம், தமிழ்ப்பல்கலைக்கழகம், முதற்பதிப்பு 1991.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!