சென்னை மத்திய சிறை, இந்தியாவின் பழமையான சிறைகளுள் ஒன்று. இது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ளது. 1837 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் செயற்பாட்டுக்கு வந்தது. 2006 தொடங்கி இச்சிறைச் சாலையில் இருந்த சிறையாளிகள் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்கள்.[1] 172 ஆண்டு பழமை வாய்ந்த இச்சிறைச்சாலை 2009 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.
வரலாறு
தொடக்கத்தில் இச்சிறைச்சாலை சென்னை சிறை என்று அழைக்கப்பட்டது. பிறகு 1855 முதல் மத்திய சிறை என்று பெயர் மாற்றப்பட்டது.[2]அக்காலத்தில் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள சிற்றறைச் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்படும் சிறையாளிகள் வழியில் தங்கிச் செல்லும் இடமாக முதலில் இச்சிறைச் சாலை அமைந்தது. இதன் பொருட்டு இச்சிறைச்சாலையை ரூபாய் 16,496 செலவில் 11 ஏக்கர் (45,000 சதுர மீட்டர்) நிலப்பரப்பில் கட்டினார்கள்.[3]
அன்றைய இந்தியாவில் அரசர்கள் ஆண்ட மற்ற பகுதிகளைக் காட்டிலும் சென்னை மாகாணத்தில் விடுதலை வேட்கை கூடுதலாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய விடுதலைப் போராளிகள் பலரும் கைது செய்யப்பட்டு இச்சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார்கள். சிறையிலேயே சிலர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
சனவரி 2002 கணக்குப் படி, 1,778 சிறையாளிகள் இருந்தார்கள். அவர்களுள் 500 பேர் சென்னை மற்றும் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் முன்னிலைப்படுத்த வேண்டியவர்களாக இருந்தார்கள்.[4]
குறிப்பிடத்தக்க சிறையாளிகள்
இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது இங்கு சுபாஷ் சந்திர போஸ், வீர் சாவர்க்கர் முதலியோர் சிறைப்பட்டிருந்தார்கள். முன்னாள் தமிழக முதல்வரும் திராவிட இயக்கத் தலைவருமான அண்ணாதுரை, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை முன்னிட்டு இங்கு சிறைப்பட்டிருந்தார்.[5] முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இங்கு இருந்துள்ளனர்.[6] மேலும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், நேப்பாள மாவோயிசத் தலைவர் சந்திர பிரகாஷ் காஜுரேல் உள்ளிட்ட பன்னாட்டுப் பெரும்புள்ளிகளும் இங்கு சிறைவைப்பட்டு இருந்திருக்கின்றனர்.[7]
1999 கலவரம்
1999 ஆம் ஆண்டு, வடிவேலு என்னும் சிறையாளி இறந்ததை அடுத்து, சிறை அலுவலர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டனர். உதவி காப்பாளர் ஒளிந்திருந்த அறை ஒன்றைத் தீயிட்டுக் கொளுத்தினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர கலவரக் கட்டுப்பாட்டுக் காவலர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் முதலில் கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டு கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். பிறகு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.[8]
இடம் மாற்றம்
2006 ஆம் ஆண்டு, சென்னை மத்திய சிறையாளிகளை புழல் சிறைச்சாலைக்கு இடம் மாற்றினார்கள். அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு வருவாய் பெருக்கும் நோக்கில், வெறுமையாக இருந்த சிறைச்சாலை வளாகத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் கையளித்தார்கள். 13 ஏக்கர் (53,000 சதுர மீட்டர்) பரப்பளவுள்ள இந்த வளாகம் குறைந்தது 475 கோடி இந்திய ரூபாய் மதிப்பாவது இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. சூன் 14, 2009 முதல் அங்கிருந்த கட்டிடங்களை இடிக்கத் தொடங்கினார்கள். [9]
சென்னை மருத்துவக் கல்லூரிக்கான புதிய கட்டிடங்கள்
2010 ஆம் ஆண்டு, இச்சிறைச்சாலை வளாகத்தில் இருந்த 325,000 சதுர அடி நிலத்தில் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு என்று இந்திய ரூபாய் 56.63 கோடி மதிப்பில் ஆறு மாடிக் கட்டிட வளாகம் ஒன்றை எழுப்பினார்கள். இந்த வளாகத்தில் 1,250 மாணவர்கள், 400 ஆசிரியர்கள் மற்றும் பணியாட்கள் இடம் பெறுவர்.[10]
மேற்கோள்கள்