ஆகத்து 21ஆம் நாள் நடந்த உலக இளையோர் நாள் 2011-இன் இறுதித் திருப்பலியின்போது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அடுத்த உலக இளையோர் நாள் எங்கே நிகழும் என்பதை அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் 2014க்குப் பதிலாக 2013இல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ (Rio de Janeiro) நகரில் உலக இளையோர் நாள் நிகழும் என்று அறிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டுகள் பிரேசில் நாட்டில் நடக்கவிருப்பதால், அந்நாட்டிலேயே நிகழவிருக்கின்ற உலக இளையோர் நாள் ஓராண்டு முன்தள்ளிப் போடப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிசு ரியோவுக்கு வருகை
திருத்தந்தை பிரான்சிசு ரியோ டி ஜனேரோவில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2013, சூலை 22ஆம் நாள் திங்கள் கிழமை ரியோ நகர் சென்று சேர்ந்தார். பல்லாயிரக் கணக்கான திருப்பயணிகள் அவரை வரவேற்க கூடியிருந்தார்கள். 2013, மார்ச் 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பணியை ஏற்றபிறகு அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை ஆகும்.
இலத்தீன் அமெரிக்காவிலிருந்து முதல் முறையாகத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ரியோ டி ஜனேரோ நகரில் திறந்த ஊர்தியில் பவனியாகச் சென்றார். பின்னர் திருத்தந்தை பிரான்சிசு பிரேசில் நாட்டுக் குடியரசுத் தலைவராகிய தில்மா ரூஸ்ஸெஃப் என்பவரை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
திருத்தந்தையின் திருப்பயணத்திற்கான செலவு, மற்றும் அரசுக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பிரேசில் சென்று சேர்ந்ததும் திருத்தந்தை பிரான்சிசு, அங்குக் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான இளையோருக்கு உரையாற்றி, அவர்கள் இயேசு கிறிஸ்து வழங்கிய "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத்தேயு நற்செய்தி 28:19) என்னும் கட்டளையைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்
2013, சூலை 22, திங்கள்
திருத்தந்தை உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ரியோ டி ஜனேரோ நகரம் வந்து சேர்கிறார். குண்டு துளைக்க இயலாத ஊர்தியில் சென்று மக்களிடமிருந்து தம்மைப் பிரித்துக்கொள்ள விரும்பாத திருத்தந்தையின் வற்புறுத்தலுக்கு இசைய, அவர் பயணம் செல்ல சாதாரண ஃபீயத் ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஊர்தியில் திருத்தந்தை சென்றுகொண்டிருந்த போது ஆயிரக் கணக்கான மக்கள் அவரை நெருங்கி வாழ்த்தியதால் பாதுகாப்பு அலுவலர்கள் அவதிப்பட்டுப் போயினர். அவருடைய ஊர்தி பாதுகாப்பாகச் செல்வதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலையை ஊர்தி ஓட்டுநர் தவறவிட்டதைத் தொடர்ந்து, ரியோ நகரின் போக்குவரத்து நெரிசலில் ஊர்தி மாட்டிக்கொண்டுவிட்டது. இதனால் திருத்தந்தையின் பயணம் ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடர்ந்தது.
திருத்தந்தை "ஆலித்தாலியா" வானூர்தியிலிருந்து ரியோ டி ஜனேரோ வானூர்தி நிலையத்தில் இறங்கியதும், அவரை பிரேசில் நகரின் குடியரசுத் தலைவர் தில்மா ரூஸ்ஸ்ஃப் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். கூடியிருந்த மக்கள் குரலெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாடகர் குழு உலக இளையோர் நாள் கீதத்தைப் பாடியது. திருத்தந்தைக்கு மலர்ச் செண்டு வழங்கப்பட்டது.
திருத்தந்தை கையசைத்து, மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். "பிரேசில் நாட்டின் மக்களை அறிய வேண்டும் என்றால், அவர்களுடைய இதயத்தில் இடம் பிடிக்க வேண்டும். எனவே நான், அவர்களுடைய இதயக் கதவைத் தட்டி, உட்புகுந்திட அனுமதி கேட்கின்றேன்" என்று திருத்தந்தை கூறினார். "நான் கொணர்வது பொன்னுமல்ல, வெள்ளியுமல்ல; விலைமதிப்பு கடந்த கருவூலமாகிய இயேசு கிறிஸ்துவையே நான் கொண்டுவருகின்றேன்" என்றார் அவர்.
பின்னர் ரியோ நகரின் மையப்பகுதி வழியாக திருத்தந்தையின் ஊர்திப் பவனி தொடர்ந்தது. வழிநெடுக பல்லாயிரக் கணக்கான மக்கள் நின்றுகொண்டு அவரை வரவேற்றனர். திருத்தந்தை புன்முறுவலோடு மக்களை வாழ்த்திக்கொண்டே சென்றார். அவர் பயணம் செய்த சிறிய ஊர்தியை நெருங்கிச் சென்று சன்னல் வழியாக ஒரு பெண்மணி தனது குழந்தையைத் திருத்தந்தையிடம் நீட்டினார். அக்குழந்தைக்கு திருத்தந்தை அன்புமுத்தம் வழங்கினார்.
ரியோ நகரத்தின் மையத்தை வந்தடைந்ததும் திருத்தந்தை கூரை திறந்த மற்றொரு ஊர்தியில் ஏறிக்கொண்டார்.
ஒரு மில்லியனுக்கு அதிகமான இளையோர் இந்த விழாக்கொண்டாட்டத்தில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2013, சூலை 23, செவ்வாய்
திருத்தந்தை ஓய்வெடுக்கிறார். தனி சந்திப்புகள்; பொது நிகழ்ச்சிகளில் பங்கேறவில்லை.
ரியோ நகரின் புகழ்பெற்ற கோப்பாகபானா (Copacabana) கடற்கரையில் 400 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிவந்து திருப்பலியில் கலந்துகொள்கின்றனர். அத்திருப்பலிக்குத் தலைமை தாங்கியவர் ரியோ நகரப் பேராயர் ஓரானி யோவான் தெம்பெஸ்தா. ரியோ நகரில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து பெருநகரத் தொடருந்து செயல்படவில்லை. இதனால் கோப்பாகபானா கடற்கரைக்கு மக்கள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டது.
2013, சூலை 24, புதன்
திருத்தந்தை பிரான்சிசு பிரேசில் நாட்டில் முதன்முறையாக பொதுமக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுகிறார். ரியோ நகருக்கும் சான் பவுலோ நகருக்கும் இடையே அமைந்துள்ள அப்பெரசீதா (Aparecida) [2] என்னும் சிறு நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருத்தலத்தில் அவர் திருப்பலி நிறைவேற்றினார். இயேசுவின் அன்னையாகிய மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இப்பேராலயத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திருப்பலியில் கலந்துகொள்ள கூடியிருந்தனர். கோவிலில் இடம் இல்லாததால் கோவிலுக்கு வெளியே சுமார் 20 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். கடும் குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது[3].
திருத்தந்தை மக்களுக்கு மறையுரை ஆற்றியபோது இவ்வாறு கூறினார்: "இன்றைய உலத்தில் மக்களை ஈர்த்து இழுக்கின்ற எத்தனையோ போலி தெய்வங்கள் உள்ளன. பணம், அதிகார வேட்கை, சிற்றின்பம் போன்ற இந்த போலி தெய்வங்களை விட்டுவிட்டு நாம் உண்மையான கடவுளை நாடிச் செல்ல வேண்டும். கடவுள் மட்டில் நம்பிக்கை கொள்வதும், பிறருக்கு அன்புகாட்டி உதவுவதும் நமது பண்புகளாக வேண்டும்."[4]
திருப்பலிக்குத் தலைமை தாங்குவதற்கு முன் திருத்தந்தை அப்பெரசீதா திருத்தலத்தில் அமைந்துள்ள புகழ்மிக்க அன்னை மரியா திருவுருவத்தின் முன் நின்று உருக்கமாக இறைவேண்டல் செய்தார்.
அப்பரெசீதா என்னும் போர்த்துகீசிய சொல் "காட்சியளித்தவர்" என்னும் பொருள்தரும். அப்பெயர் அன்னை மரியா அமலோற்பவ அன்னையாக அங்கு காட்சியளித்தார் என்னும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிறந்ததாகும். அங்கு கட்டப்பட்ட திருத்தலக் கோவிலில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டிருக்கின்ற அன்னை மரியாவின் சிறு திருவுருவம் அப்பரெசீதா என்றே அழைக்கப்படுகிறது. சுமார் மூன்று அடி உயரம் கொண்ட அந்த திருவுருவம் சுட்ட களிமண்ணால் ஆனது. அமலோற்பவ அன்னை உருவில் உள்ளது. அதை மூன்று மீனவர்கள் ஆற்றில் கண்டெடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து பல புதுமைகள் நிகழ்ந்ததாகவும் வரலாறு. அங்கே அன்னை மரியா 1717இல் காட்சியளித்ததின் அடையாளமாக அச்சிலை விளங்குகிறது. அந்த நிகழ்வின் மூன்றாம் நூற்றாண்டு விழாவின்போது (2017) அங்கு வருகை தரப் போவதாக திருத்தந்தை பிரான்சிசு அறிவித்தார்.
ரியோவில் அமைந்துள்ள புனித பிரான்சிசு அசிசி மருத்துவ மனைக்குச் சென்று நோயாளிகளை சந்திக்கிறார். புனித பிரான்சிசு சபைத் துறவிகளால் நடத்தப்படுகின்ற இந்த மருத்துவமனையில் மது மற்றும் போதைப் பொருட்பயன்பாட்டுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க கட்டப்படுகின்ற புதிய பகுதியைத் திருத்தந்தை ஆசிர்வதித்து திறந்துவைத்தார். அப்போது அவர் கூறிய சில கருத்துக்கள்: "போதைப் பொருட்கள் இன்றைய இளைஞர்களுக்கும் பிறருக்கும் பெரும் தீங்கு விளைக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழி அவற்றைச் சட்டபூர்வமாக்குவதுதான் என்று சில அரசுகள் கருதுகின்றன. இது தவறான வழி. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்களுக்கு அவற்றின் தீமை பற்றி அறிவு புகட்ட வேண்டும். பண ஆசை கொண்டு போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு இளையோர்களைக் கெடுப்பவர்கள் 'மரண வியாபாரிகள்.' போதைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுக் கல்வி ஊட்ட வேண்டும்."
திருத்தந்தை அந்த மருத்துவ மனைக்குச் சென்றபோது, போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டு தற்போது விடுதலை பெற்றுள்ள சிலர் தங்கள் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்தனர். அந்த அனுபவ வரலாற்றைத் திருத்தந்தை கவனத்தோடு செவிமடுத்துக் கேட்டார்.
2013, சூலை 25, வியாழன்
காலையில் திருத்தந்தை ரியோ நகரின் ஆட்சித்தலைவரின் அலுவலகம் சென்று அவரிடமிருந்து ரியோ நகரின் திறவுகோல்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பிரேசிலில் 2014இல் நடைபெறவிருக்கின்ற உலகக் கால்பந்து போட்டி கொடிகளையும், 2016இல் பிரேசிலில் நடைபெறவிருக்கின்ற கோடை ஒலிம்பிக் விளையாட்டு கொடிகளையும் மந்திரித்தார். பின்னர், உலகத்திலேயே மிகச் சிறந்த காற்பந்து வீரர் எனப் போற்றப்படுகின்ற பிரேசில் நாட்டவரான பெலே என்னும் விளையாட்டு வீரரைச் சந்தித்துப் பேசினார்.
ரியோ டி ஜனேரோ நகரின் சேரிகளில் ஒன்றாகிய மங்கீனோசு சேரிக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து உரையாடுகிறார். திருச்சபை என்பது ஏழைகளுக்கு ஆதரவாக இருக்கின்ற ஏழைத் திருச்சபையாக மாறவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிசு, முன்னாள்களில் அர்ஜென்டீனாவின் புவேனஸ் ஐரேஸ் நகரின் ஆயராக இருந்த காலத்திலேயே அந்நகரின் சேரிப்பகுதிகளுக்குச் சென்று மக்களோடு உறவாடுவது உண்டு. திருத்தந்தை பிரான்சிசை மக்கள் "சேரித் திருத்தந்தை" (Slum Pope) என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்[5].
மழையையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து திருத்தந்தையை வாழ்த்தினர். மங்கினோசு சேரியில் உள்ள ஒரு சிற்றாலயத்திற்குச் சென்று புதுப்பீடம் மந்திரித்த பின் திருத்தந்தை பிரான்சிசு ஒரு வீட்டிற்குச் சென்றார். பிரேசில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்திப் பேசி உறவாடத் தம்மால் இயலவில்லையே என்று கூறிய திருத்தந்தை, மக்களிடம் ஒரு குவளை தண்ணீர் கேட்டு அருந்துவதோ சிறுது காப்பி அருந்துவதோ தமக்கு விருப்பம் என்றார். ஆனால் தமக்கு யாரும் கள்ளோ சாராயமோ கொடுக்க வேண்டாம் என்று அவர் கூறியதும் கூட்டத்திலிருந்து பலத்த சிரிப்பொலி எழுந்தது.
பிரேசில் நாடு அண்மைக் காலத்தில் வலுவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டு மக்களிடையே வறுமையும் அதிகரித்துள்ளது. மக்களிடையே சமத்துவம் வளர வேண்டும் என்றும், அதற்காக உழைப்பதில் செல்வர்களும் நாட்டு அதிகாரிகளும் நன்மனம் கொண்ட அனைத்துப் பெருமக்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிசு கூறினார். இதுவே உலகில் சமூக நீதி மற்றும் சமத்துவ சமுதாயம் வளர வழியாகும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சி நிரலில் முன்னறிவிக்கப்படாத ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகி, திருத்தந்தை தமது சொந்த நாடாகிய அர்ஜென்டீனாவிலிருந்து ரியோவுக்கு வந்துள்ள ஆயிரக் கணக்கான இளையோரை சந்திக்கிறார். அச்சந்திப்பு ரியோ நகரின் புனித செபஸ்தியான் பெருங்கோவிலில் நடைபெற்றது. அப்போதும் மக்களை வாழ்த்திய திருத்தந்தை "திருச்சபை மக்கள் வாழ்கின்ற தெருக்களில் சென்று அவர்களை சந்திக்க வேண்டும்" என்றார். மேலும் இளைஞர்கள் தங்கள் மறைமாவட்டங்களில் மக்களின் உள்ளங்களை உலுக்குகின்ற விதத்தில் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
திருத்தந்தை இளைஞர்களுக்கு ஆற்றிய உரையில் கீழ்வருமாறு கூறினார்: "நீங்கள் கிறிஸ்துவுக்குச் சான்றுபகர்கின்ற வாழ்க்கை நடத்த வேண்டும். குருமையத் திருச்சபையை வளர்க்காமல், மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும். உலகப் போக்கில் போகாமலும், தன்னலம் வளர்க்காமலும் நீங்கள் வாழ வேண்டும். நமக்குள்ளே, நமது பங்குகளுக்குள்ளே, பள்ளிகளுக்குள்ளே, அமைபுகளுக்குள்ளே அடைபட்டுக் கிடத்தல் ஆகாது. நீங்கள் வெளியேறிச் சென்று இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்."
திருத்தந்தையின் பிரேசில் பயணம் தொடங்கியதிலிருந்தே அங்கு பலத்த மழையும் குளிரும் நிலவியன. இதனால், திருத்தந்தை மக்களை வரவேற்றுப் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் சேறும் சகதியும் உண்டான காரணத்தால் அக்கூட்டம் ரியோவின் புகழ்பெற்ற காப்போகபானா கடற்கரைக்கு மாற்றப்பட்டது.
2013, சூலை 26, வெள்ளி
நான்கு நாள் விடா மழைக்குப் பின் கதிரவனின் ஒளி ரியோ நகரில் பிரகாசமாக ஒளிர்ந்தது. திருத்தந்தை பிரான்சிசு காலையில் தம் உடன் இயேசு சபையினரோரு திருப்பலி நிறைவேற்றினார். பின்னர் ரியோ நகரின் ஒரு பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த ஒப்புரவுக் கூண்டுகளில் ஒன்றில் சென்று ஐந்து இளையோருக்குப் பாவமன்னிப்பு அளிக்கும் திருவருட்சாதனம் நிகழ்த்தினார். இந்த இளையோர் சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் இருவர் பிரேசில் நாட்டவர், ஒருவர் இத்தாலி நாட்டவர், மற்றொருவர் வெனேசுவேலா நாட்டவர்.
நண்பகல் மூவேளை மன்றாட்டின்போது திருத்தந்தை பிரான்சிசு ரியோ நகரில் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட இளையோரோடு சேர்ந்து இறைவேண்டல் நிகழ்த்தினார். பின்னர் நண்பல் உணவு வேளையில் அவர் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா, அமெரிக்காக்கள் ஆகிய உலகின் ஒவ்வொரு கண்டங்களிலிருந்தும் இரு இளைஞர்கள், வரவேற்கும் நாடாகிய பிரேசிலிலிருந்து இரு இளையோர் என்று பன்னிரு இளையோரோடு உணவு உட்கொண்டார். அவர்களுள் ஓசியானியாவிலிருந்து வந்த தாமசு பிலிப்பு என்பவர் இந்திய நாட்டவர், ஒருவர் இலங்கை நாட்டவர்[6].
மாலையில் காப்போகபானா கடற்கரையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்குத் திருத்தந்தை பிரான்சிசு தலைமை தாங்கினார். 280 இளையோர் சிலுவைப் பாதையின் வெவ்வேறு நிலைகளை நடித்துக் காட்டினர். அப்போது பாடல்கள் பாடப்பட்டன, இறைவேண்டல் நிகழ்த்தப்பட்டது. திருத்தந்தை பிரான்சிசு, உலகின் பல இடங்களில் சமய நம்பிக்கைக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் துன்புறுத்தப்படுவோருக்காக இறைவேண்டல் நிகழ்த்தியதோடு, இயேசுவின் துன்பங்களில் அவர்கள் பங்கேற்பதையும் குறிப்பிட்டார். அரசியல் ஆட்சியாளர்களிடையே நிலவும் ஊழலும் தன்னலப் போக்கும் மக்களுக்கு இன்னல் விளைவிக்கின்றன என்றும், இளையோர் பிறர்பணி நோக்கோடு வாழவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்[7].
2013, சூலை 27, சனி
காலையில் திருத்தந்தை பிரான்சிசு ரியோ நகரின் புனித செபஸ்தியான் பெருங்கோவிலில் ஆயர்கள், குருக்கள், துறவிகள், குருமாணவர் ஆகியோரோடு சேர்ந்து திருப்பலி நிகழ்த்துகிறார். அப்போது ஆற்றிய மறையுரையில், "உலகத்தில் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவின் நற்செய்தியைக் கேட்க ஆவலாய் இருக்கும்போது நாம் மட்டும் நமது பங்குகளிலும் குழுக்கள் நடுவிலும் அடைந்துகிடத்தல் ஆகாது. மக்களை வரவேற்க நமது வீட்டுக் கதவுகளைத் திறந்தால் மட்டும் போதாது. கதவின் வழியாக வெளியே சென்று மக்களைத் தேடிச் சென்று சந்திக்க வேண்டும். கோவிலுக்கு வராதவர்களையும் தொலையில் இருப்போரையும் நாமே தேடிச் செல்ல வேண்டும். தெருமூலைகளிலும் ஓரங்களிலும் சென்று அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து உறவாட வேண்டும்" என்றார்.[8]
பிரேசில் நாட்டுத் தலைவர்கள், கல்வித் துறை, வணிகத்துறை, கலாச்சாரத்துறை ஆகிவற்றில் இடம் வகிப்போர் போன்றோரை ரியோவில் சந்தித்து உரையாற்றினார். அந்த உரையின்போது திருத்தந்தை, பிரேசில் நாட்டின் கலாச்சாரப் பன்மை நிலையைச் சுட்டிக்காட்டினார். நாட்டுத் தலைவர்களும் அறிவுத்துறையினரும் முழு மனித மேம்பாட்டுக் கொள்கையை (integral humannism) கடைப்பிடித்து மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும். சமூகத்தின் எல்லா நிலையினரோடும், குறிப்பாக சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டோரோரு உரையாடல் நிகழ்த்தி அவர்களது முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும் என்று கூறினார்.[9]
மாலையில் இளையோரின் திருவிழிப்பு இறைவேண்டல் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். நற்கருணைப் பவனி சிறப்பு நிகழ்ச்சி. பாடல்கள், இறைவேண்டல், இசை நிகழ்ச்சிகள். திருத்தந்தை ஆற்றிய உரையில் அசிசி நகர் புனித பிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார். சிலுவையில் தொங்கிய இயேசு, பிரான்சிசை நோக்கி, "என் இல்லத்தைக் கட்டி எழுப்பு" என்று கூறிய சொற்கள் இன்றைய இளையோர் திருச்சபை என்னும் கடவுளின் இல்லத்தைக் கட்டி எழுப்ப இயேசுவே அளிக்கின்ற கட்டளை என்று அவர் கூறினார். "2014ஆம் ஆண்டு பிரேசிலில் உலகக் காற்பந்துக் கோப்பைக்கான விளையாட்டுகள் நடக்கவிருக்கின்றன. அந்நிகழ்ச்சி விளையாட்டு வெறி கொண்ட பிரேசில் நாட்டு மக்களுக்குத் தருகின்ற மகிழ்ச்சியை விட அதிக நிறைவை நமக்குத் தருபவர் இயேசு கிறிஸ்து" என்று அவர் கூறியதும் மக்கள் ஒலியெழுப்பி ஆரவாரித்தனர்.[10]
2013, சூலை 28, ஞாயிறு
உலக இளையோர் நாளின் நிறைவாக, திருத்தந்தை ரியோ நகரில் உலக இளையோர் நாள் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றுகிறார். திருப்பலியின்போது ஆற்றிய மறையுரையில், திருத்தந்தை இந்த உலக இளையோர் நாள் விருதுவாக்காகிய, "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத்தேயு 28:19) என்னும் இயேசுவின் கட்டளை பற்றி விளக்கி உரைத்தார். இன்றைய இளையோர் பிற இளையோருக்கு வழிகாட்டிகளாக மாற வேண்டும். இறுதியாக, மூன்று சொற்கள் இளையோரின் உள்ளத்தில் ஆழப்பதிய வேண்டும்: அவை, "போங்கள்", "அஞ்சாதீர்", "பணிபுரியுங்கள்" என்பவை ஆகும் என்று கூறி திருத்தந்தை உலக இளையோர் நாளை நிறைவுக்குக் கொணர்ந்தார்.[11]
திருப்பலிக்குப் பிறகு திருத்தந்தை பிரான்சிசு இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைச் CELAM செயற்குழுவினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது, ஆயர்கள் வெறுமனே நிர்வாகிகளாக இல்லாமல் மக்களை வழிநடத்துகின்ற வழிகாட்டிகளாக மாறவேண்டும் என்றார். ஆட்டு மந்தைக்கு முன்னும், உடனும், பின்னும் நடக்கின்ற ஆயனைப் போல அவர்கள் மக்களுக்கு வழிகாட்டியும், அவர்களோடு சேர்ந்து வழிநடந்தும், அவர்களது பயணத்தில் அவர்களைத் தாங்கிப்பிடித்தும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.[12]
பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின் வத்திக்கான் நகருக்குத் திரும்புகிறார். ரியோ நகரின் விமான நிலையத்தில் பிரேசில் நாட்டுத் துணைக் குடியரசுத் தலைவரும் பிறரும் திருத்தந்தையை வழியனுப்பிவைத்தனர்.
2016 உலக இளையோர் நாள்
நிறைவுத் திருப்பலியின்போது திருத்தந்தை பிரான்சிசு அடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டம் 2016இல் போலந்தின் கிராக்கோவ் நகரில் நிகழும் என்று அறிவித்தார். 1978இல் பதவியேற்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கிராக்கோவ் நகரின் பேராயராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[13]