இலாய் சோய் சான் ( Lai Choi San ) ( செல்வத்தின் மலை என்று பொருள்) 1920கள் மற்றும் 1930களில் செயல்பட்ட ஒரு சீன கடற்கொள்ளைக்காரி ஆவார். அலெகோ லிலியசு என்ற புகழ்பெற்ற பத்திரிகையாளர் 1931 ஆம் ஆண்டு எழுதிய ஐ செயில்டு வித் பைரேட்ஸ் என்ற புத்தகமே இவரது வாழ்க்கையின் முக்கிய ஆதாரம் என்பதால், இவரது வரலாற்றுத்தன்மை, அல்லது இவரைப் பற்றி அறியப்பட்ட பெரும்பாலானவற்றின் வரலாற்றுத்தன்மை சர்ச்சைக்குரியது.. [1]
வரலாற்றுத்தன்மை
இலாய் சோய் சான் பற்றிய முதன்மையான ஆதாரம் அலெகோ லிலியசு என்பவரின் ஐ செயில்ட் வித் பைரேட்ஸ் (1931) என்ற நூலாகும். இந்தக் கணக்கு முற்றிலும் சாத்தியமில்லாதாக இல்லாவிட்டாலும், லிலியஸ் நற்பெயரைக் கொண்ட பத்திரிகையாளராகக் கருதப்படுகிறார். அவர் தன்னை பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர் என்றும், பிலிப்பீன்சு மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் தன்னைத்தானே விவரித்தார். ஐ செயில்ட் வித் பைரேட்ஸ் என்ற புத்தகத்தில் உள்ள கப்பல்களில் பெண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அந்தப் புகைப்படங்களை எடுத்தவர்கள் கடற்கொள்ளையர்கள் என்பதற்கு லிலியஸின் வார்த்தைக்கு அப்பாற்பட்ட எந்த ஆதாரமும் இல்லை.[1]
இரண்டாம் சீன-சப்பானியப் போரின் போது இவர் சீனாவிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்டதாக போர் பற்றிய அறிக்கை வெளியிட்ட ஒரு பத்திரிக்கையின் குறிப்பிடும் மற்றொரு ஆதாரமும் உள்ளது. இந்த கணக்குகளிலும் சர்ச்சை இல்லாமல் இல்லை; வுமன் பைரேட்ஸ் அண்ட் தி பாலிடிக்ஸ் ஆஃப் தி ஜாலி ரோஜர் (2017) என்ற புத்தகத்தில் உல்ரிக் கிளாஸ்மான் கூறுகிறார். அதில் இலாய் சோய் சான் 1939 இல் சர்வதேச கடலோரக் காவல்படையால் சிறைபிடிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக வேறு சில ஆதாரங்களும் குறிப்பிடுகின்றன [1]
லிலியஸின் கூற்றுப்படி, இலாய் சோய் சான் நான்கு மகன்களைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஒரே மகளாவார். இவரது தந்தை கடலில் தனது பயணத்தின் போது இவரையும் அழைத்துச் சென்றார். இறுதியில் இவர் ஒரு கொள்ளையர் கும்பலில் சேர்ந்தார். சில காலத்திற்குப் பிறகு இவரது தந்தை கூட்டத்தின் தலைவனாக ஆனார். அவரிடம் ஏழு கப்பல்கள் இருந்தன. இலாய் சோய் சானின் தந்தை இறந்த பிறகு, இவர் கடற் கொள்ளைப் படைக்கு தலைமை தாங்கினார். மேலும் ஐந்து கப்பல்களை தனது கூட்டத்தில் சேர்த்து, மொத்த கப்பல்களின் எண்ணிக்கையை பன்னிரண்டாக கொண்டு வந்தார். லிலியஸ் இவரை புத்திசாலி, கவர்ச்சியான, இரக்கமற்ற மற்றும் கொடூரமானவர் என்று விவரிக்கிறார்.[1]
லிலியஸ் இவரது கடற்படையைப் பற்றி விவரித்துள்ளார். இவரது குழுவினர் போர்த்துகீசியர்களால் லாட்ரோன்கள் (கடற்கொள்ளையர்கள், கொள்ளையர்கள்) என்று குறிப்பிடப்பட்டார்கள். லிலியஸின் கூற்றுப்படி, “கூட்டத்தினர் அனைவரும் பயமுறுத்தும் தோற்றத்தில் இருந்தனர். அவர்கள் பரந்த விளிம்புகள் கொண்ட தொப்பிகளை அணிந்து, கழுத்து மற்றும் தலையில் சிவப்பு கைக்குட்டைகளை கட்டியிருந்தனர்”. [2]
மேற்கோள்கள்