இரண்டாம் வீர நரசிம்மன் ( ஆங்கிலத்தில் Vira Narasimha II கன்னடத்தில் : ಇಮ್ಮಡಿ ವೀರ ನರಸಿಂಹ ) (ஆட்சிக்காலம் 1220-1235) என்பவன் ஒரு போசாள மன்னனாவான். இவனது ஆட்சியின்போது போசாளர்கள் தமிழ் நாட்டு விவகாரங்களில் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்தனர். இவன் காலத்தில் காடவர், பாண்டியர் ஆகியோருடன் போர்களில் ஈடுபட்டான். சோழ மன்னனும் தனது மருமகனுமான மூன்றாம் இராசராச சோழனுக்கு எதிராகப் பாண்டியர்கள் செய்த படை எடுப்புகளுக்கு எதிராகவும் சோழருக்கு ஆதரவாகவும் செயல்பட்டான். திருவரங்கம் அருகில் கண்ணணூர் குப்பம் என்ற இடத்தில் தமிழ் நாட்டு விவகாரங்கள்மீது நெருங்கிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டைப் பராமரிக்க அவரது இரண்டாவது தலைநகரை அமைத்தான். கன்னட கவிஞர் சுமனோபனா வீர நரசிம்மனின் அவைக்களப் புலவராக இருந்தார்.[1][2][3]
பாண்டியர்கள் உடனான போர்கள்
இரண்டாம் வீர நரசிம்மன் ஆட்சியின்போது, நெல்லூர் தெலுங்குச் சோடர்கள் , வாரங்கல்லின் காகதீய வம்சத்தினர், மதுரை பாண்டியர்கள் ஆகியோர்களின் படைகளிடமிருந்து தமது ஆட்சிப் பகுதிகளைப் பாதுகாக்க காஞ்சியில் போசாளப் படைகள் நிலைகொண்டிருந்தது. கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் இராசராச சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டு வதை நிறுத்தினான். சோழனைச் சிறைப் படுத்தினான், சோழனின் செல்வங்களைக் கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த இரண்டாம் வீர நரசிம்மன், படை எடுத்து வந்தான். வீர நரசிம்மன் திருவயிந்திபுரம் வரைச் சென்று கோப்பெருஞ்சிங்கனின் செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்துக் கைப் பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் இராச ராசச் சோழனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், போசளனுடன் சமாதானம் செய்து கொண்டான்.
இராச ராச சோழனை மீட்டப் பின்புக் காவேரிக் கரை வரைச் சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீர நரசிம்மன். காவேரிக் கரை வரை சோழர்களின் நிலப் பரப்பு அகன்றது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகைக்குட்பட்டு, அவர்களது ஆட்சியைச் சார்ந்தே இருந்தனர்.
உசாத்துணை
- Dr. Suryanath U. Kamat, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041
- K.A. Nilakanta Sastri, History of South India, From Prehistoric times to fall of Vijayanagar, 1955, OUP, New Delhi (Reprinted 2002), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8
மேற்கோள்கள்