இந்தன் புனித மரியாள் பதிகல் வேலை

இந்தன் புனித மரியாள் பதிகல் வேலை
செய்பொருள்வெண்களி
உருவாக்கம்4வது நூ,ஆ, (தொடக்கம்)
காலம்/பண்பாடுஉரோம-பிரித்தானியக் காலம்
இடம்இந்தன் புனித மரியாள் இல்லம்
தற்போதைய இடம்G49/wall, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
பதிவு1965,0409.1

இந்தன் புனித மரியாள் பதிகல் வேலை என்பது, ஆங்கிலக் கவுன்ட்டியான டோர்செட்டில் உள்ள இந்தன் புனித மரியாள் என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏறத்தாழ முழுமையான உரோமப் பதிகல்வேலை ஆகும். இவ்வலங்கார வேலைப்பாட்டின் மையப் பகுதியில் இயேசு கிறிஸ்துவின் மார்பளவு படம் உள்ளது. பிரித்தானிய அருங்காட்சியகப் பணிப்பாளர் நீல் மக்கிரெகர் தொகுத்து வழங்கிய பிபிசி வானொலி 4 இன் 100 பொருட்களில் உலக வரலாறு நிகழ்ச்சியில் 44 ஆவது பொருளாக இப்பதிகல்வேலை இடம்பெற்றது.

இப்பதிகல் வேலை, இரண்டு அறைகளை மூடி அமைந்துள்ளது. இது பெரும்பாலும், சிவப்பு, மஞ்சள், இளமஞ்சள் ஆகிய நிறங்களைக் கொண்டுள்ளது. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படும் இது, டேர்னோவிய பதிகற் கலைப் பள்ளியின் பணியகத்தில் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.

கிறித்தவப் பலகம்

மைய வட்டத்தின் பெரிய படம்

பெரிய அறையில் இருக்கும் பலகம் 17 அடிக்கு 15 அடி அளவு கொண்டது. இதன் நடுப்பகுதியில் அமைந்துள்ள வட்டத்துள் வெள்ளை உடை அணிந்த மனித உருவம், இரு புறமும் மாதுளம்பழத்துடன் கூடிய கிறித்தவ "சி ரோ" சின்னத்தின் முன்னர் உள்ளது. சிலர் இது பேரரசர் கான்சுட்டன்டைனின் உருவம் எனக் கூறினாலும்,[1] பொதுவாக இது யேசு கிறிஸ்து எனவே அடையாளம் காணப்படுகின்றது. இதில் ஒரு பேரரசரைக் குறிப்பதற்கான அடையாளச் சின்னம் எதுவும் இல்லை. இவ்வட்டத்தின் நாற்புறங்களிலும் அரைவட்ட வடிவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் நாய், மான் உருவங்களுடன் கூடிய காடு, வேட்டை ஆகியவற்றைக் குறிக்கும் சிறு படங்கள் உள்ளன. நாலுபக்க மூலைகளில் இருக்கும் கால்வட்டங்களுக்குள் காற்றை, அல்லது பருவகாலங்களைக் குறிக்கும் மார்பளவு உருவங்கள் உள்ளன.

உரோமத் தொன்மப் பலகம்

சிறிய அறையில் காணப்படும் பலகம் 16½ அடிக்கு 8 அடி நீள அகலங்களைக் கொண்டது. இதன் மையப் பகுதி வட்டத்துள் உரோமத் தொன்மங்களில் வரும் பெல்லரோபொன், சிமேராவைக் கொல்லும் காட்சி உள்ளது. சிலர் இதைக் கிறித்தவக் கருத்தியலின் அடிப்படையில் நன்மை, தீமையை அழிப்பதைக் குறிப்பதாக விளக்குகின்றனர். இதன் இருபுறமும் உள்ள நீள்சதுரக் கட்டங்களுக்குள்ளும் நாய் மானை வேட்டையாடும் காட்சிகள் காணப்படுகின்றன.

கண்டுபிடிப்பு

இது 1963 ஆம் ஆண்டில் உள்ளூர்க் கொல்லரான (வால்ட்டர்) யோன் வைட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது டோர்ச்செசுட்டர் அருங்காட்சியகத்தினரால் அகழப்பட்டு பாதுகாப்பதற்காக உயர்த்தப்பட்ட போதும், கட்டிடத்தின் பிற பகுதிகள் எதுவும் ஆராயப்படவில்லை. இது பொதுவாக ஒரு இல்லமாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இதன் பதிகல் அறைகள் உரோமரின் சாப்பாட்டு அறைகளை ஒத்துள்ளன. எனினும் இது ஒரு தேவாலயமாகவோ அல்லது ஏதாவது கிறித்தவக் கட்டிடமாகவோ இருப்பதுவும் சாத்தியமே. இங்கே கிபி 270க்கு முற்பட்ட பொருட்கள் எதுவும் அகப்படவில்லை.

குறிப்புக்கள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!