அனைத்துலக அடையாளக் குறியீடு (International Designator) என்பது தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையத்தின் செய்மதிகளுக்கான அனைத்துலகப் பெயரிடல் முறை ஆகும். இக் குறியீட்டில், ஏவப்பட்ட ஆண்டு, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஏவப்படும் செய்மதிகளுக்கான மூன்று இலக்கங்கள் கொண்ட தொடர்எண், ஒவ்வொரு ஏவுதலின் போதும் தொடர்புள்ள வெவேறு கூறுகளைக் குறிக்கும் மூன்று எண்ணிக்கை வரையான எழுத்துக்களைக் கொண்ட குறியீடு என்பன அடங்கியிருக்கும். வெளிப்படையாகத் தெரிந்த செய்மதிகளுக்கு மட்டுமே குறியீடுகள் வழங்கப்படுகின்றன. படைத்துறைச் செய்மதிகள் பட்டியல் இடப்படுவதில்லை. அத்துடன், ஆண்டுக்கான எவுதல் தொடர் எண்களையும் அவை பாதிப்பது இல்லை.[1][2][3]
எடுத்துக் காட்டாக, 1957-001A ஸ்புட்னிக் 1 இன் ஏவுகலத்தையும், 1957-001B ஸ்புட்னிக் 1 செய்மதியையும் குறிக்கும். இக் குறியீட்டு எண்ணிலிருந்து, இது 1957 ஆம் ஆண்டில் ஏவப்பட்டது என்பதையும், அவ்வாண்டில் முதலாவதாக ஏவப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ளலாம். 1990-037B 1990 ஆம் ஆண்டில் 37 ஆவதாக ஏவப்பட்ட ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைக் குறிக்கும். 1990-037A அதனை ஏவுவதற்கான விண்வெளி ஓடம் டிஸ்கவரியைக் குறிக்கும்.
தோல்வியில் முடிந்த ஏவுதல்களுக்கு முறையான அடையாளக் குறியீடு வழங்கப்படுவதில்லை. எழுந்தமானக் குறியீடுகளே வழங்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, VAGSL1 என்பது வான்கார்ட் எஸ்எல்வி 1 (Vanguard SLV 1) க்கு வழங்கப்பட்ட குறியீடு ஆகும்.
மேற்கோள்கள்