ஃபுல்டன் ஜான் ஷீன் (இயற்பெயர்: பீட்டர் ஜான் ஷீன், மே 8, 1895 – டிசம்பர் 9, 1979) என்பவர் அமெரிக்க நாட்டில் பிறந்த கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் ஆவார். இவர் தனது மறையுரைகளுக்காக, குறிப்பாக தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இவர் நிகழ்த்திய மறையுரைகளுக்காக மிகவும் அறியப்படுகின்றார். இவரின் புனிதர் பட்டமளிப்புக்கான பணிகள் முறைப்படி 2002இல் துவங்கின. புனிதர் பட்டமளிப்புக்கான பேராயம், இவரின் வாழ்க்கையை ஆராய்ந்தறிந்து இவர் வீரமான (மீநிலை) நற்பண்பு (Heroic Virtue) கொண்டுள்ளார் என பரிந்துரைத்ததன் அடிப்படையில், ஜூன் 2012இல், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார்.[2][3]
1919இல் பியோரா மறைமாவட்ட குருவாக இவர் திருநிலைப்படுத்தப்பட்டார்.[1] இறையியலில் இவருக்கு இருந்த அறிவுக்காக கர்தினால் மெர்சியரின் பன்னாட்டு மெய்யியலுக்கான விருது (Cardinal Mercier Prize for International Philosophy) 1923இல் இவருக்கு அளிக்கப்பட்டது. 1951இல் இவர் நியூயார்கின் துணை ஆயராக நியமிக்கப்படும் முன் இவர் இறையியல் மற்றும் மெய்யியல் ஆசிரியராகவும், பங்கு குருவாகவும் பணியாற்றினார். அக்டோபர் 21, 1966 முதல் அக்டோபர் 6, 1969 வரை இவர் ரோசெஸ்டர் மறைமாவட்ட ஆயராக இருந்தார். 1969இல் இப்பதவியிலிருந்து இவர் விலகியபோது இவர் நியு போர்ட்டின் பட்டம் சார்ந்த ஆயராக நியமிக்கப்பட்டார். இவரின் குறிக்கோளுரை Da per matrem me venire (உம் அன்னை வழியாய் உம்மை வந்தடைய அருள்வீர்) என்பது ஆகும். இது வியாகுலத் தாய்மரி என்னும் தொடர்பாடலில் வரும் வரியாகும்.[1]
இருபது ஆண்டுகளாக இவர் The Catholic Hour (1930–1950) என்னும் பெயரில் இரவு நேர வானொலி நிகழ்ச்சியினை வழங்கினார். பின்னர் Life Is Worth Living (1951–1957) என்னும் நிகழ்ச்சியினை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார். இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இவர் இருமுறை எம்மி விருதினை வென்றுள்ளார். 2009 முதல் இவரின் இந்த நிகழ்ச்சிகள் பல தொலைக்காட்சிகளில் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.[4] தொலைக்காட்சியின் மறைபரப்புவதில் ஷீனின் பங்களிப்பினால் இவர் இத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.[5][6]