தெற்கு லெபனான், பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் பெய்ரூத், லெபனான்
தேதி
செப்டம்பர் 23, 2024 (2024-09-23) – நிகழ்ந்து கொண்டிருக்கிறது 06:30 – (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
செய்து முடித்தவர்
இசுரேலிய பாதுகாப்புப் படை
விளைவு
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
இழப்பு
569+ killed 1,835+ injured
23 செப்டம்பர் 2024 அன்று இஸ்ரேல் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து நூற்றுக்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது. இத்திட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கைக்கு ஆபரேசன் ஆரோஸ் ஆன் தி நார்த் என்று பெயரிடப்பட்டுள்ளது. இசுரேல் பாதுகாப்புப் படை (The Israel Defense Force) தாங்கள் 1600 ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்ததாகவும் சீர்வோக ஏவுகணைகள், நீண்ட தூர மற்றும் குறுகிய தூர ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடங்கள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்கள் ஆகியவை அழிக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. [1] லெபனானின் அறிக்கைப்படி 492 பேர் இறந்துள்ளதாகவும் 1645 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2][3]
இசுரேலியப் படைகள் லெபனானில் வாழ்கின்ற பொதுமக்களிடம் ஹிஸ்புல்லா இயக்கம் ஆயுதங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் இடங்களிலிருந்து நகர்ந்து விட எச்சரித்துள்ளது. [4] இசுரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு லெபனான் மக்களிடம், "இசுரேலின் போரானது உங்களுடன் நடத்தப்படுவது அல்ல, அது ஹிஸ்புல்லா அமைப்புடனானது" என்று கூறியிருப்பதோடு, ஹிஸ்புல்லா இயக்கமானது அப்பாவி குடிமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.[5][6][7] அவர் லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள மக்களை இந்நடவடிக்கை முடியும் வரை இப்பகுதியை விட்டுக் காலி செய்து விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட நடவடிக்கை முடிந்த பிறகு அவர்கள் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிக் கொள்ளலாம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.[6]
இந்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் முன்னதாக நடைபெற்ற தொலையழைப்பி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் வெடிப்புகள் ஆகியவை ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மிகக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[8][9][10] ரத்வான் படையின் தளபதி இப்ராகிம் அக்கில் தாக்குதல் போன்றவையும் அவர்களின் பின்னடைவைக் குறிக்கிறது.[11]இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஈரானியத் தொடர்புடைய குழுவானது பன்னிரண்டுகளின் கணக்கில் ஏவுகலன்களை இசுரேலுக்குள் அனுப்பின.[12] இதன் காரணமாக நாசரேத்து மற்றும் ஜெசுரீல் பள்ளத்தாக்கில் வாழும் சமூகத்தினருக்குப் பாதிப்பு ஏற்பட்டது.[13]
பின்னணி
ஹமாசின் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகான ஒரு நாளில், சினமூட்டப்படாத ஹிஸ்புல்லா, இந்தத் தகராற்றில் வடக்கு இசுரேலிய நகரங்கள் மற்றும் இதர நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹமாசிற்கு ஆதரவாக இணைந்து கொண்டது.[14][15][16][17] அதிலிருந்து, ஹிஸ்புல்லா மற்றும் இசுரேல் இரு நாடுகளும் எல்லை தாண்டிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு இசுரேல் மற்றும் லெபனானில் உள்ள சமூகத்தினரை இடம் பெயரச் செய்துள்ளன. மேலும், எல்லையின் பகுதிகள் யாவிலும் பல்வேறு முக்கியமான கட்டிடங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் குறிப்பிடத்தக்க சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.[18][19]
செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் நாள்களில் ஆயிரக்கணக்கான தொலையழைப்பிகள் மற்றும் சிறுசேணி அல்லது நடைபேசிகள் போன்றவை தொடர்ச்சியாக வெடிக்கச் செய்யப்பட்டு பாதிப்புகள் நிகழ்ந்தன.[20] இந்தத் தாக்குதல்கள் 42 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்ததுடன் 3,500 பேர் (லெபனான் குடிமக்கள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர்) காயமுறவும் காரணமாய் அமைந்தது. பலர் இத்தாக்குதலுக்குப் பின்னணியில் இசுரேல் இருக்கக்கூடும் என கருத்து தெரிவித்தனர். இருப்பினும் இசுரேலிய அலுவலர்கள் இந்நிகழ்வில் தாங்கள் ஈடுபடவில்லையெனக் கூறி வருகிறார்கள். ஹிஸ்புல்லா அமைப்பினர் இதை ஒரு போர்ப் பிரகடனமாகக் கருதிக்கொண்டு சில நாள்களுக்குப் பிறகு ஒரு ஏவூர்தித் தாக்குதலை வடக்கு இசுரேல் மீது நடத்தினர்.[21] 2024 செப்டம்பர் 20 அன்று ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு நடவடிக்கை அலகான ரெத்வான் அமைப்பின் தலைவரும் 1980களில் நடந்த ஒரு உயரளவு தீவிரவாதத் தாக்குதலை நடத்திய வருமான இப்ராகிம் அக்கில், பெய்ரூத்தில் நடந்த இசுரேலியத் தாக்குதலில் அவருடனிருந்த மூத்த தளபதிகளுடன் கொல்லப்பட்டார்.
வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பாக இசுரேல் லெபனானில் உள்ள பொதுமக்களை அவ்விடத்தை விட்டு வெளியேற எச்சரிக்கை விடுத்தது.[22]
வான்வழித் தாக்குதல்கள்
லெபனான்
இசுரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தாங்கள் தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள 1,300 ஹிஸ்புல்லா இராணுவத் தளங்களைத் தாக்கியதாகக் கூறுகிறது.[23] ஒரு வான்வழித் தாக்குதலானது பெய்ரூத்தின் வடக்கே பைப்லோஸிற்குத் தொலைவிலுள்ள பகுதியில் நிகழ்ந்தது. முதல் வான்வழித்தாக்குதல்கள் சரியாக கிழக்கு ஐரோப்பிய நேரம் 06.30 மணியளவில் நடந்தது. இத்தாக்குதலில் மருத்துவமனைகள் மற்றும் அவசர ஊர்திச் சேவை வாகனங்கள் தாக்கப்பட்டதாக லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் ஃபிராசு அபியாத் தெரிவித்துள்ளார்.[24][25]
பெய்ரூத்திற்கு அருகாமையில் உள்ள பெய்ர் அல்-அபேத்தில் மூன்று ஏவுகணைகள் தாக்கியதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.[25] இசுரேலிய அலுவலர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த வான்வழித் தாக்குதல் ஹிஸ்புல்லாவின் தெற்கு முகாமின் தளபதியாக விளங்கும் அலி கராக்கியைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது.[26][27] ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பினர் அவர் இத்தாக்குதலிலிருந்து தப்பியுள்ளதாகக் கூறுகின்றனர்.[28][24]
இசுரேலின் அறிக்கையின்படி மேற்கு பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள காலியா பகுதியில் ஐந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் கூறுகிறது. இவற்றில் ஒன்று குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டினைத் தாக்கி ஒரு தந்தை மற்றும் மகளைக் கொன்றுள்ளதாகவும் தெரிகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் இசுரேலின் மீது மொத்தமாக 150 ஏவூர்திகளைச் செலுத்தியுள்ளது. இவை மேற்குக் கரை, கோலான் மேட்டு நிலம், ஆகியவற்றில் 5 பேரை காயப்படுத்தியுள்ளது. மேலும், இந்த அமைப்பானது முதலில் 35 ஏவூர்திகளை வடக்கு இசுரேலில் காணப்படும் இசுரேலிய பாதுகாப்புப் படையின் இராணுவத் தளவாடங்கள் இருந்த பகுதியின் மீது செலுத்தியது. கீழ் கலிலியில் உள்ள ஒருவரை இது இலேசாகக் காயப்படுத்தியுள்ளது.[29] பின்னர் இது 80 ஏவுகணைகளை, மேற்குக் கரைப் பகுதியில் காணப்படும் பல்வேறு அமைவிடங்களைக் குறிவைத்துச செலுத்தியுள்ளது.[30]
இறப்புகள் மற்றும் இழப்புகள்
இத்தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் 1,600 பேர் காயமுற்றிருக்கலாம் என்றும் லெபனான் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. லெபனான் சுகாதாரத் துறை 35 குழந்தைகள், 58 பெண்கள் மற்றும் பல்வேறு மருத்துவப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. ஆனால், இறந்தோரில் இராணுவத்தைச் சேர்ந்தோர் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்கவில்லை.[31][32] லெபனீசு பல்கலைக்கழகம் ஒரு தாக்குதலில் தங்கள் பல்கலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.[33] 1975–1990 லெபனான் உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பிறகு நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவேயாகும்.[34]
அலி அபுரியா மற்றும் முகமது சலே ஆகிய இரண்டு மூத்த ஹிஸ்புல்லா தளபதிகள் இந்த வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.[35][36] மகமூத் அல் நதீர், ஹமாஸ் அல் காசம் பிரிகேடுகளின் களத் தளபதியும் தெற்கு லெபனான் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.[37]
எதிர்வினைகள்
இந்த வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இசுரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79வது அமர்வுக் கூட்டத்திற்காக நியூயார்க்கிற்குச் செல்லவிருந்த ஒரு பயணத்தை ஒத்தி வைத்தார். பின்னர் அவர் நாடு பாதுகாப்புச் சமநிலையற்று இருந்த காரணத்தால் அதைச் சமநிலைப் படுத்தும் மாற்றத்தை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு இஸ்ரேலிய அதிகாரி பின்னர் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இசுரேலிய பாதுகாப்புப் படையினரின் செயல்பாட்டிற்கு அரசியல் நோக்கர்கள் மத்தியில் "பெரும் திருப்தி" இருப்பதாகக் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட்டும் இந்த நடவடிக்கைக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
லெபனான் பிரதம அமைச்சர் நஜிப் மிகடி, அமைச்சரவைக் கூட்டத்தில் பேசுகையில், வான்வழித் தாக்குதல்களை "அழிவுப் போர்" என்று அழைத்தார். மேலும், லெபனானின் கிராமங்களையும் நகரங்களையும் அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் "ஒரு அழிவுகரமான திட்டத்தைக்" கொண்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.[38]
பிரதம மந்திரி நஜிப் மிகாட்டிக்கு ஆதரவாக நிற்கும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உள்ள லெபனான் பிரதிநிதி, வான்வழித் தாக்குதல்கள் "சமூக ஒழுங்கிற்கு அச்சுறுத்தல்" என்று விவரித்தார். லெபனானில் அனைத்து அத்தியாவசிய நீதித்துறை பணிகளும் செப்டம்பர் 24 அன்று இடைநிறுத்தப்பட்டன.[39]