ஒன்று உலகக் கண்காணிப்பகம் (One World Observatory), என்பது அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரத்தின், கீழ் மன்ஹாட்டன் (Lower Manhattan) பகுதியில் மிக உயரமான வானளாவியான (Skyscrapper) 1 உலக வர்த்தக மையத்தின் (One World Trade Center) உச்சியில், 100, 101 மற்றும் 102 ஆகிய மூன்று நிலைகளில், அமைந்துள்ள கண்காணிப்பு மேல்தட்டுத் தளம் (Observation Deck) ஆகும்.[1]
மன்ஹாட்டனில் அமைந்துள்ள ஒரு மிக உயர்ந்த கண்காணிப்புத் தளத்தில், தரையிலிருந்து கூரை வரையிலான கண்ணாடி ஜன்னல்கள் வழியே மன்ஹாட்டன் தீவு, குயீன்சு தீவு, புரூக்ளின் தீவு, ஸ்டேட்டன் தீவு, எல்லீசுத் தீவு, சுதந்திரதேவி சிலை (Statue of Liberty), மற்றும் நியூ ஜெர்சி (New Jersey) மற்றும் கனெடிகட் (Connecticut) மாநிலங்களின் பகுதிகள் போன்றவற்றைக் கண்டுகளிக்கலாம். இங்கிருந்து இற்றைநிலத் தொழில் நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்பட்ட வாய்ஸ் காணொளி, காணொளி காட்சித் தொகுப்பு உலா, உருவகப்படுத்தப்பட்ட நியூ யார்க் நகரின் வரலாற்றைப் பார்த்தவாறே பயணிக்க உதவும் உயர்தொழிநுட்ப மின்தூக்கிகள், ஃபாரெவர் திரையரங்க ஒலி - ஒளிக் காட்சியகம், ஒன்று உலகக் குறியிடத் தேடுபொறி, ஸ்கைபோர்ட்டல் போன்ற வசதிகள், நியூயார்க் நகரம், அதன் பெருநகரங்கள் (Boroughs), 1 உலக வர்த்தக மையம் மற்றும் ஒன்று உலகக் கண்காணிப்பகத்தின் வரலாறு பற்றி பயணிகள் அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன.[2]
நியூயார்க்: வானளாவிகள் மற்றும் கண்காணிப்புத் தளங்கள்
நியூயார்க் நகரில் மொத்தம் 302 வானளாவிகள் [3]
உள்ளன. இவற்றுள் பெரும்பாலான வானளாவிகள் மன்ஹாட்டன் தீவின் மையப்பபகுதியிலும் (Midtown), கீழ்பகுதியிலும் (Downtown) குவிந்துள்ளன. எனினும் சில வானளாவிகள் குயீன்சு (Queens) மற்றும் பிராங்சு (Bronx) பரோக்களில் (Borough) அமைந்துள்ளன. [4]
நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள வானளாவிகளுள் ஐந்தில் மட்டுமே, சுற்றுலாப்பயணிகள் கண்டுகளிக்கும் வண்ணம், கண்காணிப்புத் தளங்கள் (Observation Decks) அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டன் பரோவில் (Borough) அமைந்துள்ள ஐந்து கண்காணிப்பு தளங்கள் இவையாகும்: 1. எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (Empire State Building), 2. டாப் ஆஃப் தி ராக் (Top of the Rock), 3. ஒன்று உலகக் கண்காணிப்பகம் (One World Observatory), 4. எட்ஜ் (Edge) மற்றும் 5. சம்மிட் ஒன் வாண்டர்பில்ட் (SUMMIT One Vanderbilt).
இந்த ஐந்து கண்காணிப்புத் தளங்களை ஒப்பிடும் பட்டியல் இதுவாகும்:[5][6]
பட்டியல் 1 நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐந்து கண்காணிப்புத் தளங்கள்: ஒரு ஒப்பீடு
கண்காணிப்பகம்
அமைவிடம்
தொடக்கம்
கண்காணிப்பக உயரம்
கட்டணம்
எம்பயர் ஸ்டேட்
கட்டிடம்
மன்ஹாட்டன்
மையப்பகுதி
1931
மாடி 86: 1050 அடி >
திறந்தவெளி கண்காணிப்பு தளம்
மாடி 102:1250 அடி >
கண்ணாடியால் மூடப்பட்ட
கண்காணிப்பு தளம்
$ 42 முதல் $ 400 வரை
டாப் ஆஃப் தி ராக்
மன்ஹாட்டன்
மையப்பகுதி
கண்காணிப்பகம் 2005
(வானளாவி 1933)
850 அடி (67, 69 மற்றும்
70வது தளங்கள்)
உட்புற மற்றும் வெளிப்புற
கண்காணிப்பு தளங்கள்
$ 34 முதல்
ஒன்று உலகக் கண்காணிப்பகம்
மன்ஹாட்டனின்
கீழ்ப்பகுதி
மே 29, 2015
102வது தளம், 1,268 அடி
உட்புற கண்காணிப்பு தளம்
$43 முதல்
(நான்கு வகைக் கட்டணங்கள்)
தி எட்ஜ்
ஹட்சன் யார்ட்ஸ்
2020
100 வது தளம் 1131 அடி
அபெக்ஸ் வெளிப்புற
கண்காணிப்பு தளம்
$ 36 ஸ்கைடெக்
$ 185 சிட்டி கிளைம்ப்
சம்மிட் ஒன் வாண்டர்பில்ட்
மன்ஹாட்டன்
மையப்பகுதி
2021
92வது தளம் 1063 அடி
101வது தளம் 1210 அடி >
அசென்ட் மின்தூக்கி வழியாக.
நியூயார்க்கின் இரண்டாவது
மிக உயர்ந்த வெளிப்புற தளம்
1 உலக வர்த்தக மையம் (One World Trade Center) என்பது நியூயார்க் நகரின்கீழ் மன்ஹாட்டனில் மீண்டும் கட்டப்பட்ட உலக வர்த்தக மைய வளாகத்தின் முக்கிய வானளாவியாகும். இது 285 ஃபுல்டன் தெருவில் அமைந்துள்ளது. இதன் நுழைவாயில் வெஸ்ட் தெருவில் உள்ளது. 1776 அடி (541 மீ) உயரம் கொண்ட இஃது அமெரிக்காவின் முதலாவது உயரமான வானளாவியும், மேற்கு அரைக்கோளத்திலும் முதலாவது உயரமான வானளாவியும் ஆகும். உலகத்தில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ள வானளாவியும் இதுவேயாகும். 1776 அடி உயரம் என்பது அமெரிக்கா விடுதலை பெற்ற ஆண்டான கி.பி. 1776 ஜக் குறிக்கிறது. [22]
இதைவிட அதிகமாக, 2719,82 அடி உயரம் கொண்ட, ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைந்துள்ள, புர்ஜ் கலீஃபா வானளாவியே உலகின் மிக உயரமான வானளாவிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
வரலாறு
இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர், பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்கள், மற்றும் அரசு நிறுவனங்களுக்கான மைய வசதியாக நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுக ஆணையத்தால் "விடுதலைக் கோபுரம்" (Freedom Tower) என்ற பெயரில் இந்த வானளாவி , 16-ஏக்கர் (6.5 ha) பரப்பளவுள்ள உலக வர்த்தக மைய வளாகத்தின் வடமேற்கு முனையில், கட்டப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 11, 2001 ஆம் தேதியன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் நினைவாகக் கட்டப்பட்டது ஆகும். நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுக ஆணையம் (PANYNJ), மார்ச் 26, 2009 ஆம் தேதியன்று, இந்த வானளாவிக்கு, "1 உலக வர்த்தக மையம்" என்று சட்டபூர்வமாகப் பெயர்சூட்டியது. [23][24][25] 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய வளாகத்தில் பல கட்டிடங்கள் உள்ளன. எனினும் இங்கு மையமாகத் திகழ்வது, 104 மாடிகள் மற்றும் 1,776 அடி (541.3 மீ) உயரம் கொண்ட 1 உலக வர்த்தக மைய வானளாவிய கட்டிடம் மட்டுமே. இது $3.9 பில்லியன் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,368 அடி (417.0 மீ) கோபுரத்தின் கூரையின் மேல் அமைக்கப்பட்டுள்ள 407.9 அடி உயரம் கொண்ட தூபியும் அடங்கும். இந்த வானளாவியில் 94 மாடிகள் உள்ளன, மேல் தளம் 104 என எண்ணிடப்பட்டுள்ளது. இந்த 104 ஆம் மாடி 1,268 அடி (386.5 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. இதன் முன்னோடியான உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் செப்டம்பர் 11, 2001 அன்று பயங்கரவாதத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த "1 உலக வர்த்தக மையம்" நவம்பர் 3, 2014 ஆம் தேதியன்று திறக்கப்பட்டது.[20] இந்தக் கட்டிடத்தில் 3.5 மில்லியன் சதுர அடி இடம் உள்ளது, இதில் அலுவலகங்கள், ஊர்தி நிறுத்தம் மற்றும் ஒரு ஒன்று உலக கண்காணிப்பகம் ஆகியன அடங்கும்.[20]
ஒன்று உலகக் கண்காணிப்பகம்
ஒன்று உலகக் கண்காணிப்பகம் என்பது 1 உலக வர்த்தக மையத்தின் உச்சியில், அமைக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த இந்த உள்ளரங்க கண்காணிப்பு மேல்தட்டுத் தளம் (Indoor Observation Deck) ஆகும். அதாவது இதன் 104 ஆவது மாடி 1,268 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 101 வது மாடியில் உணவகங்கள் அமைந்துள்ளன. 100 வது மாடியில் பொதுமக்களுக்கான முக்கிய பார்வை தளம் உள்ளது. 9,000 சதுர அடி பரப்பளவில் [26] அமைந்துள்ள இதன் உள்ளரங்கம் சுற்றிலும் கண்ணாடிச் சுவரால் அடைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக.இந்த தளத்தின் உட்புறம் முழுதும் காலநிலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இத்தளம் மே 29, 2015 ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, ரிப்பன் வெட்டும் விழாவுடன் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. [21]
டாப் ஆஃப் தி ராக் மற்றும் எட்ஜ் கண்காணிப்புத் தளங்களில் உள்ளது போல இங்கு வெளிப்புறக் கண்காணிப்புதளம் அமைக்கப்படவில்லை என்பது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இந்த உள்ளரங்கக் கண்காணிப்பு தளத்திலிருந்து 360 பாகைக் கோணக் காட்சியாக நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டன் தீவு, குயீன்சு தீவு, புரூக்ளின் தீவு, ஸ்டேட்டன் தீவு ஆகிய பரோக்களையும், நியூயார்க்கின் நிதி மாவட்டம் (Financial District of New York), ஹட்சன் ஆறு, புரூக்ளின் பாலம், மன்ஹாட்டன் பாலம், அட்லாண்டிக் பெருங்கடல், எல்லீசுத் தீவு, சுதந்திரதேவி சிலை, நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் மாநிலங்களின் பகுதிகளையும், பறவைப் பார்வையாகக் காணலாம்.
கண்காணிப்பகத்திலிருந்து காட்சிகள்
ஒன்று உலகக் கண்காணிப்பக நுழைவாயில்
மன்ஹாட்டனின் தோற்றம் 3
மன்ஹாட்டனின் தோற்றம் 2
மன்ஹாட்டனின் தோற்றம் 1
நியூயார்க் நகரம் தோற்றம்
ஹட்சன் ஆறு தோற்றம்
டவுன்டவுன் மற்றும் கவர்னர் தீவின் தோற்றம்
புரூக்ளின் பாலம் மற்றும் புரூக்ளின் தீவின் தோற்றம்
ஜெர்சி நகர் தோற்றம்
உணவகம் தோற்றம்
கண்காணிப்பகப் பரிசுக்கடை
கண்காணிப்பக ஸ்கைபோர்ட்டல்
கண்காணிப்பக சிட்டி பல்ஸ் வளையம்
திறந்திருக்கும் நேரம்
முகவரி: 285 ஃபுல்டன் தெரு, நியூயார்க், NY 10007
நியூயார்க் வான்வரையின் (New York Skyline) அற்புதமான காட்சிகளை அனுபவிக்க ஆண்டுதோறும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். [27] ஒன்று உலகக் கண்காணிப்பகம் வாரத்தில் 7 நாட்களும் காலை 08:00 அல்லது 09:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும், விடுமுறை நாட்கள் மற்றும் கோடைக்கால நாட்களில் வேலைநேரம் நீட்டிக்கப்படுவது வழக்கம். இங்கு செல்லும் முன்னர் சுற்றுலாப்பயணிகள் இந்த மையத்தின் வலைத்தளத்தை சோதித்துக் கொள்ளலாம். மூடும் நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாக வரும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதன் பின்னர் அனுமதி கிடையாது.[1]
பார்வையிட சிறந்த நேரம்
இது மிகவும் பெயர்பெற்ற சுற்றுலாத் தலம் என்பதால் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் மிகுதியாக வருவர். எனவே பிற்பகலில் சென்றால் கூட்டத்தைத் தவிர்க்கலாம். மாலை வேளைகளில் சென்றால் சூரியன் மறைவதையும், நியூயார்க் நகரம் விளக்கொளியில் மின்னுவதையும் காணலாம். இணையம் வாயிலாக முன்பதிவு வசதி உள்ளதால் முன்பதிவு செய்துகொள்ளலாம். மூடுபனி, மேகமூட்டம், மற்றும் மழைக்காலங்களில் தெளிவாகப் பார்க்க இயலாது.[1]
நுழைவுச்சீட்டு
சலுகைகள்
1. நுழைவுச்சீட்டைப் பயன்படுத்தி மூன்று கண்காணிப்பு நிலைகளிலிருந்து (மாடிகள் 100-102) 360° கோணத்தில் நியூயார்க் நகரத்தின் காட்சிகளைக் கண்டுகளிக்கலாம்.
2. முன்னுரிமை பாதை: பாதுகாப்பு, மின்தூக்கி மற்றும் வெளியேற்றம்
உலக வர்த்தக மையத்தின் வடமேற்கு மூலையில் வெஸ்ட் சாலையை ஒட்டி அமைந்துள்ள மேற்கு பிளாசாவில் கண்காணிப்பகத்தின் நுழைவாயில் அமைந்துள்ளது. முகவரி: 117 வெஸ்ட் சாலை, நியூயார்க், NY 10006. பயணிகள் தங்கள் மடிக்கணனி, கைபேசி, ஐபாடு மூலம் ஆன்லைனில் நுழைவுச் சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். இங்குள்ள பாக்ஸ் ஆபிஸிலும் நுழைவுச்சீட்டுகளை வழங்குகிறார்கள். நுழைவுச் சீட்டினை காட்டி உள்ளே நுழைந்ததும் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதனைச் சுற்றிப்பார்க்க ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை ஒதுக்கலாம்.
'வாய்ஸ்' காணொளி
கண்கவர் காட்சிகளுடன், 1 உலக வணிக மையத்தை உருவாக்கியவர்களைப் பற்றிய 'வாய்ஸ்' (Voice) என்ற காணொளியையும் காணலாம். 1600 ஆம் ஆண்டுகளில் டச்சுக்காரர்களின் குடியேற்ற காலத்திலிருந்து இன்று வரை நியூயார்க் நகரத்தின் வளர்ச்சியை மீண்டும் உருவாக்கிக் கண்முன் நிறுத்தும் ஒரு மெய்நிகர் கால இடைவெளியும் காட்சியாக பயணியர் முன் விரிகிறது.
உலகளாவிய வரவேற்பு மையம்
உலகளாவிய வரவேற்பு மையத்தின் (Global Welcome Center) சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள பொருத்தப்பட்டுள்ள 145 காணொளித் திரைகளால் இயக்கப்படும், 'ஹொரைசன் கிரிட்' (Horizon grid) காணொளிச் சுவரில் (Video Wall) தோன்றும் விளக்கக்காட்சிகள் திகைக்கவைக்கின்றன. இத்திரைகள் வாயிலாக, வெவ்வேறு அமெரிக்க மாநிலங்கள் (Provinces), மற்றும் பிற நாடுகளின் (Other Countries) கண்கவர் காட்சிகளையும், பல மொழிகளில் நல்கும் வரவேற்பையும் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம். ஒவ்வொரு பார்வையாளரும் தங்கள் சொந்த மாநிலம் அல்லது தாய்நாட்டினை நினைவுகூறும் வகையில் இந்த வரவேற்பறை காணொளிக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.[22]
காணொளி காட்சித் தொகுப்பு உலா
காணொளிச் சுவரைக் (Video Wall) கடந்து செல்கையில் கவர்ச்சியான குரலொலிகள் கேட்கும். 1 உலக வர்த்தக மையத்தை வடிவமைத்து கட்டிய ஆண்களும், பெண்களும் தொடராக இடம்பெறும் காணொளிக் காட்சித் தொகுப்பு உலாவாக (a walk-through video montage) காட்டப்படுகின்றன. இந்த எழுச்சியூட்டும் கதைகள், பார்வையாளர்களை ஒரு பரவச நிலைக்கு இட்டுச் செல்கின்றன.
மன்ஹாட்டன் அடித்தளம்
இறுதியாக, நியூயார்க் நகரம் மற்றும் உலக வர்த்தக மையம் கட்டப்பட்ட மன்ஹாட்டன் அடித்தளத்தை (Manhattan bedrock) காட்டும் ஒரு கண்காட்சியான அடித்தளங்களை (Foundations) பார்வையாளர்கள் நெருக்கமாகக் காணலாம்.
மின்தூக்கிகள்
இற்றைநிலத் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்ட ஸ்கைபாட் (SkyPod™) மின்தூக்கிகள் இங்கு பயணிக்களுக்கான பணியில் உள்ளன. இவை வடஅமெரிக்காவிலேயே அதிவிரைவான மின்தூக்கிகள் ஆகும். ஸ்கைபாடின் பக்கச் சுவர்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள், 102 மாடிகளில் மீது ஏறும் காட்சியினை கண்ணாடிச் சுவர்களின் நடுவே நின்றவாறு, 1600 ஆம் ஆண்டுகளில் டச்சப் இந்நகரத்தில் குடியேறிய காலத்திலிருந்து இன்று வரை, நியூயார்க் நகரத்தின் வளர்ச்சியை மீண்டும் உருவாக்கிக் கண்முன் நிறுத்தும் ஒரு கண்கவர் மெய்நிகர் காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.[22]
ஃபாரெவர் திரையரங்க ஒலி - ஒளிக் காட்சியகம்
மின்தூக்கியிலிருந்து வெளியேறியதும், 102 ஆவது மாடியில் பயணிகளை வரவேற்பது சீ ஃபாரெவர்® திரையரங்கத்தின் (See Forever® Theater) உயர் தொழில் நுட்ப ஒலி - ஒளிக் காட்சியகமாகும். நியூயார்க் வான்வரை குறித்து இரண்டு நிமிடம் தொடராக வரும் ஒலி - ஒளிக் காட்சிகளின் தொகுப்பு ஆகும்.
நியூயார்க் நகரத்தின் புரூக்ளின் பாலம், வானளாவிகள், நியூயாரக் சாலைப் போக்குவரத்து, மஞ்சள் வண்ண வாடகைக்கு கார், நியூயார்க் மக்கள் சாலையின் நடைபாதைகளில் நடந்து செல்லும் காட்சி, டைம்சு சதுக்கம், பாதாள இரயில் ஒரு நிலையத்தில் நின்று செல்லும் காட்சி, நியூயார்க் நகரத்தின் சென்ட்ரல் பூங்கா காட்சி, கூடைப்பந்தாட்டம், செயற்கை நீரூற்றுகள், ஒளி உமிழும் இருமுனையத் திரை (L.E.D) விளம்பரங்கள், என்று நியூயார்க் நகரத்தின் உணர்வைப் படம்பிடிக்கும் வியக்கத்தக்க ஒலி - ஒளிக் காட்சித் தொகுப்பாகும். நியூயார்க் நகரம் குறித்த முதல் கண்ணோட்டம் இது எனலாம்.[22]
ஒன்று உலகக் குறியிடத் தேடுபொறி
ஒன்று உலகக் குறியிடத் தேடுபொறி (One World Explorer) என்பது ஊடாடும் ஐபாடு (I-POD) ஆகும். நியூயார்க் நகரத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஊடாடும் மெய்நிகர் வழிகாட்டி (Interactive Virtual-reality Guide) ஆகும். இது நாம் பயன்படுத்தும் ஆப்பிள் ஐபாடு போல உள்ளது. பொது அனுமதி நுழைவுச் சீட்டுடன் செல்லும் பயணிகள் இதனை $ 10 கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஐபாடில் இரண்டு அலைவரிசைகள் உள்ளன: ஒன்று ஸ்கைவியூ (Skyview) மற்றொன்று உணவகம் (Restaurant). ஸ்கைவியூ அலைவரிசையைத் தேர்வு செய்தால், ஒரு புதிய திரை தோன்றும். இந்த திரையில் நியூயார்க் நகரத்தின் முக்கிய குறியிடங்களான வானளாவிகள், பாலங்கள், சாலைகள், ஆறுகள், போன்றவற்றை 40 திறவுச் சொற்களாக (Keywords) மாற்றி உள்ளிட்டுள்ளார்கள். குறிப்பிட்ட திறவுச் சொல்லின் மீது விரலை ஒற்றினால், ஒரு புதிய திரையில் குறியிடம் குறித்த ஒரு காணொளிக் காட்சி தோன்றும். தேடிய குறியிடம் (Site) குறித்த வியப்பூட்டும் தகவல்கள் ஒலி - ஒளிக்காட்சியாக இத்திரையில் விரிகிறது.[2]
உணவக அலைவரிசையில் நியூயார்க் நகரத்தின் மிகவும் பிரபலமான 10 உணவகங்களை சுற்றுப்பயணமாகக் காட்டுகிறார்கள். பயணிகள் விரும்பிய உணவகத்தைத் தேடுபொறியில் விரலொற்றி தேர்ந்தெடுத்துக் கண்டுகளிக்கலாம். இதன் மூலம் நியூயார்க் நகரில் உள்ள உணவகங்களில் எங்கு, என்ன சாப்பிடுவது என்பது குறித்த புரிதல் ஏற்படும்.[22][2]
ஸ்கை போர்ட்டல்
ஸ்கை போர்டல் என்பது 14 அடி அகல கண்ணாடி வட்டம் ஆகும். இந்த வட்டத்தின் மீது ஏறி நிற்கும் பயணிகளின் காலடியில் பொருத்தப்பட்டுள்ள ஒளி உமிழும் இருமுனையத் திரைகளில் (L.E.D Screen) நியூயார்க் நகரின் சிலிர்ப்பூட்டும் காட்சிகளைக் காணலாம். 1 உலக வர்த்தக மையத்தின் கண்காணிப்பு மேல்தட்டுத் தளத்தின் தரையில் பொருத்தப்பட்டுள்ள "ஸ்கை போர்ட்டல்" (SKYPORTAL) என்ற காணொளி சட்டங்கள் வாயிலாக, வானளாவியின் தூபியில் பொருத்தப்பட்டுள்ள உயர் வரையறை (High Definition (HD) கேமராக்களில் இருந்து நியூயார்க் நகரச் சாலைகள், சாலைப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம், கட்டிடங்கள், போன்றவை நிகழ்நேரக் காட்சிகளாக (Realtime Videos) பார்வையாளர்களின் காலடியில் விரிகின்றன. நகரத்தின் மிக உயராமான இடத்திலிருந்து பார்க்கையில், தங்கள் காலடியின் கீழே இந்தக் காட்சிகள் நிகழ்வது போன்ற தோற்றத்தை உண்டு பண்ணுவதால் பயணிகள் திகைத்துப் போகிறார்கள்.[22][2]
சிட்டி பல்ஸ்
சிட்டி பல்ஸ்™ வளையம் (City Pulse™ Ring) என்பது சைகை கட்டுப்பாடு மற்றும் பயணியருக்கான மென்பொருள் (gesture control and custom software) ஆகும். இங்கு பயண அமைப்பாளர் (Tour Ambassador) வழிகாட்டுதல்களுடன் பயணிகள் இயக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட காணொளித் திரைகளால் ஆன வளையம் ஆகும். இந்த ஊடாடும் பொறி வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் தொடர்புடைய விளக்கங்களைத் தெரிந்துகொள்ளலாம்.[2][29]
உணவகம்
ஒன் டைன் மற்றும் பார், ஒன் மிக்ஸ், என்பன 101வது மாடியில் அமைந்துள்ள உணவகங்கள் ஆகும்!. நியூயார்க் நகரத்துப் பட்டியல் உணவுகள் இங்கு கிடைக்கின்றன. உணவுக்கு முன்பதிவு செய்யலாம். நொறுக்குத்தீனி (Snacks), குளிர்பானங்கள், காப்பி, தேநீர் போன்றவை எப்போதும் கிடைக்கும்.[2]
தகுதிகள் மற்றும் குறைபாடுகள்
சிறப்புத் தகுதிகள்
நியூயார்க் நகரத்தின்:
1. உயரமான வானளாவியிலிருந்து நியூயார்க் நகரத்தின் மிகவும் கவர்ச்சிகரமான காட்சிகளைக் காணும் வசதி,
2. மிக உயர்ந்த கண்காணிப்பு தளத்தைச் சுற்றிப்பார்க்கும் வசதி,
3. இங்கு பயணிகளுக்கு வழங்கப்படும் உயர்தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் வசதிகள்,
4. கீழ் மன்ஹாட்டன் பகுதியைத் தெளிவாகப் பார்க்கும் வசதி
குறைபாடுகள்
1. வெளிப்புற கண்காணிப்பு தளம் அமைக்கப்படவில்லை.
2. கீழ் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள இக்கண்காணிப்பு தளத்திலிருந்து மன்ஹாட்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ள சென்ரல் பூங்கா, ஹட்ஸன் யார்டு, ஆகியவற்றைக் காண இயலாது.
3. நுழைவுச்சீட்டு கட்டண விகிதம் சற்று அதிகம்.