வெப்பக் கொண்மை, வெப்பக் கொள்ளளவு அல்லது வெப்பக் கொள்திறன் (heat capacity, thermal capacity) என்பது குறித்த நிறை உள்ள பொருளுக்கு எவ்வளவு வெப்ப ஆற்றலைத் தந்தால் அப்பொருளின் வெப்பநிலை ஒரு பாகை அளவுக்கு உயரும் என்பதைக் குறிக்கும் ஓர் அடிப்படையான பண்பு. அதே வேளை தன்வெப்பக்கொள்ளளவு (specific heat capacity) அல்லது தன்வெப்பக்கொண்மை என்பது ஓரலகு நிறையுடைய பொருளின் வெப்பநிலையை ஒரு பாகை அளவுக்குஉயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவினைக் குறிக்கும். இப் பண்பு 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுகாட்லாந்து இயற்பியலாளர் யோசப் பிளாக் (1728-1799) என்பவரின் ஆய்வுகளின் வழி உணர்ந்த ஒன்று[1].
அதிக வெப்பக்கொண்மை உள்ள பொருளின் வெப்பநிலையைக் குறித்த அளவுக்கு உயர்த்த அதிக வெப்ப ஆற்றல் தேவைப்படும். 25 செல்சியசு வெப்பநிலையில் உள்ள ஒரு கிலோகிராம் எடையுள்ள நீரின்வெப்பநிலையை ஒரு பாகை கெல்வின் அளவுக்குக் கூட்டத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் 4.1813 கிலோஜூல் ஆகும். ஆகவே நீரின் தன்வெப்பக்கொண்மை 4.1813 கிஜூ/கிகி.கெ). ஆனால் ஒரு கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை (25 செல்சியசு), ஒரு பாகை கெல்வின் அளவு வெப்பநிலை உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் அளவு 0.1291 கிஜூ/கிகி.கெ). மட்டுமே. ஆகவே தங்கத்தின் தன்வெப்பக்கொண்மை நீரின் தன்வெப்பக்கொண்மையை விடக் குறைவு.
வெப்பக்கொண்மையை குறித்த எடையுள்ள பொருளை அடிப்படையாகக் கொண்டு அளப்பதைப் போலவே ஒரு குறிப்பிட்ட கொள்ளளவு அல்லது பருமனளவு உள்ள பொருளுக்கு என அளப்பதும் வழக்கம். இதனை நிலைகொள்ளளவு வெப்பக்கொண்மை (c v) என்பர். அதே போல ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு எடை கொண்ட அளவுக்கும் (மோல் அளவுக்கும்) அளப்பதுண்டு. இதனை மோலார் வெப்பக் கொண்மை அல்லது மோலார் வெப்பக் கொள்திறன் என்று கூறுவர். இப்படி ஒரு மோலுக்கான வெப்பக் கொண்மையை அறியும் பொழுது பெரும்பாலும் எல்லாப் பொருளும் டியூலாங்-பெட்டிட் விதி வரையறை செய்த 25 கிஜூ/(மோல். கெ) அளவுக்குள்தான் இருக்கின்றன. ஆனால் அமோனியா, கார்பன்-டை-ஆக்சைடு போன்ற ஒருசில வளிமப் பொருள்களுக்குக் கூடுதலான மோல் வெப்பக்கொண்மை உள்ளன. சில பொருள்களின் வெப்பக் கொண்மைகள் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
All measurements are at 25 °C unless otherwise noted. Notable minima and maxima are shown in maroon.
ஒரு பொருளில் உள்ள அணுத்தொடர்களின் அதிர்வெண் இயல்புகளைக் கொண்டு டிபை என்பவர் வெவ்வேறு வெப்பநிலைகளில் வெப்பக் கொண்மை எவ்வாறு மாறும் என்பது குறித்து டிபை விதி என்னும் ஒரு நெறிமுறையைத் தந்தார். ஐன்ஸ்டைன் இந்த டிபை விதியைவிட நெருக்கமான திருந்திய நெறிமுறை ஒன்றை வழங்கினார்.