லுட்விக் விட்கென்ஸ்டைன்

லுட்விக் ஜோசப் ஜொஹான் விட்கென்ஸ்டைன்
காலம்20ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிபகுப்பாய்வு மெய்யியல், Post-Analytic Philosophy
முக்கிய ஆர்வங்கள்
தருக்கம், மீவியற்பியல், மொழிசார் மெய்யியல், கணித மெய்யியல், மனம்சார் மெய்யியல், அறிவாய்வியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
"Meaning is use," private language argument, conceptual therapy.

லுட்விக் விட்கென்ஸ்டைன் எனச் சுருக்கமாக அழக்கப்படும் லுட்விக் ஜோசப் ஜொஹான் விட்கென்ஸ்டைன் (Ludwig Josef Johann Wittgenstein - 26 ஏப்ரல் 1889 – 29 ஏப்ரல் 1951) என்பவர், தருக்கம், கணித மெய்யியல், மனம்சார் மெய்யியல், மொழிசார் மெய்யியல் போன்ற துறைகளில் பணிபுரிந்த ஒரு ஆஸ்திரிய மெய்யியலாளர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மெய்யியலாளர்களுள் ஒருவரான இவரது செல்வாக்கு பரவலானது ஆகும்.

62 ஆவது வயதில் இவர் இறப்பதற்கு முன் எழுதிய ஒரே நூல், டிரக்டாட்டஸ் லோஜிக்கோ-பிலோசோபிக்கஸ் (Tractatus Logico-Philosophicus) என்பது. இவர் தனது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் எழுதிய மெய்யியல் ஆய்வு (Philosophical Investigations) என்னும் நூல் இவர் இறந்த பின்னரே வெளியிடப்பட்டது. இவ்விரு நூல்களும், பகுத்தாய்வு மெய்யியல் துறையில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டுள்ளன.

குறிப்பாக பிளாட்டோ, நீட்சே. கீககாட், சாத்ரே போன்ற எல்லோரையும் விட இவர் முக்கியமானவராகத் திகழ்ந்தார். ஏனைய சிந்தனையாளர்கள் தாம் வாழ்ந்த காலத்தின் சிந்தனையைத் தழுவியவர்களாக இருந்தார்கள். ஆனால் லுட்விக் விட்கென்ஸ்டைனிடம் சில விசேட பண்புகள் காணப்பட்டன. எதையும் தெளிவாகச் சிந்திக்கும் சிந்தனைத்திறன் இவரிடம் இருந்தது. இவரது கருத்துக்கள் சக்தி மிகுந்தவையாகவும், புதியனவாகவும் காணப்பட்டன.

விட்கென்ஸ்டைன் சிந்தனை செய்வதற்கான பல புதிய விதிகளை உருவாக்கி அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். புதிய வினாக்களை எழுப்பினார். அவர் மெய்யியல் சிந்தனையை நீந்துதலுக்கு ஒப்பிட்டார். நீந்தும் போது மனித உடல் நீரில் மிதக்கிறது. நீரின் ஆழத்திற்குச் செல்ல வேண்டுமாயின் ஒரு தாக்கமான உடற்பலம் பிரயோகிக்கப்பட வேண்டும். சிந்தனையும் அவ்வாறே. மெய்யியல் பிரச்சினைகளின் அடிஆழத்திற்குச் செல்ல வேண்டுமாயின் ஒரு பாரிய மனவேகம், ஆற்றல் தேவைப்படுகின்றது. இந்தவகையில் விட்கென்ஸ்டைனின் பல பங்களிப்புகள் தற்கால மெய்யியல் சிந்தனையில் பாரிய தாக்கங்களை உண்டுபண்ணின. இவருடன் ஒப்பிடுவதற்கு வேறு யாருமில்லை எனக்கூறக்கூடிய அளவுக்கு தற்கால மெய்யியலில் அவர் இடம் பிடித்துள்ளார்.

விட்கென்ஸ்டைனைப் பற்றி அறிஞர்கள் மத்தியில் கீழே குறிப்பிடுகின்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன.

  1. விட்கென்ஸ்டைன் மெய்யியலுக்கு புத்தொளி பாய்ச்சிய ஒரு சிந்தனையாளர்.
  2. விட்கென்ஸ்டைன் காட்டுமிராண்டித்தனமான முறையில் மெய்யியலை அழித்தொழித்தார்.

விட்கென்ஸ்டைனைப் பற்றி பர்டன் ரஸ்ஸல் " எனது வாழ்வில் சந்தித்த மெய்சிலிர்க்க வைக்கும் ஆய்வறிவாளன். அற்புத ஆய்வு மனப்பான்மை கொண்டவர்." என்றும், அதேபோல் G.E..Moore " 1912ல் நான் விட்கென்ஸ்டைனைச் சந்தித்தபோது மிக விரைவாகவே மெய்யியலில் அவரை ஒரு கெட்டிக்கரனாக அறிந்து கொண்டேன். ஆழமான சிந்தனைத்திறனும், சிறந்த அகப்பார்வையும் அவரிடம் காணப்பட்டது " என்றும் குறிப்பிடுகின்றார்கள்.

விட்கென்ஸ்டைனை 1. முந்திய விட்கென்ஸ்டைன் 2. பிந்திய விட்கென்ஸ்டைன் என அவரால் எழுதப்பட்ட இரண்டு பிரபலமான நூல்களைக் கொண்டு பிரித்து நோக்கும் போது, Tractatus Logico-Philosophicus என்னும் நூல் அவரது இளமைக்காலத்தில் எழுதப்பட்டது. 80 பக்கங்களைக் கொண்டதும் மிகக் கடினமான உவமான தன்மையுடைய வாக்கியங்களையும் கொண்டதாக உள்ளது. நுணுக்கத்தன்மை வாய்ந்ததாகவும், மேலோட்டமான வாசிப்புக்கு உட்படாததாகவும், ஒரு புனித நூல் போன்றும் அது அமைந்துள்ளது. இந்த நூலில் விட்கென்ஸ்டைன் பலவகையான விளக்கங்களை எடுத்துக்கூறியிருந்த போதிலும், அதன் சில பகுதிகள் கருத்து முரண்பாடுபாடுகளையும் கொண்டிருந்தன. ஆனால் விட்கென்ஸ்டைன் Tractatus இல் திருப்திகரமான, திட்டவட்டமான விளக்கங்களை முன்வைத்துள்ளதாகக் கருதினார்.

அணு நேர்வுகள் (Atomic facts) பற்றியும், அதன் அர்த்தம் பற்றியும் Tractatus இல் பெளதிக அதீத முறையொன்றைக் கட்டியெழுப்பினார். பெளதிக அதீத முறை எனக் கூறப்படுவதற்குக் காரணம், அதில் வெளிப்படையானதும் அவதானத்திற்குரியதல்லாததுமான, நுணுக்கமானதும் கடினமானதுமான விடயங்கள் அமைந்திருந்ததுதான். எவ்வாறாயினும் விட்கென்ஸ்டைன் ' நேர்வுகள் ' என்ற சொல்லுடன் Tractatus ஐ ஆரம்பித்தார். அதில் முதலாவது வாக்கியம் " எது நேர்வுகளாக உள்ளதோ, அதுதான் உலகம் " என ஆரம்பிக்கின்றது. இந்த முழு உலகமும் நேர்வுகளின் மொத்த தொகையேயன்றி பொருட்களின் (OBJECTS) தொகையல்ல. உலகம் நேர்வுகளினால் பிரிக்கப்பட்டுள்ளது. பொருட்கள்தான் உலகத்தின் சாரம். பொருட்கள் (OBJECTS), நேர்வுகள் (FACTS) இரண்டும் ஒன்றல்ல. பொருட்களின் சூழலில் பொருட்களால் ஏற்படும் விளைவுகளைத்தான் அவர் நேர்வுகள் என்று அழைத்தார். ஒரு நிகழ்வை எமக்கு முற்றாக விபரித்துக் காட்டக்கூடியது எடுப்பு என்று அழைக்கப்படும்.

நேர்வுகள் உலகத்திலுள்ள மிகச் சிக்கலான விடயங்களாகும். " நீரில் மீன் நீந்துகிறது ", " பூனை பாயில் உள்ளது " என்பன ஒரு சிக்கலான தொடர்பாகும். இங்கு நீர், மீன், பூனை, பாய் ஆகியன முக்கியமானவைகளாகக் கருதப்படுவதில்லை. மாறாக " நீரில் மீன் " " பாயில் பூனை " என்பவையே முக்கியமான தொடர்புகளாகும். இவைகள்தான் நிகழ்வுகளாகும். இவ்வகையான நிகழ்வுகளைக் குறிக்கும் கூற்றுக்களைத்தான் விட்கென்ஸ்டைன் நேர்வுகள் எனக் குறிப்பிடுகின்றார்.

பொருட்களின் இணைவுகளிலிருந்துதான் ஒரு நிகழ்வு அர்த்தம் பெறுகிறது. பொருட்களில், நிகழ்வுகளில் ஒன்றுக்கொன்று திட்டவட்டமான உறவுகள், தொடர்புகள் காணப்படுகின்றன. இதனால் நேர்வுகளைப் பற்றிப் பேசுவது சிக்கலானதாகும். குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். நேர்வுகள் இவ்வுலகை ஸ்திரமாக்கிக் காட்டும் ஒன்று எனவும், நேர்வுகள் இவ்வுலகை விபரிக்கின்றன எனவும் Tractatus ல் கூறப்பட்டுள்ளது. நேர்வுகள் இவ்வுலகை சித்திரமாக்கிக் காட்டுவதும், விபரிப்பதும் மொழியினால்தான்.

விட்கென்ஸ்டைனின் கருத்தில் உலகம் நேர்வுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சிக்கல் குறைந்த நேர்வுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. சிக்கல் குறைந்த நேர்வுகளிலிருந்து மேலும் சிக்கல் குறைந்த நேர்வுகளை உருவாக்கலாம். இவ்வாறு குறைத்துக் கொண்டே சென்றால் இறுதியில் அணு நேர்வுகள் என்ற நிலைக்கு வந்து சேரலாம். " அணு நேர்வுகள்தான் உலகைக் கட்டியெழுப்பும் கட்டிடக் கற்கள் போன்று செயற்படுகின்றன " இதை நாம் விட்கென்ஸ்டைன் குறிப்பிடும் மூல எடுப்புக்கள் என்பதுடன் தொடர்புபடுத்தலாம். எடுப்புக்கள் இலக்கண வரம்புகளினால் உருவாக்கப்பட்டு மொழியினால் வெளிப்படுத்தப்படுகின்றன.

தமிழ், ஆங்கிலம், ஜேர்மன் என எந்த மொழியாயினும் எடுப்புக்களில் எந்த வித்தியாசமுமில்லை. எடுப்புக்களுக்குரிய இலட்சணங்களைக் கொண்டிருந்தால் போதும். மொழிகள் வெவ்வேறாக இருக்கலாம். உண்மை அல்லது பொய் கூறுவதாக இருக்கலாம். அல்லது உண்மை பொய் இல்லாததாக இருக்கலாம். எந்த வசனத்தை எதற்குமேல் குறைக்க முடியாதோ அல்லது பகுக்க முடியாதோ அதுதான் மூல எடுப்பு, அடிப்படை எடுப்பு (elimentary proposition) என விட்கென்ஸ்டைன் குறிப்பிட்டார். மேலும் மூல எடுப்பு எனும்போது அங்கு பெயர்கள் மட்டுமே உள்ளன என Tractatus குறிப்பிடுகிறது. பெயர் என்பதின் அர்த்தத்தை மிக நுணுக்கமான முறையில் அவர் எடுத்துக் காட்டினார். பெயர் என்பது மேலும் துண்டுகளாக நறுக்கப்பட முடியாதது. அது மூலாதாரமான அடையாளம் என்றார்.

விட்கென்ஸ்டைனின் படக்கோட்பாடு ( Picture Theory )

விட்கென்ஸ்டைனின் பிரதானமான கருத்துக்களில் ஒன்று படக்கோட்டுக் கருத்தாகும், "எடுப்பு என்பது சூழ்நிலையின் படமாகும்" ஒரு சூழ்நிலையை அப்படம் விபரிக்கின்றது. ஒரு எடுப்பை புரிந்துகொள்வதற்கு அது விபரிக்கும் சூழ்நிலையை விளங்கிக்கொள்ள வேண்டும். " ஒரு எடுப்பு யதார்த்தத்தின் படமாகும்" என விட்கென்ஸ்டைன் கூறினார். மேலும் அவர் " நான் ஒரு எடுப்பை புரிந்து கொள்கிறேன் என்றால், அது பிரதிநிதித்துவப்படுத்தும் சூழ்நிலையை அறிந்து கொள்கிறேன்" என்றார். விட்கென்ஸ்டைன் படம் எனும்போது சாதாரண நிலையிலுள்ள, நமது கண்கள் காணுகின்ற படங்களை குறிப்பிடவில்லை. விட்கென்ஸ்டைன் கூற முனைவது அந்நிகழ்ச்சியைப் பற்றிய அளவையியல் ரீதியான படத்தையாகும் (Logical picture of the fact). சில நேரங்களில் விட்கென்ஸ்டைன் எடுப்புக்களை படமெனவும், ஒரு சூழ்நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்வுகளாகவும் கருதினார்.

மூலஎடுப்புக்களை பெயர்களின் தொடர்ச்சியாக அவர் கருதவில்லை. ஒரு எடுப்பின் அடையாளம் ஏதாவதொன்றை பிரதிநிதித்துவப்படுத்துதல் என்பதாகவே இருக்க முடியும். ஒரு நேர்வினால்தான் அர்த்தத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட தொகைப் பெயர்களால் அர்த்தத்தை வெளியிட முடியாது. "ஒரு எடுப்பு படமாக இருக்கும் வரையில்தான் ஏதாவதொன்றைக் கூறும்". அது படமாக இருக்கும்போது மட்டுமே உறுதியானது. ஒரு எடுப்பு ஒரு சூழ்நிலையை எம்மொடு தொடர்பு படுத்துகின்றது. அதாவது அந்த சூழ்நிலையின் அளவையியல் படத்தை எமக்குத் தருகிறது.

மெய்யியல் விசாரணை (Philosophical Investigations) பிந்திய விட்கென்ஸ்டைன்

1918ல் விட்கென்ஸ்டைனின் Tractatus எழுதப்பட்டது. 1921ல் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது. Tractatus எழுதி முடிக்கப்பட்டபோது கடினமான பிரச்சினைக்கு இறுதியானதும், திட்டவட்டமானதுமான தீர்வை முன்வைத்துள்ளதாகவும், மேலும் அது எக்காலத்திற்கும் பொருத்தமானது எனவும் விட்கென்ஸ்டைன் கருதினார். ஆனால் மெய்யியல் விசாரணை (Philosophical Investigations) எழுதிய வேளையில் அது அவரின் மேற்குறித்த கருத்துக்களிலிருந்து விலகியது. Philosophical Investigations என்ற நூல் அவரின் Tractatus இன் முரண் தொகுப்பாகக் காணப்பட்டது. Philosophical Investigations ன் மூலமாகவும், தன்னுடைய பிற்கால விரிவுரைக் குறிப்புக்களினாலும் இவர் பிந்திய விட்கென்ஸ்டைன் என அடையாளப்படுத்தப்படுகிறார். பிந்திய விட்கென்ஸ்டைன் மொழியின் உபயோகத்தன்மையிலேயே அதிக அக்கறை கொண்டிருந்தார். மொழியின் சமூகரீதியான தன்மைக்கு முதலிடம் கொடுத்தார். சமூகரீதியான தன்மையில் வேறுபட்ட உபயோகங்கள் மொழிக்கு உண்டு என்பதை உணர்ந்த இவர் மொழி விளையாட்டு என்பதுடன் தனது கருத்தை தொடர்புபடுத்தினார். மொழியின் சதுரங்க விளையாட்டோடு தொடர்புபடுத்தி தனது கருத்தை முன்வைத்தார்.

ஒவ்வொரு எடுப்பும் அதன் தீர்மானமான பொருட்களைக் கொண்டுள்ளன என Tractatus கூறுகின்றது. ஆனால் Philosophical Investigations ல் ஒரு வாக்கியத்தின் பொருள் திட்டவட்டமானதாக இல்லாதபோதும் அதன் உறுதியான பொருளைப் பெறலாம் எனக் குறிப்பிடுகின்றார். ஒரு எடுப்பின் அர்த்தம் அது விபரிக்கும் சூழ்நிலையைப் பொறுத்து, அதாவது ஒரு எடுப்பின் கருத்து ஒரு நிகழ்வை அல்லது நிலைமையை விளக்குகிறது. இதன்மூலம் அது அர்த்தத்தன்மையைப் பெறுகிறது. ஒரு எடுப்பை மேலும் பிரிக்க முடியாது போனால் அது அணு எடுப்பாகும். இது முந்திய விட்கென்ஸ்டைனின் கருத்தாகும். இதை மறுத்த பிந்திய விட்கென்ஸ்டைன் " நான் எடுப்பு என்பதை புறவயமாகப் பார்க்கவில்லை. முந்திய சிந்தனையில் மொழியின் அளவையியல் கட்டமைப்புக்கு முதலிடம் வழங்கியிருந்தேன். இப்போது மொழிப்பாவனைக்கு முக்கியத்துவம் வழங்குகிறேன்" எனக் குறிப்பிடுகிறார்.

Tractatus இல் ஒரு எடுப்பு அதன் அர்த்தத்தைத் தீர்மானிக்காத வரை அது எடுப்பல்ல என்றும், இதனால் மயக்கம், ஐயப்பாடு, உறுதியற்ற தன்மை என்பவற்றை எடுப்புக்கள் கொண்டிருக்கலாகாது என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்தை மறுத்த பிந்திய விட்கென்ஸ்டைன் " ஆரம்பத்தில் நான் மொழியை குறுகியதாக ஆராய்ந்துள்ளேன் " என்றார். இவ்வாறான தெளிவற்ற, உறுதியற்ற வசனங்கள் பொது உடன்பாட்டிற்கு வருவதற்கும், தொடர்பு கொள்வதற்கும் தடையல்ல என்று கூறியவர், அதற்காக கடிகார உதாரணத்தை எடுத்துக் காட்டுகின்றார்.

ஒரு கடிகாரம் பரிபூரண நேரத்தைக் காட்டவில்லையாயின் அது நல்ல கடிகாரமல்ல. ஆனால் நேரத்தை மிக நுணுக்கமாக அளவிடும் அவசியம் எமது கடிகாரங்களுக்கு இல்லை. நாம் உபயோகிக்கும் கடிகாரங்கள் எமது தேவைகளுக்குப் போதுமானவையாக உள்ளன, ஆனால் ஒரு ஓட்டப்பந்தயத்தில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்க நேரம் மிக நுட்பமாக அளவிடப்பட வேண்டியது அவசியமாகும். எனவே தேவையைப் பொறுத்தே நேரம் பற்றிய கருத்து அமைந்துள்ளது.. தேவையைப் பொறுத்தே மொழிப்பாவனையும் இடம்பெற வேண்டுமென தனது முந்திய சிந்தனைக்கு மாறாக பிந்திய விட்கென்ஸ்டைன் குறிப்பிடுகிறார். " உலகிலேயே அணுவளவும் பிந்திச் செல்லாத முழுமுதல் நுட்பமான நேரத்தைப் பற்றி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சிந்திக்கத் தேவையில்லை ".

எடுப்புக்கள் பற்றிய கருத்தில் முந்திய, பிந்திய நிலைகளில் விட்கென்ஸ்டைன் ஒன்றுபட்டாலும், எடுப்புக்கள் பற்றிய தன்னுடைய முந்திய முழுமையான பகுப்பாய்வு எனும் கருத்திலிருந்து விடுபடுகின்றார். ஆகவே Philosophical Investigations பகுப்பாய்வு மெய்யியலை ஒரு புதிய மையத்தை நோக்கி நகர்த்தியது எனக் குறிப்பிடலாம். பின்வரும் உதாரணங்களைக் கவனிப்போம். கூற்று 1 : தும்புத்தடி ஒரு மூலையில் உள்ளது. கூற்று 2 : தும்புத்தடி ஒரு மூலையில் உள்ளது. அதில் ஒரு கட்டு தும்பும் சேர்ந்துள்ளது.

இங்கு கூற்று 1 உம் கூற்று 2 உம் ஒரே மாதிரியானவையா? தும்புத்தடி என்ற சொல் எல்லாவற்றையும் உள்ளடக்குகிறது. சந்தேகத்திற்கு இடமற்ற முறையில் தும்பும், தடியும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இதுதான் தும்புத்தடி என்பதன் கருத்தாகும்.

வார்த்தைகளை நாம் பயன்படுத்துகையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். ஒரு துறையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை இன்னுமொரு துறையிலும் பயன்படுத்துகிறோம். இதனால் பகுப்பாய்வு என்பது மட்டும் மேற்குறித்த விடயங்களைத் தீர்மானிப்பதில்லையென விட்கென்ஸ்டைன் கருதினார். ஒரு பிரச்சினைக்கு மெய்யியல் ரீதியான தீர்வு என்பது ஒரு நோய்க்குச் செய்யும் பரிகாரம் போன்றதாகும். மொழிகளில் ஏற்படும் பிரச்சினைகள், அவை மனித சிந்தனையில் ஏற்படுத்தும் தாக்கம், வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி பிந்திய விட்கென்ஸ்டைன் குறிப்பிடுகிறார். மொழி, மொழியின் அலங்காரத்தினால் எமது அறிவில் ஏற்படும் வசீகரத்தன்மைக்கு எதிராக நடத்தப்படும் யுத்தமே மெய்யியல் எனக் குறிப்பிட்டார். நேரம், இடம், மனம் போன்ற வார்த்தைகளை சாதாரண மக்களும் உபயோகிக்கின்றனர். மெய்யியலாளர்களும் உபயோகிக்கின்றனர். வார்த்தைகளை, சொற்களை எமது பேச்சிலும், எழுத்திலும் உபகரணங்களாகப் பயன்படுத்துகின்றோம். அதாவது இவை எமது பேச்சுக்களில் கருவிகளாகக் கையாளப்படுகின்றன. ஒரு கருவியைக் கொண்டு பல இயந்திரங்களை அமைப்பது போன்றதே இதுவாகுமென்றும், மொழியின் பலவகையான செயற்பாடுகளையும் ஆராய்ந்து பார்த்தால் அவை மொழி விளையாட்டுக்கள் என்றும் பிந்திய விட்கென்ஸ்டைன் குறிப்பிடுகின்றார்.

அளவையியல் ரீதியான பகுத்தறிவுக் கோட்பாடு ஏற்கப்படக்கூடியதாயினும் மற்றொரு புறத்தில் அங்கு தீர்மானிக்க முடியாத முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த நிலை மெய்யியலாளர்களுக்கு மகிழ்ச்சியற்றதொன்றாகும். " Tractatus இல் நான் கூறிய மொழியின் அளவையியல் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்படாவிட்டால் அது தொடர்பாக நான் சொல்ல நினைத்து பூர்த்தியாகாது. அது மனவேதனையைத் தருகிறது. ஒரு விடயத்தை ஆரம்பிப்பவன் தன்னுடைய முயற்சியில் எப்பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லையென்றால் அவனுடைய முயற்சி திருப்தியற்றதாகும். மக்கள் புதிர்களில் நம்பிக்கை வைத்துள்ளனர். புதிர்கள் இல்லையென்றால் அவர்கள் ஆச்சரியத்தை அடைகின்றனர். அர்த்தமற்ற பிரச்சினைகளைக் கடந்து செல்ல வழிகாட்டுவதே என்னுடைய நோக்கமாகும். மெய்யியல் விசாரணைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தாம் அறிந்துள்ளது சிறிதளவே என்பதை உணர்வர் ". என்றார். இது சோக்கிரட்டீசின் கருத்தை ஒத்ததாகும்.

எல்லா மெய்யியலும் அற்புதம் என்ற ஒருவகை மனவெழுச்சியிலிருந்தேதான் தோன்றுகின்றது. புதிர்களில் இருந்தே மெய்யியல் ஆரம்பிக்கின்றது. இந்த மெய்யியல் ரீதியான புதிர்களுக்கு விஷேட தன்மைகள் உள்ளன. ஒரு மொழியைக் கற்பனை செய்வது என்பதன் அர்த்தம் வாழ்க்கையின் ஒரு வடிவத்தைக் கற்பனை செய்வதாகும். பகுப்பாய்வு என்பது வரைவிலக்கணப்படுத்துவது அல்லாமல் அதன் உபயோகங்களை விவரணப்படுத்துவதாகவே இருக்கவேண்டும் என்பது பிந்திய விட்கென்ஸ்டைனின் கருத்தாகும். அவர் பெளதீக அதீத கருத்துக்களில் கவனம் செலுத்தி தர்க்க புலனறிவாளர்களினால் நிராகரிக்கப்பட்டவற்றை அர்த்தமுடையதாக ஆக்க முயன்றார்.

இவ்வறான கருத்துக்களின் அடிப்படையில் மொழி, மொழிக்காக அன்றி தத்துவத்திற்குரியதாகவே இருக்க வேண்டும் என்பதில் ஆர்வங்கொண்ட விட்கென்ஸ்டைன் எமது நாளாந்த வாழ்விலே ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மார்க்கமாக மொழியின் அர்த்தத்தை விளக்குவதிலேயே மெய்யியல் ஆய்வின் பெரும்பகுதியைச் செலவிட்டார் எனக் குறிப்பிடலாம். குறிப்பாக பிந்திய விட்கென்ஸ்டைன் Philosophical Investigations ல் மொழியினுடைய சமூக ரீதியான தன்மையை மொழிவிளையாட்டுக்கள் என்பதுடன் தொடர்புபடுத்தி விளக்கினார் எனக் குறிப்பிடலாம்.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!