இவர் தனது 14 வயதில் திரைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார். நெரம் புலரும்போல் என்ற மலையாளப் படத்தின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார். அவர் நடித்த முதல் திரைப்படம் இதுவாக இருந்தாலும், 1986 இல் இது தாமதமாக வெளியிடப்பட்டது. அதனால் 1985 இல், ஒய். ஜி. மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த வெள்ளை மனசு இவரின் முதல் படமாக வெளியானது. அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். மேலும் முதல் தெலுங்கு படம் 'பாலே மித்ருலு' 1986 இல் வெளியானது. பின்னர் இவர் இரசினிகாந்து நடித்த படிக்காதவன் (1985) மற்றும் கமல்ஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை (1987) போன்ற தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.
இவர் 2005 ஆம் ஆண்டுகளில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஜோடி நம்பர் ஒன்' என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக தோன்றினார். அதை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் 'தங்க வேட்டை' என்ற விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
அதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலசம்' என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். இந்தத் தொடரில் இரட்டை வேடங்களில் நடித்தார். அதில் ஒன்று படையப்பா படத்தில் நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்தை மீண்டும் என்று நடித்தார். அதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சன் தொலைக்காட்சியில் தங்கம் (2009-2013), ராஜகுமாரி (2013) மற்றும் வம்சம் (2013-2017) ஆகிய தொடர்களில் நடித்தார்.
இவர் 2019 இல் குயின் என்ற வலைத் தொடரில் அறிமுகமானார்.[7] இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அனிதா சிவகுமாரன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது.[8]