மேற்கு செருமனி (West Germany, செருமன் மொழி: Westdeutschland) என்று குறிப்பிடப்படுவது மே 1949 முதல் அக்டோபர் 1990ஆம் ஆண்டு வரை செருமனி நாட்டின், நட்பு அணி நாடுகள்ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரான்ஸ் வெற்றிகொண்ட மேற்குப் பகுதியில், அமைந்த செருமன் கூட்டாட்சிக் குடியரசு ஆகும். மற்ற நட்பு அணி நாடான சோவியத் ஒன்றியம் வெற்றிகொண்ட பகுதிகளில் அமைந்த செருமன் சனநாயக குடியரசு கிழக்கு செருமனி என குறிக்கப்பட்டது.அக்டோபர் 1990ஆம் ஆண்டு செருமன் சனநாயக குடியரசு கலைக்கப்பட்டு 40 ஆண்டுகால பிரிவிற்குப் பிறகு செருமன் கூட்டாட்சிக் குடியரசுடன் இணைந்தது. இந்த இணைப்பின் பின்னர் செருமன் கூட்டாட்சிக் குடியரசு செருமனி எனவே குறிப்பிடப் படுகின்றது.
பிரிவினையின் போது தலைநகர் பெர்லின் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புகழ்பெற்ற பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது.பெர்லின் நகரின் மேற்கு பகுதிகளைக்கொண்டு தலைநகர் அமைக்க விரும்பாது பொன் நகரைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்டது.இணைப்பின் பின்னர் பெர்லின் நகரம் மீண்டும் இணைந்த செருமனியின் தலைநகராயிற்று.
1950களில் இரண்டாம் உலகப் போரின் நாசங்களிலிருந்து உலகின் மூன்றாவது பெரும் பொருளீட்டும் நாடாக உயர்ந்தது பொருளாதார விந்தை Wirtschaftswunder என குறிப்பிடப்படுகிறது.[1][2] இதனை முன்னெடுத்து நடத்திய முதல் அரசு தலைவர்(chancellor) கான்ராட் அடிநேயர் (Konrad Adenauer)1963 வரை பதவியில் இருந்தார். மேற்கு நாடுகளை நோக்கிய சாய்வுகொண்ட இவரது பதவிக்காலத்தில் மேற்கு செருமனி நாடோ அங்கத்தினர் ஆனது. இவர் தற்கால ஐரோப்பிய ஒன்றியம் உருவாவதற்கும் வித்திட்டார்.1975ஆம் ஆண்டு ஜி8 நாடுகள் குழு உருவானபோது தானியக்கமாகவே அக்குழுவில் அங்கத்தினரானது.
மேற்கத்திய செருமனி (Westdeutschland) என்பது செருமனி நாட்டின் புவியியல் நோக்கில் மேற்கில் அமைந்த ரைன்லாந்து பகுதிகளைக் குறிக்கும்.செருமனி கூட்டாட்சி பகுதிகளை செருமனி சனநாயக குடியரசு அவ்வாறே அழைத்து வந்தது;இவ்வாறு அழைக்கப்படுவதை செருமன் கூட்டாட்சி மக்கள் மிகவும் வெறுத்தனர்.