முதல் தகவல் அறிக்கை

முதல் தகவல் அறிக்கை (FIR - First Information Report) என்பது இந்தியாவில் ஒரு காவல் நிலையத்தில், ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். முதல் தகவல் அறிக்கைப் பதிவு குற்றவழக்குப் புலனாய்வின் முதல் கட்டமாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154 இதுபற்றிக் கூறுகிறது. ஒரு புலன்கொள் குற்றம் குறித்த முதல் தகவலைப் பெறும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடும் சட்டக்கடப்பாடு கொண்டவர் ஆவார்.[1]

உயர்நீதிமன்றம் அல்லது இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்றி, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள பதிவுகளை காவல் துறையால் மாற்ற இயலாது.[2][3]

முதல் தகவல் அளிப்பவர்

முதல் தகவல் அளிப்பவர் குற்றத்தினால் பாதிப்புற்றவராகவோ, குற்றத்தைக் நேரில் கண்ட சான்றாளராகவோ இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. மேலும் குற்றம் குறித்த முழுமையான துல்லியமான தகவல்களை அறிந்தவராக இருக்கவேண்டிய கட்டாயமும் இல்லை. மாறாக, அவர் குற்றம் குறித்து கேள்விப்பட்டவராக இருப்பதே போதுமானது. மேலும், மேற்படி தகவலை நேரில் மட்டுமின்றி அஞ்சல், தொலைபேசி இன்னபிற நவீன ஊடகங்கள் வழியாகவும் தகவலை அளிக்கலாம்.

முதல் தகவல் அறிக்கைப் பதிவுசெய்யும் இடம்

முதல் தகவல் குற்றம் நிகழ்ந்த இடத்தின் அதிகார ஆளுகையைக் கொண்டிருக்கும் காவல் நிலையத்தின் நிலையப் பொறுப்பு அதிகாரியிடம் வழங்குதல் வேண்டும். எடுத்துக்காட்டாக புறக்காவல் நிலையங்கள் (Police Out Posts) காவல் நிலையங்கள் அல்ல. ஆகவே அங்கு பதிவது முதல் தகவல் அறிக்கை ஆகாது.

முதல் தகவல் அறிக்கையின் இன்றியமையாமை

முதல் தகவல் அறிக்கைப்பதிவு குற்றவியல் நீதிமுறைமையினை முடுக்கிவிடும் முதற் செயற்பாடாகும். குற்றம் குறித்த காவல்துறைப் புலனாய்வு இதன் மூலம் உந்தப்படுகிறது.

முதல் தகவல் அறிக்கையின் சான்றியல் மதிப்பு

முதல் தகவல் அறிக்கையினை முதன்மைச்சான்றாக நீதிமன்றங்கள் ஏற்பதில்லை. ஆயினும், உறுதியூட்டும் சான்றாக ஏற்கப்படுகிறது.

முதல் தகவல் அறிக்கைப் பதிவில் காலந்தாழ்த்தம்

முதல் தகவல் அறிக்கைப் பதிவில் நிகழும் காலந்தாழ்த்தும் நீதிமன்றங்கள் ஏற்கும் தக்க விளக்கங்கள் இல்லாத நிலையில் அதனை முழுமையாய் நிராகரிக்கவும் வழிவகுக்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "FIRST INFORMATION REPORT" (PDF). Archived from the original (PDF) on 2015-05-14. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.
  2. * "Quashing of F.I.R – Inherent Powers of High court". பார்க்கப்பட்ட நாள் February 20, 2012.
  3. "High Courts can quash FIRs : Supreme Court" (PDF). cbi.nic.in. Archived from the original (PDF) on நவம்பர் 6, 2015. பார்க்கப்பட்ட நாள் February 20, 2012.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!