மணிக்கொடி (இதழ்)

மணிக்கொடி இதழ் (டிசம்பர் 3, 1934) முதல் பக்கம்

மணிக்கொடி என்பது 1930களில் வெளிவந்த வரலாற்றுப் புகழ்மிக்கதொரு தமிழ் இதழ். இது முதலில் மாதம் இருமுறையும், பின்னர் வார(கிழமை) இதழாகவும் வெளிவந்தது 1935ல் நின்று போனது. பி. எஸ். ராமையா அவர்களின் முயற்சியால் பல்வேறு இதழ்களுடனும், நிறுவனங்களுடனும் சேர்ந்து மேலும் சில ஆண்டுகள் இவ்விதழ் வெளிவந்து 1939 ஆம் ஆண்டில் முற்றாக நின்று விட்டது.

தோற்றம்

சுடாலின் சீனிவாசன் என்பவர், திரைப்படத் தணிக்கைத் துறையில் யாருக்கும் விட்டுக்கொடுக்காத அதிகாரியாகவும், அவரது தொழிலில் இரும்பு மனிதராகத் திகழ்ந்தவர். பாரதியாரின் படைப்புகளின் மீது மிகுந்த பற்று கொண்டவர் ஆவார். அதனால் பாரதியின் சீடர்கள் பரலி சு. நெல்லையப்பர், வ.ரா. பாரதிதாசன் போன்றோரிடம் மிகுந்த மதிப்புக் கொண்டவர். காங்கிரஸ் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர். சிறை வாழ்க்கையின் போது வ. ரா.வும், டி. ஸ். சொக்கலிங்கமும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

சிறையிலிருந்து வெளிவந்த சீனிவாசன், இலக்கியப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டார். திருப்பழனத்துக்குச் சென்று அங்கே வசித்து வந்த சுயராஜ்ய பத்திரிகையில் பணியாற்றிய வ.ராமசாமியையும் அவர் மூலம் வரதராஜுலு நடத்தி வநத தமிழ் நாடு பத்திரிகையில் பணிபுரிந்த டி.எஸ்.சொக்கலிங்கத்தையும் அழைத்துவந்தார். “மணிக்கொடி” தொடங்கியது. “டி.எஸ்.சொக்கலிங்கம், வ.ரா. நான் மூவருமாக எங்கள் லட்சியப் பத்திரிகைக்குத் திட்டமிட்டோம். என்ன பெயரிடுவது என்று வெகுவாக விவாதித்தோம். ஒருநாள் ஏதோ நினைவாக கம்பனைப் புரட்டியபோது அவன் மிதிலையில் மணிக்கொடிகளைக் கண்டதாகச் சொன்னது என் மனதை நெருடிக் கொண்டிருந்தது. அன்று மாலை கோட்டைக்கு அடுத்த கடல் மணலில் நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். கோட்டைக் கொடி மரத்தில் பறந்த யூனியன் ஜாக் திடீரென்று கீழே விழுந்தது.‘விழுந்தது ஆங்கிலக்கொடி, இனி அங்கு பறக்க வேண்டியது நமது மணிக்கொடி’ என்றேன், அதுவே எங்கள் பத்திரிகைக்குப் பெயரா கட்டும் என்று குதூகலத்துடன் முடிவு செய்தோம். மூவரும் கையெழுத்திட்டு “மணிக்கொடி”யைத் தமிழ் நாட்டுக்கு அறிமுகம் செய்தோம். இவர்கள் மூவரும் தீர்மானித்தபடியே , இலண்டனில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த 'சண்டேஅப்சர்வர்' என்ற வாரப் பத்திரிகையை ஆதர்சமாகக் கொண்டு மணிக்கொடி சிற்றிதழை செப்டெம்பர் 17 , 1933 இல் தொடங்கினார்கள்.

வளர்நிலைகள்

இந்த இதழின் காலத்தை மூன்று நிலைகளில் குறிப்பிடலாம். அவை பின்வருமாறு விவிரிக்கப்படுகிறது.

முதல்நிலை

கு.ஸ்ரீனிவாசன் , வ.ராமசாமி , டி. எஸ். சொக்கலிங்கம் ஆகிய மூவரும் இணைந்துபணியாற்றிய காலம், மணிக்கொடி இதழின் முதல் நிலை ஆகும். மணிக்கொடியின் முதல் கட்டம் 1933 செப்டம்பர் 17 அன்று தொடங்கி , 1935 சனவரியில் முடிவுபெற்றது.

முதல் தலையங்கம்

"பாரதி பாடியது மணிக்கொடி. 
காந்தி ஏந்தியது மணிக்கொடிகாங்கிரஸ் உயர்த்தியது மணிக்கொடி. 
சுதந்திரப் போராட்டத்தில் பல்லாயிரம்வீரர்களை ஈடுபடச் செய்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டியது மணிக்கொடி.
மணிக்கொடி பாரத மக்களின் மனத்திலே ஓங்கி வளரும் அரசியல் லட்சியத்தின்நுனி .....

பொதுவாழ்விற்குக் கண்ணும் காதும் பத்திரிகை. 
இந்நாட்டில் இன்று தோன்றிப்பயன் தரும் ஒவ்வொரு பொது இயக்கத்திற்கும் பத்திரிகைகள் ஆதாரம்.
இத்துறையில் சேவை செய்து வருவன,  நமது மூத்த பத்திரிகைகள் எனலாம்.
அந்தக் கூட்டத்தில் மணிக்கொடியும் இன்று சேருகிறது. ஒரு சிறிது பாரத்தை இதுவும் தூக்கட்டும். 
தலைமக்களின் தூய்மையையும் , நேர்மையையும் வீரத்தையும் பொதுமக்களிடம் பரப்புவதே மணிக்கொடியின் பொறுப்பு. 
அந்தப் பொறுப்பை மணிக்கொடி ஏற்கும் " --முதல் மணிக்கொடி வார இதழ், 17 செப்டெம்பர் 1933 

முதல்நிலையின் முடிவு

மணிக்கொடிதோன்றிய ஆறுமாதத்திற்குள், பொருளாதார நெருக்கடி தோன்றியது. அதனைச் சமாளிக்கும் பொருட்டு கு.ஸ்ரீனிவாசன் , பம்பாய்க்குச் சென்று, ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மணிக்கொடிக்கும் , தனது குடும்பத்திற்கும் அனுப்பி வந்தார். இச்சூழலில் சொக்கலிங்கத்திற்கும் , வ.ராவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது .மணிக்கொடியிலிருந்து விலகிய வ.ரா, கொழும்பிலிருந்து வெளிவந்த வீரகேசரி இதழுக்குப் பணியாற்றச் சென்றுவிட்டார். செப்டம்பர் 1934 இல், சொக்கலிங்கம் மணிக்கொடியிலிருந்து விலகி தினமணிப் பத்திரிகைக்கு ஆசிரியரானார். சனவரி 1935 இல், ஸ்ரீனிவாசனின் தந்தை சென்னையில் காலமானார். அதைத்தொடர்ந்து சென்னை வந்த ஸ்ரீனிவாசன் மணிக்கொடியை மேற்கொண்டு நடத்த இயலவில்லை.

மணிக்கொடியின் 'முதல் நிலையின் முடிவு' குறித்து ஸ்ரீனிவாசன் கூறியது ...

"நான் ஒரு லட்சியக் கூடாரம் அடித்தேன்.
ஒரு காற்று வீசியது.
அதில்முளைகள் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டன.
டேராத் துணியே, காற்றோடுபோய்விட்டது "

இரண்டாம் நிலை

பி. எஸ். ராமையா என்பவர் 1935 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மணிக்கொடியை நடத்த முன்வந்தார். அவருக்கு மாதம் 25 ரூபாய் சம்பளம்தரப்பட்டது. இவர் காலத்தில் , கி. ராமச்சந்திரன் மணிக்கொடியில் இணைந்தார். வாரப்பத்திரிகையாக இயங்கி வந்த மணிக்கொடி, இருவார இதழாக வெளிவரத்தொடங்கியது. இராமையாவின் காலத்து மணிக்கொடி, சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. மேலும், நவயுகப்பிரசுரம் என்ற நிறுவனம் நிறுவப்பட்டு, அதன் மூலம் புத்தகங்கள் வெளிவந்தன.

மாகாண சுயாட்சி (ஏ. என். சிவராமன்), தேய்ந்த கனவு (கி. ராமசந்திரன்) , இரட்டை மனிதன் (கு. பா. ரா) , கப்சிப்தர்பார் (புதுமைப்பித்தனும் ,ந.ராமநத்னமும் இணைந்து எழுதிய ஹிட்லர் வரலாறு ) , பாஸிஸ்ட ஜடாமுனி (புதுமைப்பித்தன் , முசோலினி வரலாறு ஆகிய புத்தகங்களை நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டது. 1938 ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் ஏற்பட்ட கருத்து பேதம் காரணமாக, பி.எஸ் .ராமையா மணிக்கொடியை விட்டு விலகி, சினிமாத் துறைக்குள் நுழைந்தார்.

மணிக்கொடியின் 'இரண்டாம் நிலையின் முடிவு' குறித்து ஸ்ரீனிவாசன் கூறியது ...

மணிக்கொடியின் வாமனானாக வந்த ராமையா,
திருவிக்ரமனாக வளர்ந்துவிட்டார்;
மாயையினால் அல்ல சேவையினால் - கு.சீனிவாசன்

மூன்றாம் நிலை

இச்சிற்றிதழானது, 1938 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதத்தில், ப. இராமஸ்வாமியிடம் தரப்பட்டது. மணிக்கொடி இதழைப் பற்றிய அக்கறையை விட புத்தகம் வெளியிடுவதிலேயே அக்கறைச் செலுத்தப்பட்டதால், நவயுகப்பிரசுராலயம் மட்டுமே வளர்ந்தது. இந்த நவயுகப் பிரசுரலாயமும், நாட்டுக் கோட்டைச் செட்டியார்களிடம் விற்கப்பட்டது. அவர்களும் பிறகு, வேறொருவருக்கு விற்றனர். இவ்வாறாக கைமாறியதால், நான்கைந்து இதழுக்குப் பிறகு மணிக்கொடி இதழ், ஜூன் 1939-உடன் நிறுத்தப்பட்டது.

இதழ் ஆசிரியர்கள்

மணிக்கொடிக்கு, பி.எஸ். ராமையா ஆசிரியராகவும், கி. ராமசந்திரன் (கி.ரா) துணையாசிரியராகவும் இருந்தனர். மணிக்கொடியின் சிறப்பான புகழுக்கு அதில் பங்கு கொண்டு இலக்கிய வரலாறு படைத்த எழுத்தாளர்களே காரணம். புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, சி. சு. செல்லப்பாவின் ஸரசாவின் பொம்மை போன்ற படைப்புகள் இவ்விதழில் தான் வெளியாயின. புகழ்பெற்ற எழுத்தாளர்களாகிய ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், பி. எஸ். இராமையா, ந.சிதம்பரசுப்பிரமணியன், சிட்டி (பெ.கோ.சுந்தர்ராஜன்), சி. சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், க. நா. சுப்பிரமணியம், லா. ச. ராமாமிர்தம், மெளனி ஆர். சண்முகசுந்தரம், எம். வி. வெங்கட்ராம் ஆகியோரின் படைப்புகள் மணிக்கொடியின் புகழுக்குக் காரணம். இவ்விதழ் வெளியான காலத்தையும், அதனால் ஏற்பட்ட இலக்கிய விழிப்புணர்வையும் குறிக்கும் விதமாக மணிக்கொடிக் காலம் என்னும் தொடர் சிற்றிதழ் இலக்கிய வட்டாரங்களில் பயிலப்படுகின்றது. மணிக்கொடிக்குப் பிறகு பல சிற்றிதழ்கள் தோன்றின.

மணிக்கொடியும், புதுமைப்பித்தனும்

தமிழில் இல்லாதன இல்லை இளங்குமரா என்ற
கிழட்டுத் தத்துவம் ஒழிய வேண்டும்.
இப்பொழுது இலக்கியத்தின் பெயரில் நடக்கும் ஆராய்ச்சிகள் , முதல்
குரங்கு தமிழனாய்த்தான் மாறியதா என்பது முதல்
கம்பன் சைவனா , வைஷ்ணவனா ? தமிழ் எழுத்துக்கள்
ஓம் என்ற முட்டையை உடைத்துக்கொண்டு
வெளிவந்துள்ள வரலாறுவரையுள்ள இலக்கியத்திற்குப்
புறம்பான தொண்டுகளையெல்லாம் அப்படியே கட்டி
வைத்துவிட்டு இலக்கியத்தை அனுபவிக்கும் முறையை
உணர்த்த முன்வரவேண்டும். ( புதுமைப்பித்தன் - மணிக்கொடி 01/சூலை/1934)

மணிக்கொடி பொருளாதார நிர்பந்தம் என்ற நண்பரால் சிசுஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற குப்பைத் தொட்டியில் எறியப்பட்டு மூச்சுப் பேச்சற்றுக் கிடந்தஅந்தக் குழந்தையை எடுத்து வந்து ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காகநானும் பி.எஸ் ராமையா என்ற நண்பரும் எங்களைப் போலவே உற்சாகத்தை மட்டும்மூலதனமாகக் கொண்ட இன்னும் சக எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம் .அது இரண்டு மூன்று வருஷம் கன்னிப்பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில் அதைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஓடும் நண்பரைப் (ப.ராமசாமி) பெற்றோம் , அவர் அவளை ஒருவருக்கு விற்றார் .விற்ற உடனே அவளுக்கு ஜீவன் முக்தி இந்தக் கலிகாலத்தில் கிடைத்தது , இதுதான் மணிக்கொடியின் கதை - புதுமைப்பித்தன்

மேற்கோள்கள்

  • முனைவன் சிற்றிதழ் மூலம் வெளியான மணிக்கொடி பவளவிழா மலர்
  • புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விசமத்தனங்களும் - தொ.மு.சி ரகுநாதன்
  • எழுத்து சிற்றிதழ்கள்
  • சுபமங்களா சிற்றிதழ்கள்
  • மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள்
  • தமிழில் சிறுபத்திரிகைகள் - வல்லிக்கண்ணன்

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!