பிரபாவதிகுப்தா ( Prabhavatigupta ) (இறப்பு சுமார். 443 பொ.ச. [1] ), ஓர் குப்த இளவரசியும் வாகடக மன்னன் இரண்டாம் உருத்ரசேனனின் மனைவியும் ஆவார். தனது கணவரின் மரணத்தைத் தொடர்ந்து, இவர் சுமார் பொ.ச.390 முதல் 410 வரை வாகாடகா இராச்சியத்தை அரசப் பிரதிநிதியாக திறம்பட ஆட்சி செய்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
பிரபாவதிகுப்தா, குப்த ஆட்சியாளரான இரண்டாம் சந்திரகுப்தருக்கும் அவரது ராணி குபேரநாகா என்பவருக்கும் மகளாவார். வாகாடக வம்சத்தின் இரண்டாம் உருத்ரசேனனை இவர் மணந்தார்.[2] உருத்ரசேனன் இறப்பதற்கு முன் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். இவர்களுக்கு திவாகரசேனன், தாமோதரசேனன், மற்றும் பிரவரசேனன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் யாரும் தங்கள் தந்தையின் அகால மரணத்தின் போது பெரியவர்களாக இருக்கவில்லை. [3]
வாகாடக சாம்ராஜ்யத்தின் ஆட்சிப் பிரதிநிதி
உருத்ரசேனனுக்கும் பிரபாவதிகுப்தாவிற்கும் பிறாந்த மூத்த மகனான திவாகரசேனன், வாகாடக அரசின் பட்டத்து இளவரசன் ஆவார். அவர் இன்னும் குழந்தையாக இருந்ததால், பிரபாவதிகுப்தா ஆட்சியை ஏற்று அவரது பெயரில் ஆட்சி செய்தார். பிரபாவதிகுப்தா குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் ஆட்சியாளராக இருந்ததை புனே மானியத்தின் மூலம் அறியமுடிகிறது. அது இவரது சொந்த ஆட்சியின் பதின்மூன்றாவது ஆண்டைச் சேர்ந்தது. அதில் இவர் தன்னை " யுவராஜா திவாகரசேனனின் தாய்" என்று அழைத்துக் கொள்கிறார். பட்டத்து இளவரசர் திவாகரசேனன் தனது பதினாறாவது வயதை எட்டிய பிறகும்கூட , பிரபாவதிகுப்தா வாகாடக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஏனெனில் திவாகரசேனன் தனது தந்தைவழி சிம்மாசனத்தில் ஏறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பிரபாவதிகுப்தாவின் தொடர்ச்சியான அரசியல் ஆதிக்கம், திவாகரசேனனை தனது சொந்த பெயரில் ஆட்சி செய்வதைத் தடுத்த சில விசேஷ சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம் அல்லது பிரபாவதிகுப்தாவின் சொந்த அதிகார மோகம் காரணமாகவும் இருக்கலாம். [4]
பொ.ச.410 வாக்கில் திவாகரசேனனுக்குப் பிறகு அவனது இளைய சகோதரன் தாமோதரசேனன் ஆட்சிக்கு வந்தான். ஒரு காலத்தில், பிரபாவதிகுப்தா அவன் சார்பாகவும் ஆட்சிப் பிரதிநிதியாகவும் செயல்பட்டார். [5] பிரபாவதிகுப்தா ஆட்சியில் இருந்த காலத்தில், வாகாடகாகள் மீது குப்த செல்வாக்கு உச்சத்தை எட்டியது. பிரபாவதிகுப்தாவின் கல்வெட்டுகள் தனது சொந்த குப்த மரபியலை வழங்குகின்றன. [6] உண்மையில், பிரபாவதிகுப்தாவின் ஆட்சியின் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள், வகாடக சாம்ராஜ்யம் "நடைமுறையில் குப்தா பேரரசின் ஒரு பகுதியாக" இருந்தது. [7]
பிற்கால வாழ்வு
பிரபாவதிகுப்தா தனது ஆட்சிக்காலம் முடிந்த பிறகும் இரண்டு தசாப்தங்களாக பொது வாழ்வில் தீவிரமாக இருந்தார். இவர் தனது மகன் இரண்டாம் பிரவரசேனனின் (ஆட்சி.420-455) ஆட்சியின் 19வது ஆண்டில் உதவித்தொகை வழங்கியதன் பதிவுகள் உள்ளன. இதில் இவர் "சிறந்த 'மகாராஜாக்களான' தாமோதரசேனன் மற்றும் பிரவரசேனனின் தாய்" என்று அழைக்கப்படுகிறார். [4] நான்காண்டுகளுக்குப் பிறகும், இரண்டாம் பிரவரசேனன் தனக்கும் தன்னுடைய தாய்க்கும் இம்மையிலும் மறுமையிலும் ஆன்மிக நலனுக்காக மானியம் செய்தபோது இவர் அப்போதும் உயிருடன் இருந்தார். [8] பாட்னா அருங்காட்சியகத்த்திலுள்ள ஒரு செப்புத் தகட்டில், பிரவரசேனனின் நன்கொடையிலிருந்து அனைத்து மதத் தகுதியும் ராணி அன்னைக்குச் சேரும் என்று கூறப்பட்டுள்ளது. [9] பிரபாவதிகுப்தா, விஷ்ணு பக்தராக விவரிக்கப்படுவதால், மத விஷயங்களில் ஆழ்ந்த அக்கறை கொண்டவராகத் தெரிகிறது. மேலும் நாக்பூருக்கு அருகிலுள்ள ராம்டெக் என்ற இடத்தில் உள்ள கடவுளுடன் அடையாளம் காணப்பட்ட அவரது துணை தெய்வமான இராமகிரிசுவாமியின் பாதங்களிலிருந்து ஒரு சாசனத்தை வெளியிட்டார்.[10]