தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்கள் கையாளும் தமிழை இங்குப் பழந்தமிழ் என்று குறிப்பிடுகிறோம்.[சான்று தேவை] பிற்காலத் தமிழிலோ, இக்காலத் தமிழிலோ கையாளப்படுவனவற்றை ஒப்புநோக்கத்துக்காக மட்டுமே பழந்தமிழ்ப் பாங்கினைத் தனியாக எடுத்துக்காட்டிக் குறிப்பிடுகிறோம். சங்கநூல் பாடல்களும், அதற்குப் பெருமக்கள் எழுதியுள்ள உரைகளும் இவற்றிற்குச் சான்று மூலங்கள்.
செஞ்சொல்லை இலக்கண நூலார் செந்தமிழ் என்று குறிப்பிடுகின்றனர். வட்டார வழக்கில் திரியாத சொல் என்று இதனைக் கூறலாம். தொல்காப்பியம் இதனை இயற்சொல்[3] என்று குறிப்பிடுகிறது. வட்டார மக்கள் வளைத்துக்கொண்ட சொல் கொடுந்தமிழ். கொடுக்கும்போது கை வளைவது போலப் பேசும்போது வளைந்த சொல் கொடுந்தமிழ்.[4]பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பன இதன் பாகுபாடுகள்.
பெயர்ச்சொல்
குழந்தைகளுக்கும், மக்களுக்கும் இடுகுறியால் பெயர் சூட்டி வழங்குவது போல, பொருள்களுக்கு மரபு வழியில் பெயர் சூட்டப்பட்டு வழங்கும் பெயரைப் பெயர்ச்சொல் என்கிறோம். இதனைத் தமிழ்மொழி உயர்திணை, அஃறிணை என இரண்டு திணைகளாகவும், ஆண்பால், பெண்பால், பலர்பால் என உயர்திணைச் சொற்களை மூன்று பால்களாகவும், ஒன்றன்பால், பலவின்பால் என அஃறிணைச் சொற்களை இரண்டு பால்களாகவும் பாகுபடுத்திக்கொண்டுள்ளனர். மோலும் அவற்றைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடப்பெயர்களாகவும், ஒருமை. பன்மை என இரண்டு எண்-நிலைகளாகவும் பாகுபடுத்திக்கொண்டு அவற்றிற்கு ஏற்ற வினைச்சொல் முடிபுகளைக் கொண்டுள்ளனர்.
சொல்லை ஒலி நோக்கில் மூன்று வகையாகப் பாகுபடுத்திக்கொண்டனர். அவை ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு மாத்திரை ஒலியைக் கடந்து ஒலிக்கும் 'பொதுமொழி' என்பன.[11] சொற்கள் புணரும்போது நிகழும் மாற்றங்களிலிருந்து இந்த முந்நிலைப் பாகுபாட்டின் இன்றியமையாமையை உணரமுடிகிறது.
பாகுபாட்டின் பயன்
'நா' என்பது நாக்கைக் குறிக்கும் ஒரெழுத்தொருமொழி. "நாச்செற்று விக்குள் மேல் வாராமுன்" என்பது திருக்குறள். இந்தத் தொடரில் நா என்பது எழுவாய். அஃறிணை. செற்று [12] என்பது அதன் வினை. எழுவாய்த் தொடர் ஒற்று மிகாமல் இயல்பாக வருதல் வேண்டும். ஆனால் இங்கு ஒற்று மிக்கு வந்துள்ளதைக் காண்கிறோம். பூ என்பது ஓரெழுத்தொருமொழி. பூ பூத்தது - இங்கு ஒற்று மிகவில்லை. பூப் பூக்கும் காலம் - இங்கு ஒற்று மிக்கது. இவ்வாறு ஓரெழுத்தொருமொழி ஒற்று மிக்கும், மிகாமலும் உறழ்ந்து வரும்.
'கடு' [13] என்பது ஈரெழுத்தொருமொழி. 'புளி' என்பது மற்றொரு ஈரெழுத்தொருமொழி. இவை 'கடு தின்றான்', 'கடுத் தின்றான்' என ஒற்று மிக்கும் மிகாமலும் புணரும். புளி என்பதும் அவ்வாறே 'புளி தின்றான்', 'புளித் தின்றான்' எனப் புணரும். பொருளில் மாறுபாடு இல்லை.
'நிலா', 'கனா' என்பன இரண்டு மாத்திரையின் மிக்கு வந்த பொதுமொழி.[14] இது 'நிலா தோன்றிற்று' என எழுவாய்த் தொடரில் இயல்பாக மட்டும் வந்தது. 'கனாக் கண்டான்' என அஃறிணை இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிக்கு வந்தது.[15]