நோய்க்காவி

Anopheles albimanus நுளம்பானது ஒரு மனிதனின் கையிலிருந்து குருதியை உறிஞ்சுகின்றது. அப்பொது மலேரியா நோயை உருவாக்கும் நோய்க்காரணியை காவிச் செல்லும்

நோய்க்காவி என்பவை தொற்றுநோய்களுக்கு காரணமான நோய்க்காரணியை ஒரு ஓம்புயிர் அல்லது விருந்து வழங்கியிலிருந்து வேறொரு ஓம்புயிர் அல்லது விருந்து வழங்கிக்கு கடத்தும் வல்லமையுள்ள ஒரு உயிருள்ள கடத்தி[1][2]. இவற்றின் தொழிற்பாடு தொற்றுநோய்களின் கடத்தல் அல்லது பரவலுக்கு உதவும் காரணிகளுள் ஒன்றாக இருக்கிறது.

வகைகள்

ஆத்ரோபோடா

பொதுவில் அறியப்பட்ட நோய்க்காவிகளாவன முதுகெலும்பிலிகளான (Invertibrates) ஆத்ரோபோடா (Arthropoda) தொகுதியை அல்லது கணத்தைச் (Phylum) சேர்ந்த உயிரினங்கள், பொதுவாக பூச்சிகள் (insects). ஆத்ரோபோடா விலங்குகள் மனிதருக்கு கடித்தல், குத்துதல், தொல்லை கொடுத்தல் போன்ற நேரடியான பாதிப்புக்களை கொடுப்பதுடன் நோய்க்காவியாக செயல்படுவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆத்ரோபோடாவிலுள்ள பல சாதியைச் சேர்ந்த உயிரினங்கள் நோய்க்காவியாக இருப்பினும், மிக முக்கியமான நோய்க்காவிகள் நுளம்பு/கொசுவும் (mosquito), தெள்ளும் (tick) ஆகும். இவற்றுடன் ஈக்கள் (flies), பேன்கள் (lice), தெள்ளுப்பூச்சி (fleas) போன்றனவும் நோய்க்காவியாக செயற்படுகின்றன. குருதியை உணவாகக்கொள்ளும் ஆத்ரோபோடா உயிரினங்களே மனிதர்களில் ஏற்படும் தொற்றுநோய்க்கான நோய்க்காவிகளில் அதிக பாதிப்பை கொடுப்பன[3].

பாலூட்டிகள்

இவற்றுடன் சில வீட்டு விலங்குகளும், ஒட்டுண்ணிகளை மனிதருக்கோ, அல்லது வேறு பாலூட்டிகளுக்கோ கடத்த வல்ல வேறு பாலூட்டிகளும் கூட நோய்க்காவியாக தொழிற்பட வல்லன. உதாரணமாக அண்மைக் காலங்களில் பரவிய பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றன முறையே பறவைகள், பன்றிகளிலிருந்து மனிதருக்கு பரவுகின்றன.

ஒரு நோய்க்காவியானது, நோய்க்காரணியான ஒட்டுண்ணி உயிரினத்தின் வாழ்க்கை வட்டத்தின் சில நிலைகளுக்கு அவசியமானதாக இருப்பதுடன், நேரடியாக நோய்க்காரணியை ஓம்புயிரினுள் உட்செலுத்தும் தன்மையைக் கொண்டிருக்கும்.

உதாரணங்களும், அவை காவும் நோய்களும்

அ)பல தொற்றுநோய்களுக்கு நுளம்பு/கொசு நோய்க்காவியாக இருக்கிறது.

  • வைரசினால் ஏற்படும் வெவ்வேறு வகை மூளைஅழற்சி நோய்கள் (Encephalitis) வெவ்வேறு இன நுளம்புகளால்/கொசுக்களால் காவிச் செல்லப்படுகிறது.
  • Anopheles albimanus நுளம்பு/கொசு மலேரியா நோய்க்கான பிளாஸ்மோடியம் என்னும் நுண்ணுயிரை காவிச் செல்லும்.
  • Aedes aegypti, Aedes albopictus என்னும் இரு நுளம்பு இனங்கள் டெங்கு காய்ச்சலுக்கான (Dengu fever) வைரசை கடத்தும்[1].
  • மஞ்சள் காய்ச்சலுக்கான (yellow fever) வைரசை Aedes aegypti இன நுளம்பு/கொசு காவிச்செல்கிறது.

ஆ)Pulex, Xenopsylla என்னும் தெள்ளுப் பூச்சிகளால் ஒருவகை பிளேக்நோய் (Bubonic Plague) கடத்தப்படுகிறது.

இ)Tsetse ஈக்களின் பல சாதிகள், ‘ஆப்பிரிக்க தூக்க நோய்' என்று அழைக்கப்படும் African trypanosomiasis நோய்க்காரணியை கடத்துகின்றன.

நோய்க்காவிகளின் புத்தெழுச்சி

குறைவாக இருந்த பல தொற்றுநோய்கள், 1970 ஆம் ஆண்டிற்குப் பின்னர், மீண்டும் அதிகளவில் வரத் தொடங்கின. இதற்கான காரணங்களில் ஒன்று நோய்க்காவிகளான பூச்சிகளின் அதிகரிப்பாகும். பூச்சிநாசினிகளின் பாவனை அதிகரித்தமையால், அவற்றை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட பல புதிய இனங்கள் பூச்சிகளில் தோன்றின. அவை தொற்று நோய்க்காரணிகளை காவிச்செல்ல உதவியமையால் தொற்றுநோய்த் தாக்கம் புத்தெழுச்சி பெற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.[4]. புவி சூடாதல் அல்லது உலக வெப்பமயமாதல் காரணமாக, மனித தொற்றுநோய்களைக் கடத்தும் நோய்க்காவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தொற்றுநோய்களும் அதிகரிக்கும் அப்பாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்[2]

மேலதிக தகவலுக்கு

  • நோய்க்காவியை கட்டுப்படுத்த[5]

அடிக்குறிப்பு

  1. Last, James, ed. (2001). A Dictionary of Epidemiology. New York: Oxford University Press. p. 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195141696. இணையக் கணினி நூலக மைய எண் 207797812.
  2. Roberts, Larry S.; John, Janovy; Gerald D., Schmidt (2008). Foundations of Parasitology. McGraw Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0073028279. இணையக் கணினி நூலக மைய எண் 226356765.
  3. Goddard, J. (2000). Infectious Diseases and Arthropods. Totowa, NJ: Humana Press.
  4. Gubler, D. J. (1997). "Resurgent Vector-Borne Diseases as a Global Health Problem." Emerging Infectious Diseases 4(3):442–450
  5. Vector Control, 'Methods for use by individuals and communities', Prepared by Jan A. Rozendaal, World Health Organization, Geneva, 1997

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!