நூறாண்டுப் போர்

நூறாண்டுப் போர்

புனைவியல் ஓவியம்: ஆர்லியன்ஸ் முற்றுகையின்போது ஜோன் ஆஃப் ஆர்க்.
நாள் 1337–1453
இடம் முக்கியமாக பிரான்சும் கீழ்ப்பகுதி நாடுகளும்
வால்வா பிரிவினர் பிரான்சின் அரசர்களாகத் தம்மை உறுதிப்படுத்திக் கொண்டனர். பிளாண்டாஜெனெட் பிரிவினர் தோல்வியுற்றனர்.
நிலப்பகுதி
மாற்றங்கள்
வால்வா பிரிவினர் கலே பேலே தவிர்ந்த பிரான்சின் ஏனைய பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்
பிரிவினர்
வால்வா பிரிவு
Castile
ஸ்காட்லாந்து
ஜெனோவா
மஜோர்க்கா
பொகீமியா
அரகன்
பிரிட்டனி
பிளாண்டாஜெனெட் பிரிவு
பர்கண்டி
பிரிட்டனி
போர்த்துக்கல்
நவார்
பிளாண்டர்ஸ்
எனோ
அக்கியூட்டேன்
லக்சம்பேர்க்
புனித ரோமன் பேரரசு

நூறாண்டுப் போர் என்பது 1337 ஆம் ஆண்டு முதல் 1453 ஆம் ஆண்டுவரை பிரான்சின் இரண்டு அரச குடும்பங்களிடையே நடந்த ஆட்சியுரிமைக்கான போரைக் குறிக்கும். பிரான்சை ஆண்ட கப்பீஷன் அரசமரபு வாரிசு இன்றி அற்றுப்போனபோது இந்நிலை ஏற்பட்டது. ஆட்சி உரிமைக்கான இரண்டு முதன்மையான போட்டியாளர்களாக வால்வா (Valois) பிரிவினரும், பிளாண்டாஜெனெட் (Plantagenet) அல்லது அஞ்சு என அழைக்கப்பட்ட பிரிவினரும் இருந்தனர். வால்வா பிரிவினர் பிரான்சின் அரச பதவியைக் கோரிய அதே வேளை, இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாண்டாஜெனெட் பிரிவினர் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளினதும் அரச பதவிகள் தமக்கே உரியன என்றனர். இங்கிலாந்தின் பிளாண்டாஜெனெட் அரசர்கள், பிரான்சின் அஞ்சு, மற்றும் நோர்மண்டி பகுதிகளை அடியாகக் கொண்டவர்கள். பிரெஞ்சுப் படை வீரர்கள் இரண்டு பகுதிகளிலும் சேர்ந்து போரிட்டனர். பர்கண்டி, அக்கியூட்டேன் பகுதிகளைச் சேர்ந்தோர் பிளாண்டாஜெனெட் பிரிவினருக்குக் குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கினர்.

பிணக்கு 116 ஆண்டுகளாக நீடித்த போதிலும், இடையிடையே ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய காலங்களும் உண்டு. இவற்றுள் இரண்டு அமைதிக்காலங்கள் ஓரளவு நீண்டவை. இவை 1360 - 1369 வரையும், அடுத்தது 1389 - 1415 வரையுமான காலப்பகுதிகளாகும். அமைதிக் காலப்பகுதியைக் கழித்துப் பார்க்கும்போது போர் 81 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது எனலாம். இறுதியில் பிளாண்டாஜெனெட் பிரிவினர் பிரான்சை விட்டுத் வெளியேற்றப்பட்ட பின்னரே போர் முடிவுக்கு வந்தது. எனினும், டுவா ஒப்பந்தப்படி பிரான்சின் ஆறாம் சார்லஸ் இறந்த பின்னர் ஆட்சியுரிமை இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றிக்கு என இணங்கிக் கொள்ளப்பட்டதால் இப் போர் பிளாண்டாஜெனெட் பிரிவினருக்கு ஒரு உத்திசார்ந்த வெற்றியாக அமைந்தது. இதன்படி 1431 ஆம் ஆண்டில் ஆறாம் ஹென்றி பாரிசில் முடிசூட்டிக் கொண்டார். எனினும், 1450களில், வால்வா பிரிவினர் பிளாண்டாஜெனெட் பிரிவினரைப் பிரான்சின் பெரும் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றி கண்டனர்.

இப் போர் உண்மையில் தொடர்ச்சியாக நடந்த பல போர்களாகும். இது பொதுவாக மூன்று அல்லது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. எட்வார்டியப் போர் (1337-1360), கரோலின் போர் (1369-1389), லங்காஸ்ட்ரியப் போர் (1415-1429), ஜோன் ஆஃப் ஆர்கின் தோற்றத்துக்குப் பின்னான இங்கிலாந்து அரச மரபினரின் இறங்குமுகம் (1412-1431). சம காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மேலும் பல பிணக்குகள் இப் போருடன் தொடர்புடையவை. வாரிசுரிமைக்கான பிரெட்டன் போர், காஸ்ட்டிலிய உள்நாட்டுப் போர், இரண்டு பீட்டர்களுக்கு இடையிலான போர் என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கவை. நூறாண்டுப் போர் எனும் சொற்றொடர், நிகழ்ந்த தொடர் நிகழ்வுகளைக் குறிக்க வரலாற்றாளர்கள் பிற்காலத்தில் பயன்படுத்தியது ஆகும்.

பிரச்சினையின் தொடக்கம்

பிரச்சினையின் மூல காரணங்களை 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மக்கள்நிலை, பொருளாதார மற்றும் அரசியில் சிக்கல்களில் காண முடியும். கியான், பிளாண்டர் மற்றும் இசுக்காட்லாந்து குறித்து பிரான்சு அரசர் மற்றும் இங்கிலாந்து அரசர் இடையே வளர்ந்த பதற்றமா சூழலே போர் வெடிக்கக் காரணமானது. கேப்டிசியன்களின் ஆண் வாரிசுகளின் அரச உரிமை குறித்த பிரச்சினைகள் நேரடி காரணமாகும்.

பிரான்சின் அரச உரிமைச் சிக்கல்: 1314-28

1316 இல் பத்தாம் லூயியின் மறைவுக்குப் பிறகு பிரான்சின் அரச பதவிக்கு பெண் வாரிசு வருவது குறித்து கேள்விகள் எழுந்தன. பத்தாம் லூயி ஒரே ஒரு மகள் மட்டுமே கொண்டிருந்தார், அவரது மறைவுக்குப் பிறந்த மகனான முதலாம் ஜான் சில நாட்கள் மட்டுமே வாழ்ந்தார். லாயியின் சகோதரர் பிலிப், பிரான்சின் அரச பதவிக்கு வாரிசாக வருவதற்கு பெண்களுக்கு தகுதி இல்லை என்று கூறினார். அவர் தனது அரசியல் அறிவாற்றல் மூலம் அமைச்சர்களின் ஆதரவைப் பெற்று பிரான்சின் அரச பதவியைக் கைப்பற்றி ஐந்தாம் பிலிப்பாக ஆனார். அவர் கூறிய அதே காரணங்களால் அவரின் மகள்களுக்கும் அரச பதவி மறுக்கப்பட்டு, 1322 அவரது இளைய சகோதரர் நான்காம் சார்லசுக்கு வாரிசு உரிமை வழங்கப்பட்டது.[1]

நான்காம் சார்லசு 1328 இல் மறைந்த போது, அவர் ஒரு மகளையும் கர்ப்பிணியான மனைவியையும் விட்டுச் சென்றார். பிறக்க இருக்கும் குழந்தை ஆணாக இருந்தால், அவன் அரசனாவான். இல்லையெனில் சார்லசு தனது வாரிசைத் தீர்மாணிக்கும் முடிவை அரசவையின் மூத்தோர்களிடம் விட்டுச் சென்றார். நெருங்கிய இரத்த சொந்தத்தின் அடிப்படையில், நான்காம் சார்லசின் நெருங்கிய ஆண் வாரிசு அவரது மருமகன் இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு ஆவார். எட்வர்டு மறைந்த நான்காம் சார்லசின் சகோதரி இசபெல்லாவின் மகன், ஆனால் இசபெல்லா தான் பெற்றி இருக்காத வாரிசு உரிமையை தனது மகனுக்கு கடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இசுபெல்லா மற்றும் அவரது காதலர் ரோஜர் மார்டமர், முந்தைய இங்கிலாந்து அரசரான இரண்டாம் எட்வர்டை கொலை செய்ததாக சந்தேகம் அப்போது நிலவிவந்தது. இதன் காரணமாக பிரான்சு மூத்தோர்கள் பின்வாங்கினர். பிரான்சின் அரசவையின் அமைச்சர்கள் மற்றும் திருச்சபையினர் மற்றும் பாரிசு பல்கலைக்கழகத்தினர், தனது தாய் வழியில் அரச உரிமையினைப் பெறும் ஆண் வாரிசுகளைத் தவிர்க்க வேண்டும் என முடிவு செய்தனர். எனவே, ஆண் வாரிசு வழியாக அரச பதவிக்கு நெருக்கமாக இருந்தவர் நான்காம் சார்லசின் ஒன்று விட்ட சகோதரர், வாலியசின் கவுண்டான பிலிப் ஆவார், மேலும் அவர் பிரான்சின் அரசர் ஆறாம் பிலிப்பாக முடிசூட்டப்பட வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. 1340 இல் அவிக்னென் போப்புகள் சாலிக்கின் சட்டப்படி ஆண்கள் தங்களின் தாய்மார்கள் வழியாக வாரிசு உரிமை பெற முடியாது என்பதை உறுதிப்படுத்தினர்.[1][2]

படிப்படியாக, மூன்றாம் எட்வர்டும் ஆறாம் பிலிப்பை ஏற்றுக்கொண்டு அவரது ஆளுகையின் கீழ் இருந்த பிரான்சின் நிலங்களுக்காக கப்பம் செலுத்தினார். அவர் கியானில் சலுகைகள் வழங்கினார், ஆனால் காரணமின்றி கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் திரும்பப் பெறும் உரிமையை வைத்துக் கொண்டார். அதன் பிறகு, அவர் இசுக்காட்லாந்தின் மீது போர் தொடுத்தபோது இடையூறு செய்யப்படக் கூடாது என்று எதிர்பார்த்தார்.

கியான் குறித்தான சிக்கல்: இறையாண்மை குறித்த பிரச்சினை

1066 இல் நார்மன்களின் வெற்றியிலிருந்து, இங்கிலாந்து மீது நீடித்து வந்த ஆங்கிலோ நார்மன்களின் ஆட்சியானது, ஆஞ்சோவின் ஜெப்ரி மற்றும் பேரரசி மட்டில்டாவின் மகனும் முதலாம் வில்லியமின் கொள்ளும் பேரனுமான என்றி, 1154 இல் இரண்டாம் என்றியாக இங்கிலாந்தின் முதல் ஆஞ்சிவியன் ஆரசராக பொறுப்பேற்றதும் முடிவுக்கு வந்தது.[3] ஆஞ்சிவியன் அரசர்கள் பிரான்சின் அரசரை விட அதிகமான பிரஞ்சுப் பகுதிகளை நேரடியாக ஆண்டு வந்தனர். இருப்பினும், அவர்கள் இப்பகுதிகளுக்காக பிரான்சு அரசருக்கு கப்பம் செலுத்த வேண்டி இருந்தது. 1 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆஞ்சிவியன்கள் தங்கள் பிரஞ்சுக் களங்களின் மீது தன்னாட்சியுரிமை பெற்றனர், இதன் விளைவாக பிரச்சினை நீர்த்துப் போனது.[4]

இங்கிலாந்தின் ஜான் ஆஞ்சிவியன் களங்களை முதலாம் ரிச்சர்டு இடமிருந்து வாரிசுரிமையாகப் பெற்றார். இருப்பினும் இரண்டாம் பிலிப், ஜானின் பலவீனங்களைத் தாக்குவதற்கு சட்டரீதியாகவும் இராணுவரீதியாகவும் தந்திரமாகச் செயல்பட்டு, 1204க்குள் பெரும்பாலான ஆஞ்சிவியன் பகுதிகளின் கட்டுப்பாட்டினை வென்றெடுத்தார்.

இப்போரின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும்

நூறாண்டுப் போர் விரைவான இராணுவ முறைகளின் வளர்ச்சி காலமாக இருந்தது. ஆயுத பயன்பாடு, உத்திகள், இராணுவ கட்டமைப்பு மற்றும் போர் குறித்த சமூக நோக்கம் ஆகியவை அனைத்தும் இக்காலத்தில் மக்களிடையே பெருமாற்றம் கண்டது. இதற்கு ஓரளவுக்கு தொழில்நுட்ப முன்னேற்றமும், ஓரளவுக்கு போரினால் கற்ற பாடமும், ஓரளவுக்கு போருக்காகும் செலவுகளும் காரணமாயின. நூறாண்டு போருக்கு முன், அதிக குதிரைப்படை உடைய நாடு இராணுவ சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்டது, ஆனால் இப்போரின் இறுதியில், இந்த நம்பிக்கை மாற்றப்பட்டது. குதிரைப்படையின் பயன்பாடு துப்பாக்கி மற்றும், நீண்ட தூரம் பாயும் ஆயுதங்கள் மூலம் தேவையற்றவை ஆயின. இப்போர்களின் போது மூன்றான் எட்வர்டு, தனது குதிரைப்படையினை வழிபோக்கிற்காகவும் துரத்திச்செல்லவும் மட்டுமே பயன்படுத்த தொடங்கினார்.[5] இப்போர்களின் இறுதியில் அதிகமாக கவசம் அணிந்த போர்வீரர்களின் தேவை இல்லாமல் போனது.[6]

இப்போரினால் பிரான்சு தேசம் மிகவும் சேதமடந்தாலும், இது பிரெஞ்சுக்கரர்களிடையே தேசிய உணர்வினை தூண்ட காரணமாயிருந்தது. நிலப்பிரபுத்துவ முடியாட்சியாக இருந்த பிரான்சை மக்களாட்சிக்கு கொண்டுவர இவை பெரிதும் உதவின. இது ஆங்கில மற்றும் பிரஞ்சு அரசர்களின் மேதலாக மட்டும் இல்லாமல், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்கரர்களிடையே இடையே இருக்கும் மோதலாக மாறியது. ஒருவர் மற்றவரின் மொழியினை அழிக்க முற்பட்டுள்ளனர் என்னும் வதந்தி பரவிதால், தேசிய உணர்வும் மொழிப்பற்றும் மக்களிடையே வெளிகொணரப்பட்டது. ஆட்சியாளர்களின் மொழியாக விளங்கிய பிரஞ்சு மொழி இங்கிலாந்தில் வீழ்ச்சியடைய இது காரணமானது.[7]

கறுப்புச் சாவின் பரவல் (தற்கால எல்லைகளில்).

இப்போரும் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் வந்த கறுப்புச் சாவும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை மிகவும் குறைத்தது. எடுத்துக்காட்டாக இப்போரின் துவக்கத்தில் பிரான்ஸ் 17 மில்லியன் மக்கட்தொகை கொன்டிருந்தது. ஆனால் நூறாண்டு போரின் இறுதியில் அது பாதியாக குறைந்தது.[8] சில இடங்கள் குறிப்பாக மிகவும் பாதிப்புகுள்ளாயின. நார்மாண்டி தனது மக்கட்தொகையில் நான்கின் மூன்று பங்கினை இழந்தது. பாரிஸ் பகுதியில் 1328 மற்றும் 1470க்கு இடைப்பட்ட காலத்தில் மக்கட்தொகை குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்காக குறைக்கப்பட்டது.[9]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Brissaud, Jean (1915). Garner, James W. Tr (ed.). History of French Public Law. The Continental Legal History series. Vol 9. Boston: Little, Brown and Company. {{cite book}}: Invalid |ref=harv (help)
  2. Previté-Orton, C.W (1978). "The shorter Cambridge Medieval History 2".. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-20963-3. 
  3. Bartlett, Robert (2000). J.M.Roberts (ed.). England Under the Norman and Angevin Kings 1075–1225. London: OUP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-925101-8. {{cite book}}: Invalid |ref=harv (help)
  4. Bartlett, Robert (2000). J.M.Roberts (ed.). England Under the Norman and Angevin Kings 1075–1225. London: OUP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-925101-8. {{cite book}}: Invalid |ref=harv (help)
  5. Powicke 1962, ப. 189
  6. Preston, Wise & Werner 1991, ப. 84
  7. Holmes, Urban & Schutz 1948, ப. 61
  8. Turchin 2003, ப. 179–180Historical dynamics: why states rise and fall
  9. Ladurie 1987, ப. 32The French peasantry, 1450–1660

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!