நுண் உறுப்புகள் அல்லது உயிரணுவின் உள்ளுறுப்புகள் (organelle) (இலங்கை வழக்கு: புன்னங்கங்கள்) என்பவை ஒரு உயிரணுவின் உட்புறத்தே காணப்படும் பல முக்கியமான தொழில்களைப் புரியும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட உறுப்புகள் ஆகும், பொதுவாக இவை ஒவ்வொன்றும் கொழுப்பினால் ஆக்கப்பட்டுள்ள மென்சவ்வைக் கொண்டுள்ளன.
மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கள் நுண்ணுறுப்புகளைக் கொண்டுள்ளன. நிலைக்கருவிலிகளிடம் இவை இல்லை என முன்னர் கருதப்பட்டாலும், தற்போது உண்டு என ஆராயப்பட்டுள்ளது.[1] நுண்ணுறுப்புகள் அனைத்தும் நுண்நோக்கி கொண்டே அவதானிக்க முடியும். ஒரு உயிரணுவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான நுண்ணுறுப்பு அதன் கரு ஆகும்.
மெய்க்கருவுயிரிகளின் நுண்ணுறுப்புகள்
இவை கொழுப்பினாலான மென்சவ்வைக் கொண்டுள்ளன. கரு, புன்வெற்றிடம் போன்ற தோற்றத்தில் பெரிய நுண்ணுறுப்புகள் ஒளி நுண்ணோக்கியின் உதவியுடன் இலகுவில் அவதானிக்கலாம். அனைத்து நுண்ணுறுப்புகளும் அனைத்து மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவதில்லை, ஒரு சில மெய்க்கருவுயிரிகளில் உள்ள நுண்ணுறுப்பு வேறு சிலவற்றில் இல்லாமல் இருக்கக்கூடும். நுண்ணுறுப்புகளைச் சூழப்பட்டிருக்கும் மென்சவ்வு ஒன்று தொடக்கம் மூன்று வரையான படலத்தைக் கொண்டிருக்கலாம், இது நுண்ணுறுப்புகளைப் பொறுத்து மாறுபடுகின்றது.
நிலைக்கருவிலிகள் மெய்க்கருவுயிரிகள் போன்று சிக்கல் நிறைந்தவை அல்ல. முன்னர் நிலைக்கருவிலிகளுக்குள் கொழுப்பு மென்சவ்வால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை என்று நம்பப்பட்டது, ஆனால் இன்று அவற்றுள் உள்ள நுண் உறுப்புகள் அறியப்பட்டுள்ளது. 1970களில் பாக்டீரியா மேசோசோம் என்னும் நுண் உறுப்பைக் கொண்டுள்ளது என்று அவதானிக்கப்பட்டது, ஆனால் அவை இலத்திரன் நுண் நோக்கியில் பாக்டீரியாவைப் பார்ப்பதற்காகச் சேர்க்கப்பட்ட வேதிப்போருட்களின் விளைவால் ஏற்பட்ட போலி உருவம் எனத் தெரியவந்தது.
[2] ஆராய்வுகளின் பெறுபேறாக நிலைக்கருவிலிகளின் நுண் உறுப்புகள் கண்டறியப்பட்டன.
மேற்கோள்கள்
↑Kerfeld, Ca; Sawaya, Mr; Tanaka, S; Nguyen, Cv; Phillips, M; Beeby, M; Yeates, To (August 2005). "Protein structures forming the shell of primitive bacterial organelles.". Science309 (5736): 936–8. doi:10.1126/science.1113397. பப்மெட்:16081736.
↑Ryter A (1988). "Contribution of new cryomethods to a better knowledge of bacterial anatomy". Ann. Inst. Pasteur Microbiol.139 (1): 33–44. doi:10.1016/0769-2609(88)90095-6. பப்மெட்:3289587.