நாராயணன் கிருஷ்ணன் (Narayanan Krishnan) (பிறப்பு 1981) தமிழ்நாட்டின்மதுரை நகரில் வாழும் ஓர் சமூக சேவகர். கூடுதல் ஊதியம் தந்த தனது உணவக சமையல் தொழிலை கைவிட்டு ஆதரவற்ற, தெருவோர மனிதர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதை முழுநேரப்பணியாகக் கொண்டவர்[1].
இளமை
நா.கிருஷ்ணன் மதுரையில் பிறந்தவர்.ஓர் ஐந்து நட்சத்திர உணவகத்தில் பயின்ற விருதுகள் பெற்று சமையற்காரராக விளங்கியவர். சுவிட்சர்லாந்து நாட்டில் உயர்ந்த பணி ஒன்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், வெளிநாடு செல்லுமுன் குடும்பத்தினரைக் காண மதுரை வந்தவர், தெருவோரம் மனநிலை சரியில்லாத ஒருவர் பசிக்கொடுமையால் தமது கழிவினையே உண்ணுவதைக் கண்டு தமது வாழ்க்கைப் பாதையையே மாற்றிக்கொண்டார்.[2]
சேவைப்பணி
2003ஆம் ஆண்டு கிருஷ்ணன் இலாபநோக்கற்ற "அக்சயா அறக்கட்டளை"யை நிறுவினார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கே எழுந்து எளிய உணவு தயாரித்து சுடச்சுட தமது கூட்டாளிகளுடன் சிற்றுந்து ஒன்றில் எடுத்துச்சென்று 200 கி.மீ பயணித்து மதுரையின் சுற்றுப்புறங்களில் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த வீடில்லா மக்களுக்கு உணவளிக்கிறார். காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைகளிலும் 400 பேருக்கு உணவு வழங்குகிறார்.2003 முதல் இது வரை 1.2 மில்லியன் சாப்பாடுகளை வழங்கியுள்ளார்.[3]
2010ஆம் ஆண்டிற்கான சி. என். என் உயர்ந்த 10 நாயகர்கள் பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பட்டியலில் உள்ள பத்து பேரில் இவர் மட்டுமே இந்தியர். இவர்களிலிருந்து பொதுமக்கள் இணையவழி தேர்ந்தெடுப்பில் சி.என்.என் ஆண்டு நாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சர்ச்சை
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் , நாராயணன் கிருஷ்ணன் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அவரது அக் ஷயா இல்லத்தில் இருந்த ஷப்னம் என்ற பெண், அங்கு உறுப்பு வணிகம் நடைபெறுவதாக காவல்துறையில் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளை உண்மையை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்தது. குழுவின் ஆய்வறிக்கையில் , இல்லத்தில் தங்குபவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அங்கு வருடத்திற்கு 120 பேர் இறப்பதாகவும், இறந்தவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யாமலே அவர்கள் மூச்சடைப்பு அல்லது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. இல்லத்தில் இருந்து 60 பேர் காணாமல் போனதாகவும் அறிக்கை கூறுகிறது.[4][5]