துளசி (தாவர வகைப்பாட்டியல்: Ocimum tenuiflorum) மூலிகைச் செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[2][3][4][5] ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து வணங்கும் வழக்கமும் உண்டு.
வேறு பெயர்கள்
துழாய் (நீல நிற துளசி), துளவம், மாலலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி.
வகைகள்
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத் துளசி ஆகியவை துளசியின் வகைகள்.
வளரும் தன்மை
வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 – 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ்.
காட்டுத் துளசி
இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியை உண்பது போல இதனை யாரும் உண்ணுவதில்லை. இதனைப் பேய்த்துளசி எனவும் கூறுவர்.
செந்துளசி
செந்துளசி பாா்ப்பதற்கு துளசியைப் போன்றே இருப்பினும், தண்டு இலைகள் அனைத்தும் செந்நிறமாகவே இருக்கும். சற்று நீண்ட காம்பில் நீள்வட்ட இலை எதிரடுக்கில் கொண்டவை. இது அாிதான இனங்களில் ஒன்றாகும். செடி முழுவதும் மருத்துவ குணமுடையது.