தற்கொலை (suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்துஇருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பென்சோடையசிபைன்கள் பயன்பாடு போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம் [1][2] பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம் [2][3]. தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி நேற்கோள்ளூம் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன [2]. துப்பாக்கி வகைகள், மருந்துகள் மற்றும் நஞ்சுப் பொருட்கள் முதலானவற்றை எளிதில் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதும் தற்கொலையை தடுக்கும் ஒரு முறையாகும். மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளித்தல் பொருகளை தவறாகப் பயன்படுத்துதலை தவிர்த்தல் முறையான செய்தி ஊடக அறிக்கையால் விழிப்புணர்வூட்டுதல் மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல் போன்றவையும் தற்கொலைகளை குறைக்கும் வழிமுறைகளாகும் [2]. நெருக்கடியான சூழல்கள் தற்கொலைக்குப் பொதுவானவை என்றாலும், அவற்றின் செயல்திறன் குறைவாகவே உள்ளது.[4].
தற்கொலைக்கு மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகள் நாடுகளுக்கு இடையே வேறுபடுகின்றன, மேலும் இம்முறைகள் அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய வழிமுறைகளைச் சார்ந்துள்ளன[5]. தூக்கில் தொங்குதல், பூச்சிக்கொல்லி நஞ்சு அருந்துதல் மற்றும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளுதல் போன்றவை பொதுவான சில தற்கொலை முறைகளாகும்[2][6].
2015 இல் 828,000 இறப்புக்கள் தற்கொலைகளால் நிகழ்ந்துள்ளன. 1990 இல் இது 712,000 இறப்புக்களாக இருந்தது[7]. உலகளாவிய ரீதியில் மரணத்திற்கு காரணமாக விளங்கும் 10 வது முக்கிய காரணியாக தற்கொலை கருதப்படுகிறது[1][8].
உலக சுகாதார நிறுவனம், உலகில் கிட்டத்தட்ட 800000 பேர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலையால் இறப்பதாக குறிப்பிடுகின்றது. மேலும் 15-29 வயதுக்கிடைப்பட்டோரில், தற்கொலையே இறப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக அமைவதாகவும், 78% மான தற்கொலைகள் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நடப்பதாகவும் குறிப்பிடுகிறது.[9]
சுமார் 0.5% முதல் 1.4% மக்கள் தற்கொலை மூலம் இறக்கிறார்கள். ஒர் ஆண்டிற்கு 100,000 நபர்களில் 12 பேர் இத்தகைய முடிவுக்கு ஆளாகிறார்கள் [8][10]. உலகில் மூன்றில் இரண்டு தற்கொலைகள் வளரும் நாடுகளில் ஏற்படுகின்றன [2]. தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் இச்சதவீதம் 1.5 மடங்கு அதிகமாகவும் வளர்ந்த நாடுகளில் இச்சதவீதம் உலகில் 3.5 மடங்காகக் காணப்படுகிறது [11]. 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து இறப்பது பொதுவாகக் காணப்படுகிறது. இருப்பினும், சில நாடுகளில் 15 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களும் இச்செயலில் ஈடுபடுகின்றனர் [11]. ஒவ்வோர் ஆண்டும் 10 முதல் 20 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் தற்கொலை மூலமாக நிகழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது [12]. உயிர்ச் சேதமில்லாத தற்கொலை முயற்சிகளால் காயம் மற்றும் நீண்டகால குறைபாடுகள் ஏற்படுகின்றன. மேற்கத்திய உலகில் இளைஞர்கள் மற்றும் பெண்களில் இம்முயற்சிகள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன [10].
மதம், கௌரவம் மற்றும் வாழ்க்கை அர்த்தம் போன்ற பரந்த இருத்தலியல் கருத்துக்கள் தற்கொலை பற்றிய பார்வைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன [13][14]. வாழ்க்கையின் புனிதத்தன்மை பற்றிய நம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்துகொள்வது என்பது கடவுளுக்கு எதிரான பாவம் அல்லது குற்றம் என்று ஆபிரகாமிய மதங்கள் பாரம்பரியமாக கருதிவருகின்றன [15]. சப்பானிய சாமுராய் சகாப்தத்தில், செப்புக்கு என அறியப்படும் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்துகொள்ளல் ஒரு தோல்விக்கு அல்லது ஒரு போராட்டத்துக்கு அடையாளமாகக் கருதப்பட்டது [16]. கணவனை இழந்த மனைவி தன் கணவனின் உடல் தீயில் எரியும்போது தானாகவோ அல்லது பிறரின் கட்டாயத்தாலோ அந்தத் தீயில் விழுந்து தன்னையும் மாய்த்துக் கொள்ளும் வழக்கம் இந்து சமயத்தின் சடங்காக பின்பற்றப்பட்டு வந்தது.[17]. தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் முன்னர் சட்டவிரோதமானதாக இருந்த போதிலும், பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் இப்போது அவ்வளவாக முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படவில்லை [18]. பல நாடுகள் தற்கொலையை கடுமையான குற்றச்செயலாகக் கருதுகின்றன [19].
தற்கொலைப்படைத் தாக்குதல்
20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் அரிதாக தற்கொலை ஒரு போராட்ட வடிவமாக கருதப்பட்டது. கமிக்காசு என்ற தற்கொலைப் படைத் தாக்குதல் இராணுவம் மற்றும் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டன [20] தற்கொலை என்ற பொருள் கொண்ட சூசைடு என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லான சூசைடியம் என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும் அம்மொழியில் இதற்கு தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளல் என்பது இதன் பொருளாகும்[21].
தற்கொடைத் தாக்குதல் தன்னை தானே விருப்புடன் சாவைத் தழுவி மேற்கொள்ளும் துணிகரத் தாக்குதலை குறிக்கும். தமிழில் தற்கொலைத் தாக்குதல் என்றும் இதைக் குறிப்பர். குறிப்பாக தற்கொலையை மேற்கொள்ளும் பிரிவு தற்கொடை என்றும் அதன் எதிர்ப் பிரிவு தற்கொலை என்றும் குறிப்பர். தற்கொடைத் தாக்குதலை மேற்கொள்ளும் ஒருவரை தற்கொடையாளி அல்லது தற்கொலையாளி என்று அழைப்படுகிறார்கள்.
பண்பாட்டுப் பார்வை
தற்கொலை தொடர்பான பண்பாட்டுப் பார்வைகள் பலவாறாக உள்ளன. ஆபிரகாமிய மதங்கள் தற்கொலையை மரியாதையற்றதாகக் கருதுகின்றன. தற்கொலை கடவுளுக்கு எதிரான செயலாகவும் கருதப்படுகிறது. யப்பானிய சாமுராய் மரபில் ஒருவர் தோற்பதனை விடத் தற்கொலை செய்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவின் உடன்கட்டை ஏறும் பழக்கத்தில் கணவனை இழந்த பெண்கள் கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது. ஐரோப்பாவில் எந்த நாடும் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சியை ஒரு குற்றமாக கருதவில்லை. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவை தற்கொலைச் சட்டம் 1961 மற்றும் 1993 இன் படி தற்கொலையை குற்றம் என்று கருதுவதிலிருந்து நீக்கியது.
காரணங்கள்
மிகுந்த உடல்வேதனை, காயங்கள் - விபத்துக் காரணமாக உடலைப் பயன்படுத்த முடியாத நிலை போன்ற நிலைமைகளில் மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்யும் வழக்கமும் உள்ளது. மருத்துவ உதவியுடனான தற்கொலை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
இந்தியாவில் தற்கொலை
இந்தியாவில், தற்கொலைகள் சட்டவிரோதமானவையாகக் கருதப்படுகின்றன. மற்றும் தற்கொலைக்கு ஆளானவரின் எஞ்சியிருக்கும் குடும்பம் பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு ஆளாகிறது. இந்திய அரசாங்கம் இந்த சட்டத்தை 2014 இல் ரத்து செய்தது. இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வதை குற்றமாகக் கருதும் அரசியலமைப்புச் சட்டத்தின் 309வது பிரிவை நீக்க இந்திய அரசு முடிவு
செய்துள்ளது.[22] உலகளவில் பதின்ம பருவத் தற்கொலைகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.[23]
உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள்
2018-2023 ஆண்டுகளில் ஐ.ஐ.டி 33, என்.ஐ.டி 24, ஐ.ஐ.எம் 4 என மொத்தம் 61 மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன .[24]
நோய்ப் பரவல்
ஆண்டொன்றுக்கு 100,000 நபர்களுக்கு 11.6 இறப்பு விகிதம் என்ற அளவில் சுமார் 0.5% முதல் 1.4% மக்கள் தற்கொலை மூலம் இறக்கிறார்கள் [8][10].1990 ஆம் ஆண்டில் 712,000 இறப்புகளில் இருந்த தற்கொலை அளவு, 2013 இல் 842,000 இறப்புக்களாக உயர்ந்துள்ளது [7]. 1960 களில் இருந்து 2012 வரையான காலத்தில் தற்கொலை விகிதம் 60% அதிகரித்துள்ளது [25], இந்த உயர்வுகள் முக்கியமாக வளரும் நாடுகளில் காணப்படுகின்றன [1]. 2008/2009 ஆண்டு அளவில் உலகளவில் இறப்புக்கு பத்தாவது முக்கிய காரணமாக தற்கொலை இருந்தது. ஒவ்வொரு தற்கொலை நிகழ்கின்ற நேரத்திலும் 10 முதல் 40 தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்கொலை விகிதங்கள் நாடுகளுக்கு இடையில் கணிசமாக வேறுபடுகின்றன. 2008 இல் நிகழ்ந்த தற்கொலைகளின் இறப்பு விகிதம் சதவீதம்: ஆப்பிரிக்கா 0.5%, தென் கிழக்கு ஆசியா 1.9%, அமெரிக்கா 1.2% மற்றும் ஐரோப்பா 1.4%.[8]. 1,00,000 நபர்கள் என்ற அளவீட்டில் இந்த இறப்பு விகித அளவுகள் ஆத்திரேலியாவில் 8.6, கனடா 11.1, சீனா 12.7, இந்தியா 23.2, ஐக்கிய ராச்சியம் 7.6, அமெரிக்கா 11.4 மற்றும் தென் கொரியா 28.9. என்று காணப்பட்டன[26][27]. இறப்பு நேர்வதற்கான முறைகளில் தற்கொலைக்கு 10 ஆவது இடம் வழங்கப்பட்டது.
↑Sakinofsky, I (June 2007). "The current evidence base for the clinical care of suicidal patients: strengths and weaknesses". Canadian Journal of Psychiatry52 (6 Suppl 1): 7S–20S. பப்மெட்:17824349.
↑Fact Sheet (March 2017). "Suicide". World Health Organization. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 26, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
↑ 10.010.110.2Chang, B; Gitlin, D; Patel, R (September 2011). "The depressed patient and suicidal patient in the emergency department: evidence-based management and treatment strategies". Emergency medicine practice13 (9): 1–23; quiz 23–4. பப்மெட்:22164363.
↑Issues in Law & Medicine, Volume 3. National Legal Center for the Medically Dependent & Disabled, Incorporated, and the Horatio R. Storer Foundation, Incorporated. 1987. p. 39.