தரவுத்தளம் (Database) என்பது கணினியில் சேகரித்து தொகுத்து ஒழுங்கமைப்பட்ட தரவுகள் ஆகும். தரவுத்தள மென்பொருட்களே தரவுகளை சேகரிக்க, தொகுக்க, தேட ஏதுவாகின்றன. எப்படி தரவுகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்று இந்த மென்பொருள் தரவு ஒழுங்கமைப்பு வடிவங்கள் விபரிக்கின்றன. இவற்றை இன்று பரவலாக பயன்படுவதும் ஒரு சீர்தரமாக இருப்பது தொடர்புசால் தரவுத்தளம் ஆகும்.
தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகள் என்பது, பயனர்கள், பிற மென்பொருட்கள் மற்றும் தரவுத்தளங்களுடன் தொடர்புகொண்டு தரவுகளை சேகரிக்கவும், பரிமாற்றிக்கொள்ளவும், ஆராயவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் மென்பொருளாகும். ஒரு பொதுப்பயனிற்கான தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு என்பது தரவுத்தளங்களை உருவாக்குதல், அழித்தல், வினவுதல், புதுப்பித்தல், நிர்வகித்தல் போன்று செயலிகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. பிரபலமான தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு (தமேஅ) மென்பொருட்கள் இவைகள் -- மையெசுக்யூயெல், போசிட்கிரீயெசுகியூயெல், மைக்ரோசாப்ட் எசுகியூயெல், ஆரக்கிள் தரவுத்தளம், சாப், பாக்சுப்ரோ, ஐபிஎம் டிபி2, லிப்ரேஆபீசு பேசு, மற்றும் பைல்மேக்கர் பிரோ. ஒரு மேலாண்மை அமைப்பிலிருக்கும் தரவுத்தளத்தை மற்றொரு மேலாண்மை அமைப்பிற்கு நேரடியாக மாற்ற முடியாது. ஆனால் பல்வேறு மேலாண்மை அமைப்புகளில் இருக்கும் தரவுத்தளங்களை அந்தந்த மேலாண்மை அமைப்புகளின் வாயிலாகவே ஒரு மென்பொருள் பயன்படுத்தமுடியும். அதற்கு ஓடிபிசி மற்றும் ஜேடிபிசி போன்ற செந்தர முகப்புகளை மென்பொருட்கள் பயன்படுத்தலாம்.
முன்னுரை
இணையத்தளங்கள், வணிகப் பிரயோகங்களுக்குப் பொதுவானவை
எடுத்துக்காட்டாக, இணையத்தளம் ஒன்றில் உள்நுழைய முனையும் போது பயனர் சொல் கடவுச் சொல் ஆகியவற்றைத் தரவுத்தளத்தில் இருந்து பெற்றுக்கொண்டு சரிபார்த்தே உள்நுழைய அனுமதிக்கும். மேலும் அநேகமாக உள்நுழைந்தவுடன் தரவுத்தையும் மேம்படுத்திக்கொள்ளும்.
தரவுத்தளம் என்பது ஒத்தக் கருத்து அல்லது ஒரே பொருள் அமைந்த கருத்துத் தரவுகளைத் தொகுத்து வெளியிடவுதும், மேல்நிலை ஆய்விற்கு ஆய்வுத் தொடர்பாக செய்திகளை சேகரிப்பதும் தரவுகள் எனப்படும். இதை தரவுத்தளம் எனலாம்.
தரவுத்தளங்கள் கணினிக் கோப்புமுறையாகும். இவை கட்டுக்கோப்பான முறையில் தரவுத்தளத்தைச் சேமிக்க உதவுகிறது.
கோப்பு சேமிக்கப்படும் முறையானது தரவுத்தளத்திற் சேமிக்கப்படும் தரவுகள் சரியாக இருக்க உதவுகின்றது.
தரவுத்தளம் தொழில்நுட்பத்தின் கலைச்சொற்களை இந்த பகுப்பில் காணலாம். தரவுத்தளம் என்பது தொகுக்கப்பட்ட தரவுகள் ஆகும். 'தரவுத்தளம்' என்ற சொல் தரவுகளையே குறிக்கும். நிறைய தரவுகளை சேகரித்து, தொகுத்து, பாதுகாத்து, பயன்படுத்துவதற்காகவே தரவுத்தளங்கள் உருவாக்கப்படுகிறது. தரவுத்தளங்களில் உள்ள தரவுகளை பயனர்கள் பயன்படுத்துவதற்கு உதவுவது தரவுத்தளம் மேலாண்மை மென்பொருட்களும், அதை சார்ந்த உதவி மென்பொருட்களுமாகம். தரவுத்தளம் மேலாண்மை மென்பொருள் என்பது தரவுகளுக்கும் பயனர்களுக்கும் இடையில் அமர்ந்து, பயனர்களுக்கு உதவியாக ஒரு எளிமையான முகப்பை கொடுக்கிறது.
தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு என்பது பயனர்களுக்கும் தரவுகளுக்கும் இடையில் இருக்கும் பல மென்பொருட்களை குறிக்கும். தரவுத்தளம் என்ற வார்த்தையும் தரவு என்ற வார்த்தையும் மிகவும் நெருங்கிய தொடர்புடையதால் தரவுத்தளம் என்று சொன்னால் அது மேலாண்மை அமைப்பு மென்பொருளையும் அதனால் ஒருங்கிணைக்கப்படும் தரவுகளையும் குறிக்கும்.
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அப்பால், சாதாரணமாக பேசும் போது தரவுத்தளம் என்ற சொல்லை எல்லாவகையான தரவுத்தொகுப்பிற்கும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த கட்டுரையானது தரவுத்தளம் மேலாண்மை அமைப்பைப் பற்றிய விடயங்களை மட்டுமே இங்கு அலசிப்பார்க்கும்.
தரவுத்தளம் மேலாண்மை அமைப்பின் வாயிலாக பயனர்கள் மேற்கொள்ளும் முக்கியமான வேலைகளை நான்கு முக்கிய வகைகளாக பிறிக்க முடியும். அவை கீழ் வருமாறு:
தரவின் வடிவம். புதிய தரவுகளின் வடிவத்தை உருவாக்குவது, இருக்கும் தரவுகளின் வடிவத்தை மாற்றியமைப்பது அல்லது அழித்தொழிப்பது.
புதுப்பித்தல். புதிய தரவுகளை தரவுத்தளங்களில் உட்புகுத்தல், ஏற்கனவே இருக்கும் தரவுகளை மாற்றுதல், தேவையில்லாத தரவுகளை அழித்தல், முக்கியமான தரவுகளை அழியாமல் காத்திருதல்.
தேடுதல் அல்லது தெரிந்தெடுத்தல். பயனர்களுக்கு தேவையான தரவுகளை தேர்ந்தெடுத்தல், தரவுத்தளங்களில் இருக்கும் தரவுகளைக் கொண்டு அறிக்கை உருவாக்குதல்.
நிர்வாகம். பயனர்களை பதிவு செய்தல், பயனர்களின் செயல்களை கங்காணித்தல், தரவுகளை பத்திரமாக பாதுகாத்தல், செயற்திறனை கங்காணித்தல், தரவுகளின் ஒழுங்கமைப்பு உறுதிசெய்தல், தரவுத்தளம் செயலிழந்தால் அதிலுருந்த தரவுகளுக்கு எந்த பாதிப்புமில்லாமல் மீட்டெடுத்தல்.
தரவுகளை பாதுகாப்பது மற்றும் ஒருங்கமைப்பிற்கு தரவுத்தளமேலாண் அமைப்புதான் பொறுப்பேற்கிறது. மேலும் அமைப்பு ஏதோவொரு காரணத்திற்காக செயலிழந்து போனால், அதை மீட்டமைக்கும் போது தரவுகளை பிழையில்லாமல் மீட்டெடுக்கும் செயலும் இந்த அமைப்பின் கடமையாகும்.
இயல்பாக தரவுத்தளமேலாண் அமைப்புகளும், அதில் இருக்கும் தரவுத்தளங்களும் ஏதாவது ஒரு தரவுப்படிமத்தினை பின்பற்றியிருக்கும். [1] 'தரவுத்தள அமைப்பு' என்பது தரவுத்தளம், தரவுத்தளமேலாண் அமைப்பு, தரவுத்தளபடிமம் என்று அணைத்தையும் குறிக்கும் ஒரு சொற்றொடர். [2]
தரவுத்தள வழங்கி என்பது ஒரு தனிப்பயன் கணினி. இந்த கணினியில் தரவுத்தளமேலாண் அமைப்பும் அதைச்சார்ந்த மென்பொருட்களும் மட்டுமே இயக்கப்படும். தரவுத்தள வழங்கிகள் பல செயற்படுத்திகளைக் கொண்டது. இவ்வழங்கிகளில் நிறைய கொள்ளளவு கொண்ட நினைவகங்கள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இத்தகைய வழங்கிகளில் "ரெய்ட்" எனப்படும் சக்திவாய்ந்த அடுக்குத் தட்டுகளும் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வடுக்குத் தட்டுகள் தரவுத்தளங்களை பத்திரமாக சேமித்து பாதுகாக்க மிகவும் முக்கியமானது. இந்த அடுக்குத் தட்டுகளில் ஒன்று செயலிழந்தாலும் மற்ற தட்டுகள் சரியாக வேலை செய்யும். எந்த தரவும் பல தட்டுகளில் சேமிக்கப்படும் என்பதால் ஒரு தட்டு செயலிழந்தாலும் தரவுகளுக்கு எவ்விதபாதிப்புமில்லை.
பயன்பாடு
இக்காலத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது அன்றாட வர்த்தகத்திற்கு தரவுத்தளங்களை மிகவும் நம்பியுள்ளனர். ஒரு நிறுவனம் தனது சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு திறம்பட கொடுப்பதற்கு உறுதுணையாக இருப்பது இந்த தரவுத்தளங்களும் அதனுடன் இருக்கும் மென்பொருட்களுமாகும். தரவுத்தளங்களில் பலவிதமான தகவல்கள் சேகரித்து வைக்கப்படுகிறது. தரவுத்தளங்களில் நிர்வாகத்திற்கு தேவையான தகவல்களை மட்டும் வைப்பதில்லை, அதில் ஒரு சேவைக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வைத்துக்கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு பொறியியல் தரவுகள் மற்றும் பொருளியல் படிவங்கள் கூட தரவுத்தளங்களில் வைத்துக்கொள்ளமுடியும். நூலகம் மேலாண்மை அமைப்புகள், வானூர்த்தி முன்பதிவு அமைப்புகள், உதிரிப்பாகங்களின் கொள்ளளவு கங்காணிப்பு அமைப்புகள் ஆகியவை தரவுத்தளங்களின் உதவியுடன் உருவாக்கப்படும் குறிப்பிடத்தக்க சேவைகளின் உதாரணங்கள் ஆகும்.
வழங்கன்-பயனர் அல்லது பரிவர்த்தனைசார் தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகள் பல்லாயிரம் பயனர்ளுக்கு ஒரே நேரத்தில் தேடுதல் மற்றும் புதுப்பித்தல் சேவைகளை அளிக்க வேண்டியுள்ளதால் இத்தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதாகும். தனிநபர் அல்லது மேசை கணினியில் இயங்கக்கூடிய தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகள் எளிமையாக இருக்கும். பைல்மேக்கர் மற்றும் மைக்ரோசாப்ட் ஆக்சசு ஆகியவை இந்த எளிமையான தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகளுக்கு உதாரணமாக கூறலாம்.
தனித்தன்மை மற்றும் பொதுத்தன்மை
ஒரு தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு என்பது மிகவும் சிக்கலான, கடினமான தொழில்நுட்பத்தை கொண்டதாக வளர்ந்துள்ளது. இதை உருவாக்குவதற்கு பல மனிதர்கள் பல ஆண்டுகளாக உழைக்கவேண்டும். [3] இதனால் ஒரு தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு என்பதை எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறது என்பது முக்கியமாகிறது. பொதுவான நோக்கத்திற்கு தயாரிக்கப்படும் தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு பலவிதமான பயனர்களுக்கு பயன்படவேண்டும் என்பதால் அதன் விடிவத்தில் சிக்கல் அதிகமாகிறது. இருப்பினும் பல்வேறு பயனர்கள் இந்த அமைப்பை பயன்படுத்துவார்கள் என்பதால் அதன் தயாரிப்பு செலவை பலரும் பகிர்ந்துகொள்வார்கள். இதனால் பொதுவான நோக்கத்துடன் உருவாக்கப்படும் தரவுத்தளமேலாண்மை அமைப்புகள்தான் மிகவும் சிக்கனமானதாகும். ஆனால் பொதுவான நோக்கத்துடன் தயாரிக்கப்படும் தரவுத்தளமேலாண்மை அமைப்புகள் எல்லா தேவைகளுக்கும் உகந்ததல்ல. சில தேவைகளுக்கு தனித்தன்மை கொண்ட தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகள் தேவைப்படுகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் அமைப்புகளை நாம் குறிப்பிடலாம். மின்னஞ்சல் அமைப்புகள் என்பது மின்னஞ்சல்களை மட்டுமே கையாளக்கூடிய திறமையைக் கொண்டது. இதற்கு தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகளின் எல்லா பண்புகளும் தேவையில்லை.
பல சமயங்களில் கடைநிலை பயனர்கள், அதாவது மனிதர்கள், தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகளை நேரடியாக தொடர்புகொண்டு பயன்படுத்துவது கிடையாது. அதற்கு மாறாக அவர்களின் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட சேவையை தரும் பிரயோக மென்பொருட்களையே பயன்படுத்துகிறார்கள். இந்த பிரயோக மென்பொருட்கள் கடைநிலை பயனர்களின் சார்பாக தரவுத்தளம் மேலாண்மை அமைப்பிடம் தொடர்பு ஏற்படுத்தி தரவுகளை பரிமாற்றிக்கொள்ளும். பிரயோக மென்பொருட்களை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் பொறியாளர்கள் தரவுத்தளம் மேலாண்மை அமைப்புடன் உறவாட அவர்கள் கொடுக்கும் சீர்தரம் கொண்ட பிரயோக மென்பொருள் இடைமுகப்புகளை பயன்படுத்தலாம். தரவுத்தளங்களை வடிவமைப்பவர்களும், நிர்வகிப்பவர்களும் சிறப்பு மேலாண்மை முகப்புகளின் மூலம் தரவுத்தளங்களை உருவாக்குதல், பராமரித்தல் போன்றவற்றை செய்வார்கள். எனவே இவர்களுக்கு கடைநிலை பயனர்களைவிட அதிக ஆற்றல் தேவைப்படும். இவர்கள் தரவுத்தளம் மேலாண்மை அமைப்புகளை எப்படி செயல்படுத்துவது, அதன் பல்வேறு முகப்புகள் என்ன, அதை எப்படி சிறப்பாக வேலை வாங்குவது, அதன் பண்புகளை எப்படி மேம்படுத்துவது, எந்தெந்த பண்புகளை தேவைக்கு ஏற்ப மாற்றுவது, போன்ற பல விடயங்களை கற்றறிந்திருக்கவேண்டும்.
வரலாறு
கடந்த காலங்களில் பல தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளது. செயற்படுத்திகள், கணினி நினைவகங்கள், கணினி வன்தட்டுகள், மற்றும் கணினி வலைகள் ஆகியவையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினால் தரவுத்தளங்கள் பன்மடங்கு பல பண்புகளில் வளர்ச்சியடைந்துள்ளது. தரவுத்தளங்களின் அளவு, செயல்திறன், வேகம் ஆகிய பண்புகளை இவ்வளர்ச்சிக்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
தொடர்புசால் தரவுப்படிமம் என்கின்ற தரவு ஒழுங்கமைப்பு முறையை 1970 இல் முதன்முதலில் முன்மொழிந்தவர் எட்கார் எப். கோட் ஆவார். இவர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த வலம்வரல் தரவு ஒழுங்கமைப்பு முறைக்கு மாற்றாக இந்த சிந்தனையை முன்வைத்தார். வலம்வரல் என்கிற தரவு ஒழுங்கமைப்பு முறையில் ஒரு தகவலைத்தேடும் போது ஒவ்வொரு இணைப்பாக வலம் வந்த நமக்கு தேவையான தகவலை பெற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் இப்படி செய்வதால் தரவுத்தளத்தின் முழுமையான ஆற்றலை பயன்படுத்தமுடியாமல் போகிறது. இதற்கு மாற்றாக, அல்லது இதை மேம்படுத்த தொடர்புசால் தரவு ஒழுங்கமைப்பு முறையை முன்வைத்தார். இம்முறையில் ஒரு தகவலைத் தேடும் போது நாம் சேகரித்து வைத்துள்ள தரவுகளை நேரடியாக தேடி பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புசால் தரவுப்படிமத்தில் ஒவ்வொரு உருப்படிக்கும் பேரேட்டில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு அட்டவணை இருக்கும். ஒரு தரவுத்தளத்தில் இப்படியான பல அட்டவணைகள் இருக்கும். அவ்வட்டவணைகள் அணைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட தரவுப்படிமத்தை பயன்படுத்த கணினிகளின் கணிப்புச் சக்தி அதிகமாக தேவைப்படும். இவ்வாறான சக்தி வாய்ந்த கணினிகள் 1980 களின் நடுவில்தான் உருவாக்கப்பட்டது. அதனால் ஆரம்பத்தில் தொடர்புசால் தரவுப்படிமம் குறைவாகத்தான் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் தொடர்புசால் தரவுப்படிமம் பிரபலமாகியது. 1990 களில் இருந்து இன்றளவும் (2013) பேரளவில் தரவுகளைப் பதப்படுத்தும் அணைத்து பிரயோகத்திலும் தொடர்புசால் தரவுப்படிமம்தான் முன்னிலையில் இருக்கிறது. தொடர்புசால் தரவுப்படிமத்தின் முறையில் தரவுகளை ஒழுங்கமைத்து அதை பயன்படுத்துவதற்கான தரவுத்தள மொழிகளில் முக்கியமானது கட்டமைப்புள்ள வினவு மொழி அல்லது எசுக்யூயெல் ஆகும்.
பொருள் நோக்கு நிரலாக்கம் மொழிகளால் உருவாக்கப்படும் மென்பொருட்கள், தொடர்புசால் தரவுத்தளங்களுடன் ஊடாடும் போது சில சிக்கல்கள் உருவாகின்றன. இதை பொருள் தொடர்புசால் சிக்கல் என்று குறிப்பிடலாம். இதை சரிசெய்வதற்காக உருவானதே பொருள் சார்ந்த தரவுத்தளங்களாகும். தொடர்புசால் தரவுத்தளங்களுக்கு பொருட்சால் தரவுத்தளத்தின் பண்புகளை கொடுத்து ஒரு கலவையாக உருவானது பொருளும் தொடர்பும் சார்ந்த தரவுத்தளங்கள். இந்த பொருள் சார்ந்த தொழில்நுட்பத்தை குறிப்பிடவே "தொடர்புசால்-பிறகு" என்ற சொல்லாடல் உருவாக்கப்பட்டது.
சமீபமாக வேறு வகையான தரவுத்தளங்களும் புளக்கத்திற்கு வந்துள்ளது. இவை சாவி-பெறுமானம் தரவுத்தளம் மற்றும் கோப்பு நோக்கு தரவுத்தளம் ஆகும். இந்த வகையான தரவுத்தளங்கள் 'நோயெசுக்யூயெல்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு போட்டியாக புதிய தொடர்புசால் தரவுத்தளங்கள் 'நியூயெசுக்யூயெல்'
[5]
என்கின்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.
1960 களில் வலம்வரல் தரவுத்தள மேலாண்மை அமைப்பு
1960 களில் கணினிகளின் வேகமும் ஆற்றலும் பேரளவிற்கு அதிகம் ஆனதால், பல தரவுத்தளங்கள் உருவாக்கப்பட்டது. 1960 களின் நடுவில் இவ்வாறு பல தரவுத்தளங்கள் சந்தையில் இருந்தது. இவைகளை சீர்படுத்தி ஒரு தரத்தினை உருவாக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டது. அப்போது இந்த முயற்சியில் சார்லெசு பாக்மேன் என்பவர் ஈடுபட்டார். சார்லெசு பாக்மென் என்பவர் இன்டெக்ரேடட் டேடா சுடோர் என்கின்ற ஒரு தரவுத்தளத்தை உருவாக்கியவர். இம்முயற்சியானது கோடாசில் என்கிற குழுமத்தின் மூலமாக செய்யப்பட்டது. சார்லெசு பாக்மென் அவர்கள் கோடாசில் குழுவிற்குள் ஒரு தரவுத்தளம் சீரமைப்புக் குழுவை உருவாக்கினார். இக்குழுவானது 1971 இல் தனது தரவுத்தள சீர்தரத்தினை பரிந்துறை செய்தது. இத்தரத்தினை 'கோடாசிலின் வழி' என்று அக்காலத்தில் பரவலாக அறியப்பட்டது. இவ்வழியைப் பின்பற்றி பல தரவுத்தளங்கள் உருவாக்கப்பட்டது.
கோடாசில் முறையில் தரவுகள் ஒரு பெரிய வலையைப்போல பிண்ணி பிணைந்து இருக்கும். நமக்கு தேவையான ஏடுகளை ஒவ்வொரு இணைப்பாக வலம் வந்து தேர்வு செய்யவேண்டும். கோடாசில் தரவுத்தள மேலாண்மை அமைப்புகளுக்கும் எளிமையான வினவு மொழிகள் இருந்தது. இருப்பினும் இந்த கோடாசில் முறை பயன்படுத்துவதற்கு கடினமாக இருந்து. அதைப் பயன்படுத்தி ஒரு சேவையை உருவாக்குதவதற்கு நிறைய வேலை தேவைப்பட்டது. அதனால் இம்முறை அதிகம் வெற்றி பெறவில்லை.
ஐபியெம் நிறுவனம் 1968 இல் ஒரு தரவுத்தளம் மேலாண்மை அமைப்பை உருவாக்கியிருந்தனர். அதன் பெயர் ஐயெம்யெசு ஆகும். ஐயெம்யெசு என்பது அப்போலோ என்கின்ற திட்டத்திற்காக அமைப்பு/360 என்ற இயங்குதளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும். ஐயெம்யெசு என்பது பலவகைகளில் கோடாசில் அமைப்பை போலவே இருந்தது. முக்கிய வேறுபாடு என்னவென்றால் ஐயெம்யெசில் தரவுகளை வலைப்பிண்ணல் போல ஒழுங்கமைக்காமல் படிவரியாக ஒழுங்கமைக்கப்பட்டதுதான். எனவேதான் இந்த ஐயெம்யெசை படிவரி தரவுத்தளங்களுக்கு உதாரணமாக கூறப்படுகிறது. இதிலும் ஒரு தரவைத் தேடி தேர்ந்தெடுப்பதற்கு ஒவ்வொரு படியாக வலம் வர வேண்டும். இந்த படிவரி தரவுத்தளம் ஒருவகையான வலம்வரல் தரவுத்தளமாகும்.
1970 களில் தொடர்புசால் தரவுத்தள மேலாண்மை அமைப்பு
எட்கார் கோட் என்பவர் கலிபோர்னியாவில் உள்ள சானோசே என்ற நகரத்தில் ஐபியெம் நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தார். இந்த பணிமனை வன்தட்டுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. இவருக்கு கோடாசில் முறையான வலம்வரல் தரவுப்படிமத்தில் திருப்தியில்லாமல் இருந்தார். அதற்கு முக்கிய காரணம் எளிமையான தேடுதல் வசதியில்லாமையே. இதனால் உந்தப்பட்டு 1970 ஆம் ஆண்டில் இவர், புதிய தரவுத்தள ஒழுங்கமைப்பு முறையை விவரித்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். இந்த முயற்சியின் அடிப்படையில் அவர் எழுதிய முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரை "பெரிய பகிரப்பட்ட தரவு வங்கிகளுக்கு தொடர்புசால் தரவு ஒழுங்கமைப்பு முறை" [6] என்பதேயாகும்.
இந்த ஆராய்ச்சி கட்டுரையில் அவர் ஒரு புதிய தரவு ஒழுங்கமைப்பு முறையை விவரிக்கின்றார். இந்த புதிய முறையில் தரவுகள் அட்டவணை போன்ற விடிவமைப்பில் சேமிக்கப்படும். கோடாசில் முறையில் ஒவ்வொரு ஏடும் தனித்தனியே சேமிக்கப்பட்டு ஒரு ஏடிலிருந்து மற்றொரு ஏட்டிற்கு இணைப்பு இருக்கும். இது ஒரு இணைப்பு பட்டியலைப் போல இருக்கும். எட்கார் கோடின் புதிய முறையில் ஒரு அட்டவணைப்போன்ற விடிவத்தில் ஏடுகள் ஒவ்வொன்றும் அந்த அட்டவணையில் ஒரு வரியாக இருக்கும். ஒரு அட்டவணையில் குறிப்பிட்ட சில தகவல்களையே சேமிக்கவேண்டும். வெவ்வேறு வகையான தகவல்களை வெவ்வேறு அட்டவணைகளில் சேமிக்கவேண்டும். இந்த அட்டவணைகளில் தரவுகளை புகுத்துவது, அழிப்பது, புதுப்பிப்பது என்று அணைத்து விதமாக செயல்களையும் செய்யலாம். இதற்கு தேவையான அணைத்து வசதிகளையும் தரவுத்தள மேலாண்மை அமைப்பு கொடுக்கவேண்டும். மேலும் பயனர்களுக்கு தகவல்களை அட்டவணை வடிவத்தில் கொடுக்கவேண்டும்.
தொடர்புசால் தரவு ஒழுங்கமைப்பு முறையில் சேமிக்கப்படும் தரவுகளை தேவைக்கு ஏற்ப படிப்படியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி மாற்றுவது கோடாசில் முறையைக் காட்டிலும் எளிமையாக இருக்கும். தொடர்புசால் தரவுப்படிமத்தில் தரவுஏடுகள் ஒன்றுக்கொன்று பலவிதமான தொடர்புகளை வைத்துக்கொள்ளலாம். ஒன்றிலிருந்து பல, ஒன்றிலிருந்து ஒன்று, பலவற்றிலிருந்து பல ஆகியவை தொடர்பு வகைகளாகும். தொடர்புசால் தரவுப்படிமம் இவ்வணைத்து தொடர்பு வகைகளையும் ஆதரிப்பதாக உள்ளது. இம்மாதிரியான தொடர்புகள் வெவ்வேறு அட்டவணைகளில் இருக்கும் தரவுகளுக்கு இடையே இருக்கும். ஒரே அட்டவணையில் இருக்கும் தரவுகளும் தங்களுக்குள் ஏதாவது ஒரு வகையான தொடர்பை வைத்திருக்கலாம் (உதாரணத்திற்கு பெரியது, சிறியது). எனவே தொடர்புசால் தரவுப்படிமம் என்பது வலம்வரல் தரவுப்படிமத்தை விட மிகவும் சக்திவாய்ந்தது. வலம்வரல் தரவுப்படிமங்களான படிவரி மற்றும் வலை மூலம் நாம் செய்யக்கூடிய அணைத்து வேலைகளையும் தொடர்புசால் தரவுப் படிமத்தின் மூலம் ஏளிமையாக செய்து கொள்ளலாம். மற்ற படிமங்களில் செய்ய முடியாததை தொடர்புசால் படிமத்தின் மூலம் செய்யலாம்.
பயனர்களின் பெயர், அவர்களின் கைபேசி எண், மின்னஞ்சல், முகவரி, போன்றவை பல சேவைகளுக்கு நாம் முக்கியமாக தரவுத்தளங்களில் சேமிக்கும் தகவல்கள் ஆகும். கோடாசில் தரவு ஒழுங்கமைப்பு முறையில் ஒரு பயனரின் அணைத்து தகவல்களையும் ஒரே தரவு ஏட்டில் சேமிக்கப்படும். இதனால் ஒரு குறிப்பிட்ட தகவலைத்தேடுவது கடினமாகிறது. மேலும் குறிப்பிட்ட தகவல் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதற்கு தேவையான இடத்தை வன்தட்டில் பயன்படுத்தப்படும். தொடர்புசால் தரவுப்படிமத்தில் இந்த இரண்டு பிரச்சினைக்கும் தீர்வுண்டு. தொடர்புசால் தரவு ஒழுங்குமுறையில், உதாரணத்திற்கு, பெயர்கள் ஒரு அட்டவணையில் சேமிக்கப்படும், கைபேசி எண்கள் இன்னொறு அட்டவணையில் சேமிக்கப்படும், மின்னஞ்சல்கள் இன்னொறு அட்டவணையில் சேமிக்கப்படும். ஒரு பயனாளரின் கைபேசி எண் இருந்தால் மட்டுமே அதற்குறிய அட்டவணையில் இடம் பயன்படுத்தப்படும். இல்லையேல் அந்த தகவலுக்கு எந்த இடமும் பயன்படுத்தப்படாது. மேலும் பெயர்களைத்தேடும் போது கைபேசி அட்டவணையையும் மின்னஞ்சல் அட்டவணையையும் நாம் தேடவேண்டியதுகிடையாது. இதனால் குறைந்த தரவுகளையே (பைட்டுகளில்) நாம் கையாளத்தேவைப்படுகிறது.
வெவ்வேறு அட்டவணைகளில் இருக்கும் தரவுகளை தொடர்பு படுத்துவதே இந்த முறையின் சிறப்பம்சமாகும். பெயர், கைபேசி எண், மற்றும் மின்னஞ்சல் ஆகிய தகவல்கள் வெவ்வேறு அட்டவணையில் உள்ளது. அதை தொடர்பு படுத்துவதற்காக ஒரு 'சாவி' பயன்படுகிறது. இந்த சாவியானது பல்வேறு அட்டவணைகளில் இருக்கும் தரவு ஏடுகளை தொடர்புபடுத்த உதவும். இந்த சாவி தரவுகளில் இயக்கையாக ஏதாவது ஒரு தகவலின் அடிப்படையில் அமையலாம். இல்லையேல் தரவுத்தள வடிவமைப்பாளர்கள் சேவைக்கு ஏற்ப ஒரு செய்கையான சாவியை உருவாக்குவார்கள். இந்த சாவி என்பது ஒரு தரவு ஏட்டை தனித்தவத்துடன் குறிப்பிடத்தக்கது.
கோடாசில் முறையில் ஒரு வினவிற்கு பல தரவு ஏடுகள் விடையாக கிடைக்கும். இதற்காக தரவுகளை வினவும் மென்பொருட்கள் கண்ணி மூலமாக அணைத்து தரவு ஏடுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும். ஒரே ஒரு தரவு தேவை என்றாலும் இந்த கண்ணி மூலமாகவே தரவுகளைத்தேடி பெற்றுக்கொள்ளவேண்டும். கண்ணி தவிர்க்கமுடியாததாக இருந்தது. தொடர்புசால் முறையிலும் இதே கண்ணிகள் தேவைப்படுகிறது. ஆனால் இப்படி செய்வது சற்று சிரமமாக இருக்கும். இதை தவிர்க்க கோட் ஒரு கணம் சார்ந்த மொழியை சிபாரிசு செய்தார். இந்த மொழியே நாளைடைவில் எசுக்கியூயெல் ஆக பிரபலமடைந்தது. இந்த மொழியின் ஊடாக தரவுத்தளங்களை பராமரிக்க தேவையான அணைத்து செயல்களையும் செய்ய முடியும் என்பதை வரிசை நுண்கணிதம் கோட்பாட்டின் உதவியுடன் நிரூபித்தார்.
தரவுத்தள இயந்திரங்கள்
1970 மற்றும் 1980 களில் மென்பொருளையும் வன்பொருளையும் ஒன்றிணைத்து தரவுத்தள இயந்திரங்களை அல்லது கருவிகளை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்த முயற்சிகளுக்கு காரணம் என்னவென்றால் இப்படி ஒன்றிணைப்பதால் தரவுத்தளத்தின் இயங்கு சக்தி குறைந்த விலையில் அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையே. இதற்கு உதாரணமாக ஐபியெம்மின் அமைப்பு/38, டெர்ராடேடாவின் ஆரம்ப முயற்சிகள், மற்றும் பிரிட்டான் லீயின் தரவுத்தள இயந்திரம்.
தரவுத்தளத்தின் சக்தியை அதிகரிக்க இந்த காலத்தில் வன்பொருளின் உதவியை நாடினார்கள். இந்த வகையான இன்னொரு முயற்சியே வன்தட்டிலேயே தரவுகளைத்தேடுவதற்காக பண்புகளை புகுத்துவது. இதற்கு உதாரணம் ஐசியெல்லின்சி. ஏ. எஃப். எசு வேகப்படுத்தியாகும். ஆனால் காலப்போக்கில் இம்முயற்சிகள் தோல்வியடைந்தது. இதற்கு காரணம் இரண்டாக கூறலாம். ஒன்று இப்படி தனித்துவமான, ஒரு குறிப்பிட்ட பிரயோகத்திற்காக தயாரிக்கப்படும் கணினிகள் விலை அதிகமாகவே இருந்தது. இரண்டு, இத்தனித்துவமாக கணினிகன் சக்திகள் பொதுவாக கிடைக்கும் கணினிகளைவிட சக்திவாய்ந்ததாக இருக்கவில்லை. எனவே இப்பொழுதெல்லாம் தரவுத்தளங்கள் பொதுவாக கிடைக்கும் கணினியில்தான் இயங்குகிறது. மேலும் பொதுப்பயனுக்காக தயாரிக்கப்படும் வன்தட்டுகளே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு இருப்பினும் இன்றும் தரவுத்தள இயந்திரங்கள் சில சந்தையில் இருக்கின்றன. இதற்கு உதாரணமாக ஓரகில்லின்எக்சாடேடா மற்றும் நெட்டிசா நிறுவனத்தின் தயாரிப்புகளையும் குறிப்பிடலாம்.
1970 களின் முடிவில் எசுக்கியூயெல் தரவுத்தள மேலாண்மை அமைப்புகள்
கோட்டின் கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு ஐபியெம் நிறுவனம் அமைப்பு ர என்கின்ற ஒரு முன்வடிவத்தை 1970 களின் ஆரம்பத்தில் உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டது. இந்த முன்வடிவம் 1975 இல் தயாராகிவிட்டது. இதற்கு பிறகு ஒரு தரவு ஏட்டினை பல அட்டவணைகளில் பிரித்து சேமிப்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்தன. இப்படி செய்வதால், நாம் ஏற்கனவே கண்டது போல, வன்தட்டில் இடம் சேமிக்கப்படும். தேவையிருந்தால் மட்டுமே ஒரு தரவுவரிசை தரவுத்தளத்தில் இருக்கும். இந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது. 1970 களின் முடிவில் பலப் பயனர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய அமைப்புகளை உருவாக்கினார்கள். இந்த காலத்தில் தான் எசுக்கியூயெல் வினவு மொழியானது சீர்தரம் பெற்றது. கோட்டின் யோசனைகள் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்லாமல் இவை கோடாசில் முறையை விட சக்திவாய்ந்த்து என்றும் அறியப்பட்டது. இதை உணர்ந்த ஐபியெம் அடுத்த தலைமுறை தரவுத்தளம் மேலாண்மை அமைப்பான டிபி2 வை உருவாக்க முயற்சிகளை ஆரம்பித்தது.
லாரி எலிசனின் நிறுவனமான ஓரகில் தனியாக தரவுத்தளங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இவர்களின் ஆராய்ச்சிகள் ஐபியெம்மின் அமைப்பு ர பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் அடிப்படையில் நடந்தது. ஆனால் இவர்கள் ஐபியெம் நிறுவனம் டிபி2 வை சந்தைக்கு கொண்டுவருவதற்கு முன்பே தங்களின் படைப்பான ஓரகில் தரவுத்தளத்தை 1978இல் அறிமுகப்படுத்தினர்.
சுடோன்பிரேக்கர் என்பவர் இன்கிரசில் வேலை செய்த அனுபவத்தை பயன்படுத்தி போசிட்கிரசு என்ற ஒரு புதிய தரவுத்தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இத்தரவுத்தளம் இன்றைக்கு போசிட்கிரீயெசுக்கியூயெல் என்றழைக்கப்படுகிறது. உலகளவில் மிக முக்கியமான இலக்குகளைக்கொண்ட அமைப்புகளில் போசிட்கிரீயெசுக்கியூயெல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு உதாரணமாக இணைய முகவரிகளைப் பராமரிக்கும் பதிவு அமைப்பினைக் குறிப்பிடலாம். மேலும் இந்த தரவுத்தளத்தினைப் பல பெரிய நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் பயன் படுத்துகின்றன.
சுவீடன் நாட்டிலுள்ள உப்பாலா பல்கலைக்கழகத்தில், கோட்டின் ஆராய்ச்சிக்கட்டுரையின் அடிப்படையில் மைமர் எசுக்கியூயெல் என்னும் தரவுத்தள மேலாண்மை அமைப்பு 1970 களின் நடுவில் தயாரிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு இந்த முயற்சியானது ஒரு தனி நிறுவனமாக முன்னெடுக்கப்பட்டது. மைமர் தரவுத்தளத்தில் தரவுகளின் உறுதிக்காக பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த யோசனை மிகவும் வரவேற்கப்பட்டு, பல தரவுத்தள மேலாண்மை அமைப்புகளில் இது செயற்படுத்தப்பட்டது.
1976 இல் உருப்படி-தொடர்புசால் தரவுப்படிமம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிறிது காலத்திற்கு பிரபலமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் இதன் பண்புகளை தொடர்புசால் தரவுப்படிமத்தில் சேர்க்கப்பட்டன. இதனால் இவ்விரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.
1980 களில் மேசைக் கணினி தரவுத்தளங்கள்
1980 களில் மேசைக் கணினி மிகவும் பிரபலமடைந்தது. இதை மேசைக் கணினியின் காலம் என்றே குறிப்பிடலாம். இந்த புதிய கணினிகள் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுவது இரண்டு வகையான மென்பொருட்கள். ஒன்று விரிவுத்தாள் மென்பொருளான லோடசு 1, 2, 3 ஆகும். இன்னொன்று தரவுத்தளம் மென்பொருளான டிபேசு. டிபேசு மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருந்தது. இதனை உருவாக்கியவர் சி. வேய்னே இராட்கிலிப் ஆவார். அவர் இதைப்பற்றி கூறியதாவது: "டிபேசு மற்ற கணினி மொழிகளைக் காட்டிலும் வித்தியாசமானது. இது பேசிக், சி, போர்ட்ரான் மற்றும் கோபால் ஆகிய மொழிகளுடன் ஒப்பிடும் போது இதை நம்மால் உணரமுடியும். டிபேசில் பயனர்களுக்கு தேவையான பல செயல்களை ஏற்கனவே செய்து முடித்தாயிற்று. தரவுகளைக் கையாள்வதற்கு தேவையான பல செயல்களை டிபேசே பார்த்துக்கொள்கிறது. பயனர்கள் தரவுகளைக் கையாள்வதற்காக கோப்புகளை திறப்பது, மூடுவது, படிப்பது, அதிலிருக்கும் இடத்தினை மேலாண்மை செய்வது ஆகிய எந்த ஒரு விசயத்திலும் கவணம் செலுத்தத்தேவையில்லை. இதை அணைத்தையும் டிபேசு பார்த்துக்கொள்ளும்." [7] 1980 மற்றும் 1990 இன் ஆரம்பத்திலும், மிகவும் அதிகமாக விற்பனையான மென்பொருள் டிபேசு ஆகும்.
1980 களில் பொருள் தரவுத்தளங்கள்
1980 களில் பொருள் சார்ந்த நிரலாக்கம் பிரபலமடைந்தது. இதனால் தரவுத்தளங்களில் சேமித்திருக்கும் தரவுகளைக் கையாளும் முறையும் சற்று மாறியது. மென்பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களும் தரவுத்தளங்களில் உள்ள தரவுகளை ஒரு பொருளாக அணுக முற்றபட்டனர். உதாரணமாக ஒரு நபரை பொருளாகவும், அவரைப்பற்றிய தகவல்களின் அந்த பொருளின் பண்புகளாகவும் பார்க்கப்படுகிறது. தரவுகளை வெறும் அட்டவணையாகவும் அதிலுள்ள வரிசையாகவும் பாவிக்காமல், ஒவ்வொரு வரிசையையும் ஒரு பொருளாகவும், அதிலுள்ள ஒவ்வொரு தகவல்களும் அதன் பண்புகளாகவும் பாவிக்கப்படுகிறது. இதனால் தரவுகள் அட்டவணைக்கும் அதிலுள்ள நெடுவரிசைக்கும் சொந்தமானது என்று பார்க்காமல், அவை அணைத்தும் அதனதன் பொருளிற்கு சொந்தமா பார்க்கப்படுகிறது.
எனவே தரவுகள் இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. ஒரு அட்டவணையாகவும், வரிசையாகவும், மற்றும் நெடுவரியையாகவும் பார்க்கப்படுகிறது. இன்னொன்று பொருளாகவும் அதன் பண்புகளாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல் பொருள் - தொடர்பு பொருத்தமின்மை என்று அழைக்கப்படுகிறது. பொருள் தரவுத்தளங்கள் மற்றும் பொருள்-தொடர்புசால் தரவுத்தளங்கள் ஆகியவை இந்த சிக்கலை தீர்க்க அதன் வினவு மொழிகளை மாற்றி அமைத்தனர். இந்த சிக்கலைத் தீர்பதற்கு இன்னொரு முயற்சியே பொருள்-தொடர்பு மேப்பிங் ஆகும்.
2000 களில் நோயெசுக்கியூயெல் மற்றும் புதிய எசுக்கியூயெல் தரவுத்தளங்கள்
தொடர்புசால் தரவுத்தளங்களுக்கு பிறகு வந்த வேறு வகையான தரவுத்தளங்கள் நோயெசுக்கியூயெல் என்று அறியப்படுகிறது. இதற்கு உதாரணமாக சாவி-மதிப்பு கிடங்குகள் மற்றும் கோப்பு திசையுற்ற தரவுத்தளங்கள். எக்செம்மல் தரவுத்தளங்கள் என்பது ஒரு வகையான கோப்பு திசையுற்ற தரவுத்தளமாகும். இத்தரவுத்தளத்தில் எக்செம்மல் கோப்பின் பண்புகளைக்கொண்டு தரவுகளை வினவலாம்.
நோயெசுக்கியூயெல் தரவுத்தளங்கள் வேகமாக செயல்படக்கூடிய சக்தியைக் கொண்டது. இத்தரவுத்தளங்களுக்கு மாறாத அட்டவணை வடிவங்கள் தேவைப்படுவதில்லை.
தரவுத்தள ஆராய்ச்சி
தரவுத்தள தொழில்நுட்பத் துறையில் 1960களில் இருந்து தொடரந்து ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளது. பல்கலைக்கழகங்களும், நிறுவனங்களும் இத்தொழில்நுட்பத்தில் நிறைய ஆய்வுகளை செய்கின்றனர். இதற்கு உதாரணமாக ஐபியெம் ஆய்வினை குறிப்பிடலாம். இவ்வாய்வுகள் தரவுத்தளத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றினவாகும். குறிப்பாக தரவுத்தள கோட்பாடு மற்றும் தரவுத்தள முன்வடிவங்களில் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. படிமங்கள், அணுநிலை பரிவர்த்தனைகள், உடன்நிகழ் கட்டுப்பாடு வழிமுறைகள், வினவு மொழிகள், வினவை மேம்படுத்துதல், வன்தட்டுகளை மேம்படுத்துதல், மற்றும் பல தலைப்புகளில் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது.
தரவுத்தள தொழில்நுட்பத்தில் செய்யப்படும் ஆய்வுகளை கட்டுரைகளாக வெளியிடுவதற்கு தனியே பல இதழ்கள் உள்ளன. குறிப்பாக ஏசியெம் தரவுத்தள அமைப்புகளின் பரிவர்த்தனைகள் (ஏசியெம் டிரான்சாக்சன்சு ஆன் டேடாபேசு சிசுடெம்சு) மற்றும் தரவு அறிவுப் பொறியியல் (தேட்டா அண்டு நாலெச்சு எஞ்சினியரிங்கு). மேலும் வருடந்தோரும் நடக்கும் மாநாடுகளும் இவ்வாய்வுகளுக்கு பெரிய உதவியாக இருக்கிறது. மாநாடுகளுக்கு உதாரணமாக ஏசியெம் சிக்மோட், ஏசியெம் போட்சு, வியெல்டிபி, ஐஇஇஇ ஐசிடிஇ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
தரவுத்தள வகைகள்
தரவுத்தளங்களை பலவிதமாக வகைப் படுத்தலாம். இங்கு மூன்று விதமான வகைப்படுத்தும் முறையை காணலாம். ஒன்று, தரவுத்தளத்தில் உள்ள தகவலின் அடிப்படையில். இரண்டு, தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் துறையின் அடிப்படையில். மூன்று, தரவுத்தளத்தின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில். முதல் இரண்டு வகையை இங்கு சுறுக்கமாக காணலாம். தரவுத்தளத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் நூலோதி, கோப்புகள்-உரை, புள்ளியியல் தரவுத்தளங்கள் அல்லது பல்லூடகத் தரவுத்தளங்கள் என்று வகைப்படுத்தலாம். தரவுத்தளங்களை பயன்படுத்தும் துறையின் அடிப்படையில் இசை தொகுப்பு, கணக்கு வைப்பு, படத்தொகுப்பு, வங்கி, காப்பீடு என்று வகைப்படுத்தலாம். தரவுத்தளங்களை அதன் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் வகைப்படுத்த முடியும். இந்த பகுதியில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பல்வேறு தரவுத்தள வகைகளை காணலாம்.
நினைவக தரவுத்தளம் என்றால் அணைத்து தரவுகளும் பிரதான நினைவகத்திலேயே சேமித்து வைக்கப்படும். நினைவகத்தில் சேமிக்கும் எதுவும் கணினியை அணைத்தால் அழிந்துவிடும். எனவே தரவுகளின் ஒரு நகல் எளிதில் அழியாத வன்தட்டுகளிலும் சேமிக்கப்படும். பிரதான நினைவகத்தில் தரவுகளை சேமிப்பதால் இவ்வகையான தரவுத்தளங்கள் மிகவும் வேகமாக செய்படக்கூடியது. தொலைத்தொடர்பு சேவைவில் பயன்படுத்தப்படும் கருவிகள் இத்தகைய தரவுத்தளங்களை பயன்படுத்துகிறது. [8]சாப் ஆனா பணித்தளம் என்பது பரபரப்பாக பேசப்படும் ஒரு நினைவக தரவுத்தளம். மே 2012 இல் ஆனா பணித்தளம் நூறு டெராபைட்டு பிரதான நினைவகத்தைக் கொண்ட ஐபியெம்மின் கணினிகளில் இயங்கியது.
சுறுசுறுப்பான தரவுத்தளம்
மேகம் தரவுத்தளம்
தரவுகள் தேக்ககம்
தரவுத்தள வடிவமைப்பும் படிமங்களும்
தரவுத்தள படிமங்கள்
பார்வைகள்
தரவுத்தள மொழிகள்
ஏன் விரிதாளிலோ சாதாரண கோப்பாகவோ சேமிக்க இயலாது?
தரவின் தரத்தை உறுதிப்படுத்த இயலாது. மீள்வரும் தரவுகள் (Redudant Data), தரவுகள்
தரவின் அளவு
தரவை மீளப்பாவித்தல், தரவை வடிக்கட்டி எடுத்தல், தரவுத் தேடல்கள்.
அனுமதியளிக்காத பயனர்கள் கெட்டமுறையான அணுக்கத்தில் இருந்து பாதுக்காத்துக் கொள்ளும்.
தரவு கெடாமல் பாதுகாத்துக்கொள்ளுகிறது.
தரவுதளம் - வகைகள்/வடிவங்கள் (Models of Database)
தட்டை வடிவம் (Flat Model)
படிவரி வடிவம் (Hierarchical Model)
பணிவலை வடிவம் (Network Model)
தொடர்புசால் வடிவம் (Relational Model)
பரிமாண வடிவம் (Dimensional Model)
பொருள் வடிவம் (Object Model)
தரவுதளம் - முக்கியக் கூறுகள்/பொருட்கள் (Main Components/objects of a DBMS)
அட்டவணை
பார்வைகள் (Views)
சுட்டுவரிகள் (Indexes)
கட்டுவிதிகள் (constraints)
வில்விசைகள் (triggers)
செயல்கூறுகள் (procedures)
பொதியங்கள் (packages)
பயனர்கள் (users)
பதவிகள் (roles)
மறுபெயர்கள் (synonyms)
எண்தொடர்கள் (sequences)
பரிமாற்றம் (Transaction)
மேற்கோள்கள்
↑Tsitchizris, D. C. and F. H. Lochovsky (1982). Data Models. Englewood-Cliffs, பிரின்டைசு-ஆல்.
↑Raul F. Chong, Michael Dang, Dwaine R. Snow, Xiaomei Wang (3 July 2008). "Introduction to DB2". பார்க்கப்பட்ட நாள் 17 March 2013.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link). இந்த கட்டுரையில் டிபி2 பதிப்பு 9 -க்கு மட்டுமே 750 மனிதர்கள் 5௵ (வருடம்) உழைத்தார்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது.
↑C. W. Bachmann (November 1973), "The Programmer as Navigator"(PDF), CACM, archived from the original(PDF) on 2014-03-27, பார்க்கப்பட்ட நாள் 2013-12-01 (Turing Award Lecture 1973)