சிற்றம்பல நாடிகள்

சிற்றம்பல நாடிகள் என்பவர் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் பெரியார்.
இவரைப் பழுதை கட்டிச் சிற்றம்பல நாடிகள் எனவும் கூறுவர்.
இவர் எப்போதும் மாணவர் திருக்கூட்டத்தோடு வாழ்ந்துவந்தார்.

  • வேளாளர் குலம்
  • சீரை என்னும் சீர்காழிப் பகுதியிலுள்ள வேளைநகர் என்னும் புள்ளிருக்குவேளூர் இவரது ஊர்.
  • சீர்காழியில் வாழ்ந்த ‘கங்கை மெய்கண்டார்’ என்பவர் இவரது ஆசிரியர்.
  • தில்லைச் சிற்றம்பலத்தையே இவர் நாடியதால், இவர் தம் நாடித்துடிப்பாகக் கொண்டிருந்ததால், ‘சிற்றம்பல நாடிகள்’ எனப் போற்றப்பட்டார்.

கதை

ஒருநாள் இவரது சமையல்காரன் தன்னையறியாமல் வேப்பெண்ணெய் விட்டு சமைத்துவிட்டான். உண்ணும்போது இவரும் இவருடன் இருந்த திருக்கூட்டமும் வேறுபாடு தெரியாமல் உணவு உண்டனர். கண்ணப்பர் என்னும் ஒருவர் மட்டும் குமட்டினார். உடனே நாடிகள் “நம் திருக்கூட்டத்தில் பக்குவம் இல்லாதவர் இருப்பது தகுதியோ” என்றார். அது கேட்ட கண்ணப்பர் நாணித் தாமே கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்.[1]

சித்தர் காடு

சிற்றம்பல நாடிகள் தமக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, தானும் தன் திருக்கூட்டத்தாரும் சித்திரை திருவோண நாளில் குழியில் இறங்கப்போவதாக அறிவித்தார். அவர் விருப்பப்படி அவ்வூர் அரசன் அவர்களுக்கு 63 குழிகள் அமைத்துத் தந்தான். குறித்த நாளில் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் 63 பேரும் குழியில் இறங்கினர். குழி மூடப்பட்டது. வேப்பெண்ணெய்க்குக் குமட்டிய கண்ணப்பர் அங்கு வந்தார். ஒரு பாடல் பாடித் தன்னையும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிப் பாடினார். அவர் பாட்டு:
ஆண்டகுரு சிற்றம் பலவா அடியேற்கா
மீண்டும் எழுந்தருள வேண்டாவோ – நீண்டமால்
ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியைப்
பூரணமாய் வையாத போது.

உடனே சிற்றம்பல நாடிகள் சமாதி திறந்தது. நாடிகள் கண்ணப்பரைத் தன் மடியில் ஏற்றுக்கொண்டு கல்லறையானார்.[2] இந்த இடம் இப்போது மயிலாடுதுறைக்கு மேற்கே சித்தர்காடு எனப் பெயர் பெற்றுள்ளது. இவரது சமாதி ஒரு கோயிலாகக் கட்டப்பட்டுள்ளது.

நூல்கள் (சிற்றம்பல நாடிகள் இயற்றியவை)

  1. இரங்கல் மூன்று
  2. சிவப்பிரகாசக் கருத்து
  3. சிற்றம்பலநாடி கட்டளை
  4. ஞானப் பஃறொடை
  5. திருப்புன்முறுவல்
  6. துகளறுபோதம்
  7. சிற்றம்பலநாடி சாத்திரக்கொத்து என்பது ஒரு தொகுப்பு நூல். இதில் சிற்றம்பல நாடிகள் இயற்றியனவும், இவரது மாணாக்கர்கள் இயற்றியனவுமானிய சில நூல்கள் தொகுப்பாக்கித் தரப்பட்டுள்ளன.

நூல்கள் (சிற்றம்பல நாடிகளின் மாணாக்கர் இயற்றியவை)

  1. அறிவானந்த சித்தியார்
  2. அனுபூதி விளக்கம்
  3. சிற்றம்பல நாடிகள் கலித்துறை
  4. சிற்றம்பலநாடி பரம்பரை
  5. திருச்செந்தூர் அகவல்
  6. சிற்றம்பல நாடி தாலாட்டு
  7. சிற்றம்பல நாடி வெண்பா
  • சிற்றம்பல நாடி தாலாட்டு, சிற்றம்பல நாடி வெண்பா ஆகிய இரண்டு நூல்களும் சிற்றம்பல நாடிகளின் நூல்கள் அடங்கிய 'சாத்திரக் கொத்து' நூலில் காணப்படவில்லை. எனவே இவை இரண்டும் இவரது மாணவர் சம்பந்த பண்டாரம் என்பவரால் எழுதப்பட்டது எனத் தெரிகிறது.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. இந்தக் கதை புலவர் புராணத்தில் வேறு வகையாகச் சொல்லப்படுகிறது.
  2. வெள்ளியம்பலத் தம்பிரான் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பழம்பாடல் ஒன்றும் இதனைக் குறிப்பிடுகிறது.
    முத்தர் அறுப்பத்து மூவர் பணிந்தேத்தும்
    சித்தர்வனம் தில்லைச்சிற் றம்பலவா – பத்தர்
    பவ இருளை நீக்கியருள் பானுவே துய்ய
    தவ வடிவே நின்தாள் சரண்.
    தண்டபாணித் தேசிகர் தம் ‘புலவர் புராணம்’ என்னும் நூலில் இதனை 27 பாடல்களில் பாடியுள்ளார்.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!