சார்லசு புரூக் (ஆங்கிலம்: Charles Brooke அல்லது Charles Anthoni Johnson Brooke; மலாய்: Raja Putih Charles Brooke) (பிறப்பு: 3 சூன் 1829 – இறப்பு: 17 மே 1917), என்பவர் சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா எனும் புரூக் பரம்பரையில் இரண்டாவது இராஜாவாக சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்; 3 ஆகஸ்டு 1868 தொடங்கி 17 மே 1917 வரையில் 49 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.[1]
வெள்ளை இராஜா, (White Rajahs அல்லது Rajah of Sarawak) என்பது சரவாக் மாநிலத்தில், சரவாக் இராச்சியம் எனும் ஆட்சியை நிறுவிய ஒரு பிரித்தானியக் குடும்பத்தின் வம்ச முடியாட்சி. அதுவே ஒரு முன்னாள் மன்னராட்சி.
1840-ஆம் ஆண்டுகளில், போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியம் ஆட்சி செய்தது.
வரலாறு
சார்லசு புரூக் இங்கிலாந்து சோமர்செட் (Somerset) எனும் பகுதியில் பிறந்தவர். தந்தையாரின் பெயர் சார்லஸ் அந்தோனி ஜான்சன் (Charles Anthoni Johnson). தாயாரின் பெயர் எம்மா பிரான்சிஸ் ஜான்சன் (Emma Frances Johnson). எம்மா பிரான்சிஸ், சரவாக்கின் முதல் இராஜாவான ஜேம்ஸ் புரூக்கின் இளைய தங்கை ஆவார்.
சார்லஸ் புரூக், இங்கிலாந்து சோமர்செட், குரூகெர்ன் கிராமர் பள்ளியில் (Crewkerne Grammar School) படித்தார். பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் அரசக் கடற்படையில் சேர்ந்தார். 1852-இல் சரவாக்கிற்கு வந்தார்.
ஜேம்சு புரூக் இறப்பு
1853 மற்றும் 1868-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சார்லஸ் புரூக், சரவாக்கின் துவான் மூடா பதவியில் இருந்தார். 1868-ஆம் ஆண்டில் சரவாக் ராஜா என்கிற பட்டத்தைப் பெற்றார்.[2] பின்னர், லுண்டு எனும் கூச்சிங் பிரிவில் ஆளுநர் பதவியை (Resident at Lundu) ஏற்றார்.
1865-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக், தன் வாரிசாக சார்லஸ் புரூக்கை சரவாக் இராச்சியத்தின் ஆளுநராக நியமித்தார். ஜேம்சு புரூக் 1868 சூன் 11-ஆம் தேதி, 65-ஆவது வயதில் இங்கிலாந்தில் காலமானார்.
1869 அக்டோபர் 28-ஆம் தேதி இங்கிலாந்தில் சார்லஸ் புரூக் - மார்கரெட் ஆலிசு (Margaret Alice Lili de Windt) திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மார்கரெட் ஆலிசு, சரவாக்கின் ராணி (Ranee of Sarawak) எனும் பட்டத்திற்குத் தகுதி உயர்த்தப் பட்டார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள்.
சார்லஸ் புரூக் ஏற்கனவே டாயாங் மஸ்தியா பிந்தி அபாங் அயிங் (Dayang Mastiah binti Abang Aing) எனும் மலாய்ப் பெண்ணைத் திருமணம் செய்து இருந்தார். அவர்களுக்குப் பிறந்தவர் தான் எஸ்கா புரூக்.
பின்னர் இவர் (எஸ்கா புரூக்), வில்லியம் டேகின் (Rev. William Daykin) எனும் பாதிரியாரால் தத்து எடுக்கப்பட்டார். கனடாவுக்குச் சென்றார். அங்கு தன் பெயரை புரூக்-டேகின் (Brooke-Daykin) என்று மாற்றிக் கொண்டார்.[3]
சரவாக் எல்லைகளை விரிவுபடுத்துதல்
சார்லஸ் வைனர் புரூக் தனது மாமா தொடங்கிய வேலைகளைத் தொடர்ந்தார். வர்த்தக வளர்ச்சியை ஊக்குவித்தல்; சரவாக் எல்லைகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றில் தீவிரம் காட்டினார்.
திருட்டு, அடிமைத்தனம் மற்றும் மனித தலை வேட்டை (Headhunting) ஆகியவற்றை அடக்கினார். 1891-இல் சார்லஸ் வைனர் புரூக், போர்னியோவில் முதல் அருங்காட்சியகமான சரவாக் அருங்காட்சியகத்தை(Sarawak Museum) நிறுவினார்.[4]
1903-ஆம் ஆண்டில் ஓர் ஆண்கள் பள்ளியை நிறுவினார். இது 'அரசு லே பள்ளி' (Government Lay School) என்று அழைக்கப்பட்டது. அங்கு மலாய்க்கார மாணவர்கள் மலாய் மொழியில் கற்பிக்கப் பட்டார்கள்.[5]
பிரிட்டன் அரசாங்கத்தின் பாதுகாப்பு நாடு
சார்லஸ் வைனர் புரூக் இறக்கும் போது, பிரிட்டன் அரசாங்கம் அதன் பாதுகாப்பு நாடு எனும் தகுதியைச் சரவாக்கிற்கு வழங்கி இருந்தது. அந்தக் கட்டத்தில், சரவாக்கில் ஒரு நாடாளுமன்ற அரசாங்கம் செயல்பட்டது. ஒரு தொடருந்து சேவையும் இருந்தது. அத்துடன் எரிபொருள் எண்ணெயும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.
சரவாக்கை ஆட்சி செய்த மூன்று வெள்ளை இராஜாக்களும் இங்கிலாந்தின் டார்ட்மூர் (Dartmoor), ஷீப்ஸ்டோர் கிராமத்தில் உள்ள ஷீப்ஸ்டர் தேவாலயத்தில் (Sheepstor Church) அடக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
↑'The White Rajahs of Sarawak - Dynastic Intrigue and the Forgotten Canadian Heir' by historian Cassandra Pybus, 1996, Douglas & McIntyre, Vancouver/Toronto, பன்னாட்டுத் தரப்புத்தக எண்1-55054-603-1
Pybus, Cassandra (1996). The White Rajahs of Sarawak: Dynastic Intrigue and the Forgotten Canadian Heir. Vancouver: Douglas & McIntyre Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்1-55054-603-1.