கோடிக்கரை அல்லது கோடியக்கரை (Point Calimere) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியாகும். இது காலிமர் முனை அல்லது கள்ளி மேடு (Point Calimere)எனவும் அழைக்கப்படுகிறது.
காவிரி கழிமுகப்பகுதி (டெல்டா)வில் கடற்கரைக்கு செங்குத்தாக அமைந்துள்ளது.இங்கிருந்த வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால கலங்கரை விளக்கம் 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது அழிபட்டது.
வேதாரண்யம் காடுகள்
இங்குள்ள சதுப்புநிலக் காடுகள்,வேதாரண்யம் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன,கிழக்கு தக்காணத்தின் உலர்பசுமை காடுகளில் எஞ்சியிருப்பதாகும். கோடிக்கரை சரணாலயம் வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக கொண்டுள்ளது.
உப்பு ஏரிகள்
சூன் 13, 1967ஆம் ஆண்டு 24.17 சதுர கிமீ பரப்பில் அமைக்கப்பட்ட இதற்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராஜாமடம் வரை சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள் இரண்டு இடங்களில் உப்பங்கழிகளாக கடல் நீர் புகுந்து உப்பு ஏரியாக 30 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலத்துக்கு நிற்கின்றது. இந்த உப்பு ஏரிகளில் முத்துப்பேட்டை, திருத்துறை பூண்டி மற்றும் மேல்மருதூர் பகுதியிலிருந்து மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன.
குளிர்கால வரவிகள்
1988ஆம் ஆண்டு தலைஞாயிறு பாதுகாக்கப்பட்ட காடுகளையும் இணைத்து 377 சதுர கிமீ பரப்பிற்கு விரிவாக்கப்பட்டது. குளிர்கால வரவிகளுக்கு தகுந்த இடமாதலால் பல பறவைகள் இங்கு வருகின்றன. [1] இங்குள்ள உப்பங்கழிகளில் சிக்கும் கடல்வாழினங்கள் குளிர்கால பறவைகளுக்கு உணவாக அமைகின்றன. ஆயினும் விவசாய நிலங்களிலிருந்தும் மீன்பண்ணைகளிலிருந்தும் கலக்கும் உயிர்கொல்லி மருந்துகளின் எச்சங்கள் இச்சூழலில் கலந்து இப்பறவைகளின் சதைகளிலும் காண முடிகிறது.[2]
கருமான்கள், காட்டுப் பன்றிகள்
இங்கே உள்ள வன விலங்குச் சரணாலயத்தில் பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன.
இராமர் கால்தடங்கள்
கோடிக்கரையின் முனையின் உயரமான இடம் 4 மீட்டர் உயரமுள்ளது. இதனை இந்துதொன்மவியலில்இராமாயணத்தில்இராமர் இங்கிருந்து இராவணனுடன் போரிட்டதாகவும் அவரது கால்தடங்கள் காணப்படுவதகவும் குறிப்பிடுகிறது.
இடைக்கால துறைமுகம்
கோடியக்கரை பகுதியானது இடைக்கால சோழர்கள் காலத்தில் துறைமுகமாக விளங்கியது. இங்கிருந்து சீனா, கடாரம் போன்ற நாடுகளுடன் வணிக தொடர்பு இருந்துள்ளது. இதற்கு சான்றாக பொ.ஆ.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மட்கலன்களின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றொரு சான்றாக இருப்பது முதலாம் பராந்தக சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் ஆகும். கலங்கரை விளக்கத்தின் உச்சியில் விறகு கொண்டு தீ மூட்டி அவ்வழியே செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டியது. இது சுனாமிக்கு முன் சிதளம் அடைந்த நிலையில் 15 அடி உயரம் வரை இருந்தது. 2004 ஆம் ஆண்டு சுனாமியில் பெரும் சேதத்தை அடைந்து இப்போது எஞ்சிய பகுதிகளை காணலாம். கோடியக்கரை துறைமுகமானது சோழர்கள் காலத்திற்கு பின் கலையிழந்தது போனது. பின்னாளில் பயன்பாடு இல்லாமல் அழிந்து போனது.
↑Sethuraman, A and AN Subramanian (2003). "Organochlorine residues in the avifauna of Tamil Nadu (Southeast coast of India)". Chemistry and Ecology19 (4): 247–261. doi:10.1080/02757540310001596843.