குண்டுவீச்சு வானூர்தி அல்லது குண்டுதாரி (bomber) என்பது ஒரு படைத்துறை வானுர்தியாகும். இது தரை மற்றும் கடல் சார்ந்த இலக்குகளை குண்டு வீசி தாக்கும்படி வடிவமைக்கப்பட்டதாகும். குண்டுதாரி விமானமானது வெடிகுண்டுகள், ஏவுகணைகள் மற்றும் நீரேவுகணைகளைக் கொண்டு இலக்குகளைத் தாக்கும் திறம் படைத்தவையாகும். இவை தந்திரோபாய குண்டுதாரி மற்றும் உத்திசார்ந்த குண்டுதாரி என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படும்.
வகைப்பாடு
தந்திரோபாய குண்டுதாரி
தந்திரோபாய குண்டுவீசுதல் என்பது எதிரியின் போர்த்திறனை நசுக்கும் பொருட்டு, நெடுந்தூர குண்டுவீசும் குறிக்கோளுக்காகவே வடிவமைக்கப்பட்ட கனரக குண்டுதாரிகளைக் கொண்டு தந்திரோபாய இலக்குகளான விநியோகத்தளங்கள், பாலங்கள், தொழிற்கூடங்கள், கப்பல்கூடங்கள் மற்றும் நகரங்களைத் தாக்கி எதிரியை நிலைகுலைய செய்வதாகும். இந்தத் தாக்குதலுக்காகப் பயன்படும் குண்டுதாரிகள், தந்திரோபாய குண்டுதாரிகள் வகையைச் சார்ந்ததாகும்.
தற்போது செயல்பாட்டில் இருக்கும் அணுஆயுதமேந்திய தந்திரோபாய குண்டுதாரிகள்:
உத்திசார்ந்த குண்டுவீசுதல் என்பது எதிரியின் படைகளைத் தாக்கும்படி அல்லது எதிரியின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் பொருட்டு, சிறியரக விமானங்களைக் கொண்டு குறைந்த தூரத்திலிருக்கும் தரைப்படை அல்லது கப்பற்படையின் மீது குண்டு வீசுவதாகும். மற்ற விமான ரகங்களான இலகுரக குண்டுதாரி, நடுத்தர குண்டுதாரி, பாய்விறக்க குண்டுதாரி, சண்டை வானூர்தி, விலக்கும் வானூர்தி, தாக்குதல் வானூர்தி, பன்முகப்போர் விமானம் போன்றவையும் உத்திசார்ந்த குண்டுதாரியின் வேலையைச் செய்வதால், இவைதான் உத்திசார்ந்த குண்டுதாரி என தனியே பிரித்து இனங்காண இயலாது.
வரலாறு
உலகின் முதல் வான் வழி குண்டு தாக்குதல், 1911 ஆம் ஆண்டு லிபியாவில் நடந்த இத்தாலிய-துருக்கிய போரின் போது இத்தாலிய படைத்தளபதி சீலியோ கவோட்டியால் நடத்தப்பட்டது.[1] அவர் ஓட்டிய விமானம் ஒரு குண்டுதாரியாக இல்லாதபோதும், தான் வைத்திருந்த கை-வெடிகுண்டை வைத்து அன்று அவர் நடத்திய தாக்குதல் ஒரு பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது.
முதல் குண்டுதாரிகள்
1913 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இத்தாலிய காப்ரோனி கா 30 மற்றும் பிரித்தானிய பிரிஸ்டால் டீ.பி.8 ஆகியவையே முதல் பிரத்யேக குண்டுதாரி விமானங்களாகும்.[2] பிரிஸ்டால் டீ.பி.8 ஆனது மொத்தமாகவோ அல்லது தனித்தனியகவோ வீசப்படகூடிய 4.5 கிலோ எடை கொண்ட குண்டுகளை ஏந்திச் செல்லும் உருண்டை வடிவ குண்டுதாங்கியைக் கொண்டது.[3]
இரண்டாம் உலகப்போர்
இரண்டாம் உலகப்போரில் குண்டுதாரிகளின் பங்களிப்பு மிகவும் பெரிது. இரண்டாம் உலகப்போரின் தொடக்கமாக கருதப்படும் செப்டம்பர் 1, 1939 அன்று செருமனியின்நாசிப்படை குண்டுதாரிகளைக் கொண்டு போலந்தின் நகரங்களைத் தாக்கியது. அதிலிருந்து போரின் போக்கைத் தீர்மானிப்பது, பெரும்பாலும் குண்டுதாரிகளாகவே இருந்தன. அச்சு நாடுகளும்நேச நாடுகளும் மாறி மாறி குண்டுதாரிகளைக் கொண்டு குண்டுகள் வீசிய வண்ணம் இருந்தன. இவை குண்டுதாரிகள் மேம்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
1945, ஆகத்து 6 அன்று ஐக்கிய அமேரிக்க விமானப்படையின் போயிங் பி-29 அதிபடையரண் ரகத்தைச் சார்ந்த, எனோலா கே என பெயரிடப்பட்ட குண்டுதாரி, சரியாக 9.15[4] மணியளவில் ஹிரோஷிமா என்ற ஜப்பானிய நகரத்தில் "சின்னப் பையன்" என்ற உலகின் முதல் அணுகுண்டை வீசியது. மூன்று நாள் இடைவெளிவிட்டு மீண்டும், ஆகத்து 9 அன்று ஐக்கிய அமேரிக்க விமானப்படையின் போயிங் பி-29 அதிபடையரண் ரகத்தைச் சார்ந்த, பாக்ஸ்கார் என பெயரிடப்பட்ட குண்டுதாரி அடுத்த அணுகுண்டை நாகசாகியின் மீது வீசியது. இதுவே 15 நாட்கள் கழித்து ஜப்பான் சரணடைந்ததற்குக் காரணமாகும்.
நவீன கால குண்டுதாரிகள்
நவீன காலத்தில் குண்டுதாரிகள், தாக்குதல் வானூர்தி, தாக்குதல் குண்டுதாரி ஆகியவற்றின் தனித்தன்மை குறைந்து வருகிறது. ஏறக்குறைய எல்லாத் தாக்குதல் போர்விமானங்களும் குண்டுதாரிகளாகச் செயல்படும்படி வடிவமைக்கப்படுகின்றன. நார்த்தராப் க்ரூமன் B-2 எசுபிரிட்டு குண்டுதாரி போன்றவையே தற்போது அதிநவீனமாக கருதப்படுகிறது. F-16 ரக விமானம் தாக்குதல் வானூர்தி என்றாலும், "குண்டு வண்டி" யாக குண்டுகளை இடமாற்றம் செய்யவும் பயன்படுகிறது.
ருசியாவும் ஐக்கிய அமெரிக்காவும் தங்களது தற்போதைய குண்டுதாரி விமானங்களை மாற்றி புதுவகை குண்டுதாரி விமானங்களை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. ஐக்கிய அமெரிக்காவிற்கு நார்த்தராப் க்ரூமன் B-21 மூலம் தனது விமானப்படையைப் புதுப்பிக்கிறது. 1999 ஆம் ஆண்டு அறிக்கையின்படி ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய குண்டுதாரி விமானங்களில், B-21 ரெய்டர் ரக குண்டுதாரி விமானங்கள் 2020 வரையிலும் ஏனைய வகைகள் 2030 - 2040 துவக்கம் வரை பயன்பாட்டில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.[5][6][7]