இரண்யகர்பன் அல்லது பேரண்ட புருஷன் (Hiranyagarbha) (சமசுகிருதம்): हिरण्यगर्भ) என்பது வேதாந்த சாத்திர நூல்களில், சூக்கும நிலையிலுள்ள, படைப்பிற்கு முற்பட்ட உலகமானது, ஒளிர்ந்து கொண்டிருக்கும் தங்க முட்டைக்கு உவமையாக காட்டப்படுகிறது. பிரபஞ்சத்தை தன்னுடைய கர்ப்பத்தில் வைத்துக் கொண்டிருக்கும், படைப்புத் தொழிலைச் செய்யும் பிரசாபதியான நான்முகன் எனும் (பிரம்மா)வே ஹிரண்யகர்பன் ஆவார்.
சுவேதாஸ்வதர உபநிடத்தில் உள்ள ஒரு மந்திரத்திற்கு ஆதிசங்கரர் எழுதியுள்ள விளக்க உரையில் “ இதமானதும், (விரும்பத்தக்கதும்) ஆனந்தத்தை ஏற்படுத்துவதும், மிகவும் ஒளிர்வதுமான ஞானமானது யாரிடம் முழுமையாகவும், செறிவாகவும் உள்ளதோ அத்தகையவனே ஹிரண்யகர்பன் ஆவான்” என விளக்கியுள்ளார்.
எனவே ஹிரண்யகர்பன் உலகைப் படைப்பவனும் மற்றும் ஞானவடிவினனும் ஆவான். ஞானத்துடன் இச்சையும் (ஆசையும்) இருப்பதால் அவன் இச்சாசக்தி வடிவினனாகவும் இருக்கிறான்.[1][2][3]
உலகத்தை படைக்கும்பொழுது அவனுடைய கிரியா சக்தியானது முதன்மையாகக் காணப்படுவதால் அவன், பிராணன் (பிராண சக்தி) ஆகவும் இருக்கிறான். ஹிரண்யகர்பன், இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்திகளுடன், ஐந்து கோசங்களுள் மூன்று கோசங்களான விஞ்ஞானமய கோசம், மனோமய கோசம் மற்றும் பிராணமய கோசங்களை உபாதியாக பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
உசாத் துணை
- வேதாந்த சாரம் (சுலோகம் 91 முதல் 92 முடிய), நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.