வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் கொடுப்பனவுகளை எளிதாக்குதல் மற்றும் இந்தியாவில் அந்நிய செலாவணி சந்தையின் ஒழுங்கான மேம்பாடு மற்றும் பராமரிப்பை ஊக்குவிப்பதற்காக அந்நிய செலாவணி தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து திருத்துவதற்கான ஒரு சட்டம்.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (Foreign Exchange Management Act, 1999 (FEMA), "வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் கொடுப்பனவுகளை எளிதாக்குதல் மற்றும் அந்நிய செலாவணியின் ஒழுங்கான மேம்பாடு மற்றும் பராமரிப்பை ஊக்குவிப்பதற்கான நோக்கத்துடன் அந்நியச் செலாவணி தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்து, திருந்திய இச்சட்டத்தை 29 டிசம்பர் 1999 அன்று இந்திய நாடாளுமன்றம் இயற்றியது.[1] இது 1973ஆம் ஆண்டின் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்திற்கு (FERA) பதிலாக நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் நீட்சியாக பணமோசடி தடுப்பு சட்டம், 2002 இயற்றப்பட்டது. இந்த இரண்டு சட்டங்களை மீறுபவர்களை கண்காணித்து, வழக்கு தொடுக்க அமலாக்க இயக்குனரகத்திற்கு அதிகாரம் உள்ளது.
விளக்கம்
பிற சட்டங்களைப் போலல்லாமல், இச்சட்டத்தின் விதிகள் மிகவும் கடுமையானதாகும். அந்நிய செலவணி மோசடி வழக்கில் சிக்கிய ஒரு நபர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் வரை குற்றவாளியாகக் கருதப்படுவார். அதேசமயம் மற்ற சட்டங்களின் கீழ் அவர் குற்றவாளி அரசு தரப்பில் என்று நிரூபிக்கப்படும் வரை ஒரு நபர் நிரபராதி என்று கருதப்படுவார்.[2]
இச்சட்டம் இந்திய ரிசர்வ் வங்கி அந்நிய செலாவனி பரிவர்த்தனைகள் தொடர்பான விதிமுறைகளை இயற்றுவதற்கும், இந்திய அரசு அந்நிய வர்த்தகக் கொள்கைக்கு ஏற்ப, அந்நியச் செலாவணி தொடர்பான விதிகளை இயற்றுவதற்கும் உதவுகிறது.
அடிப்படைக் கொள்கை
இச்சட்டத்தின் கீழ் அனைத்து நடப்பு கணக்குப் பரிவர்த்தனைகளும் வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டாலன்றி அனுமதிக்கப்படும். இச்சட்டத்தின் கீழ் வெளிப்படையாக அனுமதிக்கப்படாவிட்டால், அனைத்து மூலதனக் கணக்குப் பரிவர்த்தனைகளும் முடக்கப்படும் என்பதும் பொதுவான கொள்கையாகும். (இச்சட்டத்தின் 5 மற்றும் 6 பிரிவுகளைப் பார்க்கவும்)
"மூலதன கணக்கு பரிவர்த்தனை" என்பது, இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் இந்தியர்களின் சொத்துக்கள் அல்லது பொறுப்புகள் மற்றும் பரிவர்த்தனைகள் உள்ளடங்கும். இது பொதுவாக பங்குகள், மானியங்கள் மற்றும் கடன் போன்ற மூலதன வரவுகளைக் குறிக்கிறது. நாட்டிற்குள் வரும் முதலீடுகள் 'வெளிநாட்டு நேரடி முதலீடு' (FDI) எனப்படும். மூலதனக் கடன் என்பது வெளி வணிகக் கடன்கள் (ECB) ஆகும். பங்கு வெளியேற்றங்கள் என்பது 'வெளிநாட்டுக்குச் செல்லும் முதலீடு' ஆகும்.
அன்னிய நேரடி முதலீடு பெறும் அல்லது வெளிச்செல்லும் முதலீட்டைச் செய்யும் எந்தவொரு பெரு நிறுவனமும் வெளிநாட்டு பொறுப்புகள் மற்றும் சொத்துக்கள் வருடாந்திர அந்நியச் செலாவணி வருவாயை தாக்கல் செய்ய வேண்டும்.
நடப்பு கணக்கு பரிவர்த்தனை என்பது மூலதன கணக்கு பரிவர்த்தனைகள் தவிர மற்ற பரிவர்த்தனைகள் என வரையறுக்கப்படுகிறது. முக்கியமாக வெளிநாட்டு வணிகத்திற்கு பணம் அனுப்புதல், தனிப்பட்ட நபர்கள் பணம் அனுப்புதல், மாணவர்கள் பணம் அனுப்புதல் போன்றவை தொடர்பான பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது [14]