அசோக் மேத்தா (24 அக்டோபர் 1911 பாவ்நகர் - 1984) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சோசலிச அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் ஒரு சோசலிச பிரிவான காங்கிரஸ் சோசலிச கட்சியை உருவாக்க உதவினார். மேலும் இவர் பம்பாய் நகரத்தின் அரசியலிலும் நிர்வாகத்திலும் மிகுதியான ஆர்வமிக்கவராக இருந்தார்.
வாழ்க்கை
ஆரம்ப வாழ்க்கை
அசோக் மேத்தா 1911 அக்டோபர் 24 ம் நாள் குசராத்தி எழுத்தாளரான ரஞ்சித்ராம் மேத்தாவுக்கு மகனாக பாவ்நகரில் பிறந்தார். இவர் அகமதாபாத் மற்றும் சோலாப்பூர் போன்ற ஊர்களில் தனது துவக்கக் கல்வியை முடித்தார். பின்னர் இவர் 1931 இல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார், அங்கு இவருக்கு சுதேசி இயக்கத்தின் அறிமுகம் ஏற்பட்டது.[1][2][3]
பணிகள்
1932 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டதற்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் மேத்தா தீவிரமாக ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். இதுபோன்ற இவரது செயல்பாடுகளால் இவருக்கு ஐந்து முறை கடுஞ் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.[3][4]
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் பம்பாயில் தொழிற்சங்கங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டார். மேலும் இவர் ஐ.என்.டி.யூசி தொழிற் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராவார்.[5]
1946 முதல் 1947 வரை பம்பாய் நகரின் மேயராக பணியாற்றினார். 1950 களின் துவக்கத்தில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற மேத்தா, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனது அனுபவங்களையும், சோசலிச சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் குறித்தும் பல நூல்களை எழுதினார். 1950 இல், இவர் சோசலிச கட்சியின் எட்டாவது அமர்வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
அசோக் மேத்தா சோசலிச கட்சியின் நிறுவனர் உறுப்பினர் ஆவார். 1952 செப்டம்பரில், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி ஆகியவை இணைந்து பிரஜா சோசலிச கட்சியாக (PSP) உருவானது. இந்த இணைப்பில் முதன்மையான பாத்திரத்தை ராம் மனோகர் லோகியா மற்றும் மேத்தா ஆகியோர் வகித்தனர்.[6] அசோக மேத்தா புதிய கட்சியின் பொதுச் செயலாளராக ஆனார்.[7] இவர் 1959-1963 ஆண்டு காலகட்டத்தில் பிரஜா சோசலிசக் கட்சியின் தலைவராக இருந்தார்.
பயன்பாட்டுப் பொருளாதார ஆய்வுக்கான தேசிய பேரவை (என்சிஏஇஆர்) என்ற உயர் ஆய்வு மையத்தை தில்லியில் நிறுவினார்.[8] இது இந்தியாவில் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்காக உருவான முதல் சுதந்திர அமைப்பாக இது 1956இல் நிறுவப்பட்டது. இவர் 1963 இல், மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவராக பணியாற்றினார். 1964 இல் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.[3]
பிராஜா சோசலிச கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இவர் 1964 இல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1969 இல் காங்கிரசானது காங்கிரஸ் (இ) என்றும் ஸ்தபன காங்கிரஸ் என இரண்டாக பிளவு பட்டபோது இந்திரா காந்திக்கு எதிரான பிரிவான ஸ்தாபனா காங்கிரசில் தங்கிவிட்டார்.
இவர் 1954-1957 மற்றும் 1957-1962 காலகட்டத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நான்காவது மக்களவைக்கு 1967-1971 காலகட்டத்தில் பண்டாராவில் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] 3 ஏப்ரல் 1966 முதல் 26 பிப்ரவரி 1967 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[3][10]
1975 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் நெருக்கடி நிலையின் போது கைது செய்யப்பட்ட இவர், அரியானாவின் ரோக்தாக் சிறையில் அடைக்கப்பட்டார்.[4]
பஞ்சாயத்து ராஜ் குறித்து ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைக்க 1977இல் ஜனதா அரசு அமைத்த குழுவின் தலைவராக அசோக் மேத்தா இருந்தார்.
1984 இல் அவர் இறந்தார்.
முக்கிய படைப்புகள்
பின்வரும் குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியுள்ளார்:
- Economic Planning in India
- Who Owns India? (1950)
- Democratic Socialism (Bharatiya Vidya Bhavan)
- Studies in Socialism (Bharatiya Vidya Bhavan)
- Reflections on Socialist Era (C. Chand and Co.)
மேற்கோள்கள்